தவறானவர்களுடன் ஜெனிவாவில் வடக்கு ஆளுனர்! அடுத்த நடவடிக்கை பாதுகாப்பு சபையிலா! சுமந்திரன் எம்.பி

Report Print Dias Dias in அரசியல்

தவறான பாதையில் செல்லுகிற ஜனாதிபதியுடைய பிரதிநிதியாக தான் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் செயற்பட்டு வருகிறாரே தவிர, ஜனாதிபதி சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது ஜனாதிபதியின் முகவராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை என தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடக பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினரும் ஜனாதிபதி சட்டதரணியுமான எம். ஏ. சுமந்திரன் தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடந்துக் கொண்டிருக்கக் கூடிய சூழ்நிலையில் இக்கூட்டத்தொடரில் கலந்துக் கொள்வதற்காக இலங்கையில் இருந்து சென்றிருக்கும் எம். ஏ. சுமந்திரன் லங்காசிறிக்கு வழங்கியுள்ள செவ்வியிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தமிழ் தேசிய கூட்டமைப்பு ஐக்கிய நாடுகள் சபையிலே தற்பொழுது பல்வேறுப்பட்ட சந்திப்புக்களை மேற்கொள்கின்ற சூழ்நிலையில் வடமாகாண ஆளுநர் சுரேன் ராகவனும் மக்களுடைய பல கோரிக்கைகளோடு வந்திருப்பதாக கூறப்படுகின்றது. இது குறித்து வினவிய போது,

அவர் பதிலளிக்கையில்,

அவர் ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஒருவர். ஜனாதிபதியுடைய பிரதிநிதியாக அவரால் செயற்பட முடியுமே தவிர மக்களின் பிரதிநிதியாக செயற்பட முடியாது. அது மட்டுமல்ல. இந்த ஜனாதிபதி தவறான ஒரு பாதையில் பயணிக்க தொடங்கிய பிறகு ஜனாதிபதியால் நியமிக்கப்பட்ட ஆளுநர் அவர்.

தவறான பாதையில் செல்லுகிற ஜனாதிபதியுடைய பிரதிநிதியாக தான் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் வருகிறாரே தவிர ஜனாதிபதி சரியான பாதையில் பயணித்துக் கொண்டிருந்த போது ஜனாதிபதியின் முகவராக நியமிக்கப்பட்டிருக்கவில்லை என தெரிவித்துள்ளார்.

ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமைகள் கூட்டத்தொடர் நடந்துக் கொண்டிருக்கக் கூடிய வேளையில் ஈழத்தமிழர் விவகாரம் என்பது இங்கு மீண்டும் ஒரு தளம்பல் நிலையை அடைந்திருப்பதாக நோக்கர்கள் கூறுகிறார்கள். அந்த கருத்தோடு நீங்கள் உடன்படுகிறீர்களா? என வினவிய போது,

அவர் பதிலளிக்கையில்,

இல்லை. தளம்பல் நிலை ஏற்படவில்லை. பிரித்தானியாவும் மற்றைய நான்கு நாடுகளும் ஒரு புதிய பிரேரணையை வரைபாக முன்வைத்திருந்தார்கள். இலங்கை அதற்கு இணை அனுசரணை கொடுப்பதாக வாக்குறுதி அளித்து ஏற்கனவே கைச்சாத்திட்டிருந்தது.

அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும். அதை நிறைவேற்றாமல் தடுப்பதற்கு இலங்கை ஜனாதிபதியின் தரப்பிலிருந்து முயற்சிகள் மேற்கொள்ளப்படுவதாக நாங்கள் அறிகிறோம்.

