மூன்று பேருக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது! யாழ். மாநகர முதல்வருக்கு வந்த கடிதம்

Report Print Suthanthiran Suthanthiran in அரசியல்

உயிருக்கு அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளாதால் தனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்க வேண்டும் என யாழ். மாநகர முதல்வர் இம்மானுவேல் ஆர்னோல்ட் கோரியுள்ளார்.

அவருக்கு விடுக்கப்பட்ட கொலை அச்சுறுத்தல் தொடர்பில் விளக்கமளிக்கும் ஊடகவியலாளர் மாநாடு இன்று அவரது அலுவலகத்தில் இடம்பெற்றுள்ளது.

இதில் வைத்து கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்படி விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், கடந்த 14ஆம் திகதி எனக்கு முகவரியிடப்பட்ட கடிதம் ஒன்று கிடைத்தது.

"மூன்று பேருக்கு இங்கே மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. பேச்சாளர், சயந்தன் மற்றும் ஆர்னல்ட் என்று அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. அன்று சாவகச்சேரி இந்துவில் (சயந்தனை) இலக்கு வைத்தார்கள், பிழைத்துவிட்டது.

இப்போது உங்களை இலக்கு வைத்துள்ளார்கள். கொஞ்ச நாள் மறைந்திருப்பது நல்லது. கம்பன் கழக கூட்டத்தில் பங்கேற்க வேண்டாம். இராமநாதன் பொல்லாதவர். மாறியிருப்பது நல்லது. எதிரிகள் பல பேர், கவனம்.

அங்கேயும் உள்ளனர். லேசாக எடுக்க வேண்டாம்" என்று அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் மறுநாள் 16ஆம் திகதி எனது துணைவியாரின் அலைபேசியின் வைபர் செயலிக்கு தகவல் ஒன்று வந்தது.

ரெடி (Ready?) என அதில் குறிப்பிடப்பட்டிருந்தது. அத்துடன், இரண்டு தவறிய அழைப்புகளும் வந்திருந்தன. மீள அழைத்த போது, பதிலளிக்கப்படவில்லை. உடனடியாகவே மூத்த பொலிஸ் அத்தியட்சகருக்கு அறிவித்தேன்.

அவர் யாழ்ப்பாணம் பொலிஸ் நிலைய உத்தியோகத்தர்களை அனுப்பி என்னிடம் விவரங்களைப் பெற்றிருந்தார். கம்பன் விழாவின் இறுதிநாள் நிகழ்வில் தொடக்க உரை என்னுடையதாக இருந்தது.

அந்த விழாவில் பங்கேற்க வேண்டாம் என அச்சுறுத்தல் விடுக்கப்பட்டுள்ளது. அதன் விளக்கம் என்ன என எனக்குப் புரியவில்லை. எனினும் அன்றைய நிகழ்வில் பங்கேற்க எனக்கு பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டது.

அண்மைக்காலமாக மாநகரத்துக்குள் ஏற்பட்ட சில அத்துமீறல்களுக்கு எதிராக எடுக்கப்பட்ட சில நடவடிக்கைகளால் அச்சுறுத்தல்கள் இருந்தன.

எனக்கு வந்த அச்சுறுத்தலில் நபர் ஒருவரின் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. அதனுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது மாநகரத்துக்குள் ஏற்பட்ட அத்துமீறல்களை தடுக்க கூடுதலான அக்கறை எடுத்து செயற்படுவதனால் இவ்வாறான அச்சுறுத்தல்கள் வந்திருக்குமோ என்று எண்ண தோன்றுகின்றது என்று அவர் சந்தேகம் வெளியிட்டுள்ளார்.

மேலும், அதற்கு முன்னர் எனக்கு எந்தவொரு அச்சுறுத்தலும் விடுக்கப்படவில்லை. எனவே எனது கடமைக்கும், போக்குவரத்துக்கும் பொலிஸ் பாதுகாப்பைக் கோரத் திட்டமிட்டுள்ளேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers