சிங்கள மக்களுக்கு உள்ள அதே அபிமானம் தமிழ் மக்களுக்கும் உண்டு! நாடாளுமன்றத்தில் சரவணபவன் பேச்சு

Report Print Sumi in அரசியல்

சிங்கள மக்களுக்கு எவ்வாறு தங்கள் கலாசார அடையாளங்கள் மீது அபிமானம் உண்டோ அவ்வாறே தமிழ் மக்களுக்கும் அபிமானம் உண்டு என தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சரவணபவன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமனத்தில் ஆற்றிய உரையின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். அங்கு தொடர்ந்தும் பேசிய அவர்,

சாதாரண அடிமட்ட மக்களின் தேவைகளையும் உணர்வுகளையும் நன்கு புரிந்துகொண்டு அவர்களின் விமோசனத்துக்காக அர்ப்பணிப்புடன் பணியாற்றிய முன்னாள் ஜனாதிபதி அமரர் ரணசிங்க பிரேமதாச அவர்களின் மகனான இன்றைய வீடமைப்பு நிர்மாணத்துறை அமைச்சர் அவர்கள் தனது தந்தையாரின் வழியில் பணியாற்றி வருவதை எமது மக்களின் சார்பில் மகிழ்ச்சியுடன் வரவேற்கிறேன்.

அப்படியான ஒருவர் எமது மக்கள் சந்திக்கும் கலாசார இடர்பாடுகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிவர்த்திக்கத் திறந்த மனதுடன் பணியாற்றுவார் என்கிற நம்பிக்கையின் அடிப்படையில் இங்கு சில விடயங்களை முன்வைக்க விரும்புகின்றேன்.

ஒவ்வொரு இனத்துக்கும் அதன் மொழியைப் போலவே பொருளாதார வாழ்வைப் போலவே, பாரம்பரிய வாழிடத்தைப் போலவே, கலாசாரமும் அதன் தனித்துவத்தை வெளிப்படுத்தும் ஒரு அம்சமாகும். அவ்வகையில் தமிழ் மக்களுக்கும் ஒரு தொன்மை வாய்ந்த பெருமைக்குரிய பாரம்பரியம் உண்டு. அப்படியான நிலையில் எமது கலாசாரத்தின் மீது திட்டமிட்டு நடத்தப்படும் ஆக்கிரமிப்பு நடவடிக்கைகள் எமது இனத்தின் இருப்பையே கேள்விக்குள்ளாக்கும், கண்டிக்கத்தக்க, தடுத்து நிறுத்தப்படவேண்டிய அத்து மீறல்களாகும்.

தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் என்பன எமது கலாசார மையங்களாக விளங்கும் ஆலயங்கள் அமைந்துள்ள வளாகங்களை ஆக்கிரமித்து அவற்றைப் பௌத்த பூமிகளாகக் காட்டி வரலாற்றையே மாற்றியமைக்க முற்படுகின்றன. முல்லைத்தீவு, மணலாறு பகுதிகளில் 30 இடங்களை அளவீடு செய்யும்படி தொல்பொருட் திணைக்களம் நில அளவைத் திணக்களத்திடம் கோரியுள்ளது.

இவற்றில் நெடுங்கேணி வெடுக்குநாறி மலை லிங்கேஸ்வரர் ஆலயம், நீராவிப்பிட்டி பிள்ளையார் ஆலயம், குருந்தமணல் விநாயகர் ஆலயம், ஒட்டிசுட்டான் தான்தோன்றிஈஸ்வரர் ஆலயம் என்பன உள்ளடங்கும். வெடுக்குநாறி, குருந்தூர், நீராவிப்பிட்டி என்பன பௌத்த வழிபாட்டிடங்கள் எனத் தொல்பொருட் திணைக்களம் உரிமை கொண்டாடுகின்றது.

சிவலிங்க வழிபாடு என்பது தமிழர்களால் வரலாற்றுக்கு முன்னைய காலம்தொட்டு பேணப்பட்டு வந்த ஒரு மரபுசார் வணக்க முறையாகும். அதேபோன்று தமிழ் மக்கள் விவசாய முயற்சி முதற்கொண்டு வேறு எந்த மங்கல நிகழ்வுகளை மேற்கொள்ளும்போதும் பிள்ளையாரை முன்வைத்தே கரம்பிடிப்பர். அதாவது சிவலிங்க வழிபாடு, பிள்ளையார் வழிபாடு என்பன எமது இனத்தின் பாரம்பரிய தொன்மை மிக்க கலாசாரத்துடன் இரண்டறக் கலந்ததாகும்.

அப்படியான நிலையில் எமது வழிபாட்டுத் தலங்களை ஆக்கிரமிப்பது தமிழ் மக்களின் மனதை எவ்வளவு தூரம் புண்படுத்தும் என்பதையும் இதனால் ஏற்படும் கசப்புணர்வு இன நல்லிணக்கத்தை என்றுமே எட்டமுடியாத நிலைமைய உருவாக்கும் என்பதையும் நீங்கள்ஷ புரிந்துகொள்ளவேண்டும். அது மட்டுமல்ல இந்துக்களின் புனித விரதமான சிவராத்திரி இடம்பெறவிருந்த சந்தர்ப்பத்தில் திருகோணமலை திருக்கோணேஸ்வரர் ஆலய வளாகத்தில் அமைந்துள்ள சிவலிங்கம் உடைக்கப்பட்டது.

ஒரு பாதுகாப்புப் பிரதேசத்தில் நடந்த இந்த வன்முறை தொடர்பாக இதுவரை குற்றவாளிகள் கண்டுபிடிக்கப்படவுமில்லை, கைது செய்யப்படவுமில்லை. மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்துக்கு அருகில் ஒரு தனியார் காணியில் புத்த விகாரை அமைக்கப்பட்டுள்ளது. அங்கு பௌத்த மதத்தைச் சேர்ந்த ஒருவர்கூட வாழவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோன்று கடந்த காலத்தில் முனீஸ்வரம் சிவாலயத்திற்கு ராஜகோபுரம் அமைக்கப்பெறுவதற்காக நிலத்தை அகழ்ந்தபோது அங்கு சந்திரவட்டக்கல் காணப்பட்டதால் கோபுர நிர்மாணம் தடைசெய்யப்பட்டதை நாம் மறந்துவிட முடியாது.

விஜயன் இலங்கைக்கு வந்த காலத்திலேயே கேதீஸ்வரம், கோணேஸ்வரம், முனீஸ்வரம், நகுலேஸ்வரம், தென்னீஸ்வரம் ஆகிய வழிபாட்டுத்தலங்கள் அமைந்திருந்தன என்பதை சிங்கள வரலாறுகளே கூறுகின்றன. அப்படியாகத் தமிழ் மக்களின் தொன்மை வாய்ந்த கலாசார வாழ்வுடன் பின்னிப் பிணைந்த இந்த ஆலயங்களின் மீது மேற்கொள்ளப்படும் அச்சுறுத்தல்களும் ஆக்கிரமிப்புக்களும் தடுத்து நிறுத்தப்பட கௌரவ அமைச்சர் அவர்கள் நடவடிக்கை எடுக்கவேண்டும்.

புதிய அரசமைப்பு யோசனைகள் முன்வைக்கப்பட்டபோது பௌத்தத்துக்கு முதலிடம் கோரப்பட்ட அதேநேரத்தில் ஏனைய மதங்களுக்கும் சமமதிப்பு வழங்கப்படும் என்று சொல்லப்பட்டது. பௌத்தத்துக்கு முதலிடம் என்பது இப்படி ஏனைய மதங்களை ஆக்கிரமித்து அச்சுறுத்தி இல்லாதொழிக்கும் அர்த்தத்திலேயே சொல்லப்படுகின்றதா என்கிற அச்சம் காரணமாகவே தமிழ் மக்கள் அதனை எதிர்க்கிறார்கள் என்பதை இந்தச் சபையின் கௌரவ உறுப்பினர்கள் புரிந்துகொள்ளவேண்டும்.

சிங்கள மக்களுக்கு எவ்வாறு தங்கள் கலாசார அடையாளங்கள் மீது அபிமானம் உண்டோ அவ்வாறே தமிழ் மக்களுக்கும் அபிமானம் உண்டு. எனவே தொல்பொருள் திணைக்களம், வனஜீவராசிகள் திணைக்களம் போன்றவை மேற்கொள்ளும் அத்துமீறல்கள் உடனடியாகத் தடுத்து நிறுத்தப்படவேண்டும் என்பதை நாம் வலியுறுத்த விரும்புகின்றேன்.

நாம் ஒரு காலத்தில் கலை இலக்கியத்துறையில் பல சாதனைகளைச் செய்தவர்கள். எமது பாரம்பரிய நாட்டுக்கூத்துக்கள், இசை நாடகங்கள் என்பன தனித்துவம் வாய்ந்தவை. வெறும் பொழுதுபோக்குக்கு மட்டுமல்லாது மக்களுக்கு நல்வழிகாட்டும்வகையிலும் அமைந்தவை. இன்று அவை மெல்ல மெல்ல அழிவடையும் நிலையை நோக்கிப் போய்க்கொண்டிருக்கின்றன.

இப்போதுள்ள ஒரு சில முதியவர்கள் காலம் முடிந்ததும் அடுத்த பரம்பரை அவற்றை முன்னெடுத்துச் செல்லுமா என்பது சந்தேகமாகவே உள்ளது. எனவே எமது கலாசாரத் திணைக்களம் அவற்றைக் கட்டிக்காக்கவும் பேணி வளர்க்கவும் காத்திரமான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும். இளைய தலைமுறையினரிடம் அவற்றைக் கொண்டுசெல்ல பாடசாலை மட்டங்களிலும் கிராமிய மட்டத்திலும் நடவடிக்கை எடுக்கப்படவேண்டும்.

