ராஜபக்சவினரை ஆதரிக்க போவதில்லை: விஜித் விஜயமுனி சொய்சா

Report Print Steephen Steephen in அரசியல்

ராஜபக்சவினருக்கு ஆதரவளிக்க போவதில்லை என ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் விஜித் விஜயமுனி சொய்சா தெரிவித்துள்ளார்.

மொனராகலையில் நடைபெற்ற கூட்டம் ஒன்றில் அவர் இதனை கூறியுள்ளார்.

“மகிந்த ராஜபக்சவை மீண்டும் பிரதமராக்கவே இறுதியாக ராஜபக்சவினருக்கு ஆதரவளித்தேன். இனிமேல் எப்போதும் ராஜபக்ச நிறுவனத்திற்கு ஆதரவளிப்பதில்லை என தீர்மானித்துள்ளேன்.

மகிந்த ராஜபக்ச பிரதமராக பதவியேற்ற பின்னர் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்ததுடன் நான் உட்பட ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியினர் அநாதரவானோம். இப்படியான பின்னணியில் ராஜபக்சவினர் பின்னால் செல்ல வேண்டுமா?.

உலக நாடுகளில் ஜனாதிபதி வேட்பாளரை தெரிவு செய்யும் முறை இருக்கின்றது. அமெரிக்காவில் குடியரசு மற்றும் ஜனநாயக கட்சிகளின் வாக்குகளில் ஜனாதிபதி வேட்பாளர்கள் தெரிவு செய்யப்படுவார்கள்.

வேறு நாடுகளில் கட்சிகளின் மத்திய செயற்குழு, அதியுயர் பீடம், செனட் சபை என்பன ஜனாதிபதி வேட்பாளர்களை தெரிவு செய்யும். ஆனால் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் வேட்பாளரை ராஜபக்ச குடும்பம் தெரிவு செய்கிறது.

இந்த அடிமை நிலையில் இருந்து மீள வேண்டும். நான் நேரடியாக சொல்கிறேன், நான் இனிமேல் ராஜபக்ச நிறுவனத்திற்காக வேலை செய்ய மாட்டேன்” என விஜித் விஜயமுனி சொய்சா குறிப்பிட்டுள்ளார்.

விஜித் விஜயமுனி சொய்சா, ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்திற்கு ஆதரவளித்து, ஆளும் கட்சியில் இணைந்துக்கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers