புலிகளின் மௌனிப்பிற்குப் பின்னர் கூட்டமைப்பின் முட்டுக் கொடுக்கும் அரசியல்!

Report Print Nesan Nesan in அரசியல்

விடுதலைப் புலிகளின் ஆயுதப் போராட்டம் மௌனித்த பின்பு தமிழ் தேசிய கூட்டமைப்பானது எதிர்க்கட்சியில் இருந்துகொண்டு ஆளும் கட்சிகளுக்கு முட்டுக்கொடுக்கின்றது என பகிரங்க குற்றச்சாட்டு.

கிழக்கு தமிழர் ஒன்றியத்தின் தலைவர் சிரேஸ்ட சட்டத்தரணி தட்சணாமூர்த்தி சிவநாதன் தலைமையில் இன்று நண்பகல் காரைதீவு சண்முகா கலையரங்கத்தில் இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பின் போது அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

இதன்போது பேசிய அவர்,

தமிழ் மக்களின் வாக்குகளை பெற்ற தமிழ் தலைமைகள் அரசிடம் பேரம் பேசி குறைந்தபட்ச அரசியலதிகாரங்களை தமிழ் மக்களுக்குபெற்றுக்கொடுப்பதை தமிழ் தேசிய கூட்டமைப்பு விரும்பவில்லை. இவை தர்மத்திற்கு மாறானவை.

தலைமைகள் என நம்பியிருந்த தமிழ் தேசிய தலைமைகளினால் கிழக்கு மாகாணத்திற்கு எந்தவித நன்மைகளும் கிடைக்கவில்லை. இதனை தமிழ் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர்கள் "நாங்கள் வெறுமனே கை உயர்த்துபவர்களாகவே செயற்படுகின்றோம்" என பகிரங்கமாக ஏற்றுக்கொள்கின்றனர்.

குறிப்பாக கிழக்கு மாகாணத்தில் தமிழர்களின் பூர்வீக நிலங்களில் கல்முனை பிரதேசமும் கேந்திரமானது. இப்பொழுது தமிழர்கள் வாழ்ந்த பிரதேசங்கள் சுருக்கப்பட்டு எந்ந இடத்தில் வரையறுக்கப்பட்டு நிற்கின்றது என்பது யாவரும் அறிந்ததே.

கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகத்திற்கு காணி, நிதி அதிகாரங்களை வழங்கி தரமுயத்துவதில் மாற்று இன அரசியல்வாதிகளுக்கு என்ன சட்ட ரீதியான தடை இருக்கின்றது என்பது புரியாத புதிராகவே இருக்கின்றது.

குறைந்தபட்ச அரசியல் அதிகாரமும் அற்ற அரசியல் பலவீனத்தில் கிழக்கு மாகாணம் இருக்கின்றது. தமிழ் மக்களின் அரசியலதிகாரத்திற்கு தடைபோடுகின்ற அரசியல்வாதிகளுக்கு எமது தமிழ் தலைமைகள் சரியான பதில் வழங்கவில்லை.

2015 மைத்திரி பால சிறிசேன அவர்களை சனாதிபதியாக கொண்டுவருவதில் தொடங்கி இப்போது வரை மூன்று சந்தர்ப்பங்கள் தமிழ் தேசிய கூட்டமைப்பிற்கு பேரம் பேசி அரசியலதிகாரங்களை பெற்றுக்கொடுக்க சந்தர்ப்பம்கிடைத்தும் அரசுகளுக்கு முட்டுக்கொடுக்கும் வேலையைமாத்திரம் கூட்டமைப்பு செய்துவருகின்றது.

தமிழர் தலைமைகள் என மார்தட்டும் கூட்டமைப்பு குறைந்த அரசியலதிகாரத்தை கூட பெற்றுக்கொடுக்க திராணியில்லாது திண்டாடும் போது வடக்கு கிழக்கு இணைந்த அரசில் அதிகாரங்களை எவ்வாறு பெற்றுக்கொடுக்க முடியும்.

நடப்பவை நடக்கட்டும் என அசமந்த போக்குடன் தமிழ் தேசிய கூட்டமைப்பு பார்த்துக்கொண்டிருப்பதால்தான் கிழக்கு மண் மாற்று சமூகத்திடம் பறிபோய் எதிர்கால இருப்புக்கான கேள்ளிவியும் எழுகின்றது.

இதற்கு தீர்வு தமிழ் மக்கள் தங்களை தாங்களே பாதுகாத்து கொள்ள ஒரு பொறிமுறையை வகுத்துக்கொள்ள வேண்டும் . பொறிமுறைகளை வகுக்க கிழக்கு தமிழர் ஒன்றியம் பக்கபலமாக நிற்கும் என்றார்.

Latest Offers