தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் ஜெனிவாவில் இலங்கை அரசு சொன்ன தகவல்...!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம் என இலங்கை தன்னுடைய கருத்தினை வெளிப்படுத்தியுள்ளது.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன.

இந்த தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இதனையடுத்து, இலங்கை சார்பில் வெளிவிவகார அமைச்சர் திலக் மாரப்பன உரையாற்றினார். அதையடுத்து, தீர்மானம் மீது வாக்கெடுப்பு நடத்த எந்த நாடும் கோராத நிலையில், ஒருமனதாக தீர்மானம் நிறைவேறியதாக அறிவிக்கப்பட்டது.

இந்நிலையில். இலங்கை அரசாங்கம் சார்பில் பேசிய அமைச்சர் திலக் மாரப்பன,

“ இந்த பிரேரணை ஊடாக இலங்கை வெளிக்காட்டிய முன்னேற்றங்களுக்கு சிறந்த அங்கீகாரம் கிடைக்கப்பெற்றுள்ளது. பிரேரணையின் பரிந்துரைகளை இலங்கை அரசாங்கம் அமுல்படுத்தும்.

இலங்கையின் ஜனநாயக நிறுவனங்களுடன் இணைந்து செயற்பட வருமாறு ஐக்கிய நாடுகள் மனித உரிமை அலுவலகத்துக்கு அழைப்பு விடுக்கின்றோம். அத்துடன் உறுப்பு நாடுகளுக்கும் பிரேரணையை தயாரித்த நாடுகளுக்கும் நன்றியை தெரிவிக்கின்றோம் ” என்று குறிப்பிட்டுள்ளார்.