அதேவேளை நவீன நாடகங்கள், குறும்பட உருவாக்கங்கள் என்பன தனிநபர்களின் முயற்சிகளாகவே இடம்பெற்று வருகின்றன. கலையார்வம் காரணமாகக் கலைஞர்கள் தமது சொந்தப் பணத்தைச் செலவு செய்தே இவற்றில் ஈடுபட வேண்டியுள்ளது. அதன் காரணமாக ஆர்வத்தாலும் ஒன்றிரண்டு முயற்சிகளுடன் கைவிடப்படும் நிலையே ஏற்படுகின்றது. அதேபோன்று இலக்கியவாதிகளின் முயற்சிகளும் மேலும் பரிதாபமாகவே அமைந்துள்ளன.

ஒரு படைப்பாளனே எழுத்தாளனாகவும், முதலிட்டு வெளியிடுபவனாகவும், அவற்றைச் சந்தைப்படுத்தியவனாகவும் செயற்படவேண்டியுள்ளது. அப்படி ஒரு படைப்பாளன் தன் உழைப்பைச் செலுத்தினாலும் போட்ட முதலை எடுக்க முடிவதில்லை. அதேவேளையில் மக்களிடம் படைப்புக்கள் சென்றடைவது மிகவும் குறைவானதாகவே உள்ளது.

ஒவ்வொரு மாகாண சபையும் தமது மாகாண எல்லைக்குள் உள்ள பாடசாலை நூலகங்கள், உள்ளுராட்சி சபை நூலகங்கள், சமூக சேவைகள் நிலைய நூலகங்கள் என்பனவற்றிற்கு இலக்கியப் படைப்புக்களையும் கொள்முதல் செய்து வழங்கினால் பல அற்புதமான படைப்புக்கள் வெளிவரும் சாத்தியமுண்டு.

தற்சமயம் மாகாண கலாசார அவை ஐயாயிரம் ரூபா பெறுமதியான நூல்களைக் கொள்முதல் செய்கிறது. 2 லட்சம் 3 லட்சம் ரூபா செலவிட்டு வெளியிடப்படும் ஒரு நூலிற்கு 5 ஆயிரம் ரூபா வழங்குவதன் மூலம் என்ன பயன்கிட்டமுடியும். எனவே கலாசாரத் திணைக்களம் நூலகங்களின் தேவைகளுக்கு ஏற்ற வகையில் நூல்களைக் கொள்முதல் செய்யும் வகையில் நிதி ஒதுக்கப்பட வேண்டுமென அமைச்சரிடம் ஒரு கோரிக்கையை முன்வைக்க விரும்புகின்றேன்.

இதேவேளை, ஒவ்வொரு ஆண்டும் வரவு செலவுத் திட்டத்தின் ஊடாகக் கலாசார அமைச்சுக்கு ஒதுக்கப்படும் நிதியின் பெரும்பகுதி எவ்வாறு செலவிடப்படுகின்றது என்பதை நீங்கள் என்றைக்காவது மீளாய்வு செய்து பார்த்ததுண்டா? கணக்காய்வாளர் நாயகத்தின் அறிக்கையை எடுத்துப் பார்த்தீர்களானால் அது புரியும். அமைச்சின் நிர்வாகச் செலவுகளுக்கும் அமைச்சு நடத்தும் பெரும் நிகழ்வுகளின் நிர்வாகச் செலவுகளுக்குமே செலவிடப்படுகின்றது. அந்த நிதியால் பயனாளிகளுக்கு நேரடியாகக் கடைக்கும் நன்மை என்பது மிகச் சொற்பமே!

இந்த நிலை மாற்றப்படவேண்டும். கலைஞர்கள், எழுத்தாளர்கள் பயனடையத்தக்க வகையில் திட்டங்கள் வகுக்கப்படவேண்டும். பிரமாண்டமான நிகழ்வுகளுக்கான செலவுகள் மட்டுப்படுத்தப்பட்டு கலைஞர்களுக்குப் பயனளிக்கும் வகையில் அது செலவிடப்படவேண்டும்.

முக்கியமாக வறுமையில் வாடக்கூடிய கலைஞர்கள் நாட்டின் சொத்துக்களாகக் கருதப்பட்டு அரசு அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கவேண்டும். கலையையே தமது வாழ்வாதாரமாகவும் வாழ்க்கையாகவும் கொண்டிருக்கக்கூடிய கலைஞர்களுக்கு அரசின் உதவிகள் பன்மடங்கு அதிகரிக்கப்படவேண்டும்.

இன, மதப் பாகுபாடுகளின்றி அனைத்துக் கலைஞர்களும் சமமாக மதிக்கப்பட்டு அரச நிர்வாகத்தால் அணுகப்படவேண்டும். கலைக்காக அர்ப்பணிப்புடன் சேவையாற்றும் அமைப்புக்கள், நிறுவனங்களுக்கு வருடாந்த நிதி உதவி வழங்கும் திட்டத்தையும் அரசு உருவாக்கவேண்டும்.

தமிழ் மக்களாகிய நாம் தனித்துவமான கலாசார பாரம்பரியங்களைக் கொண்டவர்கள் என்ற முறையில் நாம் எமது இன அடையாளத்தைப் பாதுகாப்பதில் உறுதியாக இருப்போம் என்பதையும் இங்கு கூறிக்கொண்டு விடைபெறுகின்றேன் என்றார்.

Latest Offers