அந்த முயற்சிகளை முறியடிப்பதற்காக நாங்கள் சில நடவடிக்கைகளை எடுத்திருக்கிறோம். அதை தவிர அந்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் மீண்டும் இரண்டு வருட காலத்திற்கு ஐக்கிய நாடுகள் சபையி்ன் உயர்ஸ்தானிகர் பொறுப்பு கூறல், இணக்கம் சம்பந்தமான இந்த விடயங்களில் இலங்கை தான் செய்வதாக சொன்ன பொறுப்பெடுத்துக் கொண்ட இந்த விடயங்களை செய்து முடிப்பதற்கான ஒரு அழுத்தத்தையும் அதன் மீதான ஒரு மேற்பார்வையையும் செய்ய கூடியதாக இருக்கும்.

ஆம். அந்த இரண்டு வருட கால அவகாசம் ஐக்கிய நாடுகள் சபையின் மனித உரிமை பேரவையால் வழங்கப்படுகின்ற விடயம் அது கால அவகாசமா? அல்லது அதன் பொருள் எப்படி இருக்கின்றது? என வினவிய போது,

அவர் பதிலளிக்கையில்,

30/1 என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்ட போது அதிலே இலங்கை பல விடயங்களை செய்வதாக பொறுப்பேற்றது. அது எந்த கால அவகாசத்திற்குள்ளே செய்து முடிக்க வேண்டும் என்று எந்த தீர்மானத்திலும் எங்கேயும் சொல்லப்பட்டிருக்கவில்லை.

ஒரு காலக்கெடு கொடுக்கப்பட்டிருக்கவில்லை. ஐக்கிய நாடுகள் மனித உரிமை உயர்ஸ்தானிகருக்கு ஒரு ஆணை கொடுக்கப்பட்டது. இந்த விடயங்களை இலங்கை செய்கிற போது அதனை செய்து முடிப்பதற்கான தொழினுட்ப உதவியை வழங்குமாறும் அதன் செயன்முறையை குறித்து மேற்பார்வை செய்து பேரவைக்கு அறிக்கைகள் சமர்ப்பிக்குமாறும் அவர்கள் அந்த 30/1 தீர்மானத்திலே சொல்லி இருந்தார்கள்.

ஒன்பது மாதங்களிலே ஒரு வாய்மூலமான அறிக்கையும் 18 மாதங்களிலே நிறைவான எழுத்து மூலமான அறிக்கையும் கொடுக்க வேண்டும் என்று அந்த ஒன்றரை வருட காலம் முடிவடைந்த போது அந்த அறிக்கையோடு அந்த விடயங்கள் முடிவுக்கு வந்திருக்கும்.

அதற்கு பிறகு இலங்கை இந்த விடயங்களை செய்ய வேண்டுமா? இல்லையா என்று கண்காணிப்பதற்கு எவருமே இருந்திருக்க மாட்டார்கள்.

அதனால் தான் 34/1 என்ற இன்னுமொரு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு இன்னும் 2 வருடங்களுக்கு அதை மேற்பார்வை செய்வதற்கும் அறிக்கைகள் சமர்ப்பிப்பதற்கும் உயர்ஸ்தானிகருக்கு ஒரு ஆணை வழங்கப்பட்டது.

அந்த வேளையிலேயும் தமிழர் தரப்பிலே ஒரு குழப்பகரமான சூழல் இருந்தது. ஏனென்றால், 2 வருடகால கால அவகாசம் கொடுக்கிறார்கள்.

தமிழ் தேசிய கூட்டமைப்பும் அதில் இணங்கி செயற்படுகிறது என்ற குற்றச்சாட்டு எல்லாம் வந்த போது தெளிவுப்படுத்தியிருந்தோம்.

எவ்வளவு தான் தெளிவுப்படுத்தியிருந்தாலும் சில அரசியல் தரப்புக்களோடு எல்லாம் தமிழ் ஊடகங்களும் சேர்ந்து இன்றைக்கும் அதே சொற்பிரயோகங்களை பாவித்து கொண்டு இருக்கிறார்கள்.

கால அவகாசம் கொடுக்கப்பட்டமைக்கு முழுமையான பொய்யான ஒரு பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டு கொண்டிருக்கிறது என தெரிவித்துள்ளார்.

Latest Offers