மேலும் இரண்டு ஆண்டுகளைப் பெற்றது இலங்கை! கலப்பு நீதிமன்றத்திற்கு இடமில்லை என்றும் மறுப்பு

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தற்போது நிறைவேற்றப்பட்டுள்ள தீர்மானமானது 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நீடிப்பு என ஐக்கிய நாடுகள் சபை அமர்வில் கலந்து கொண்ட சரத் அமுனுகம தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமைகள் பேரவையில் இலங்கை தொடர்பான புதிய தீர்மானம் சற்று முன்னர் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது.

பிரித்தானியா மற்றும் அயர்லாந்து, ஜேர்மனி, கனடா, மொன்ரெனிக்கோ, மசிடோனியா ஆகிய நாடுகள் இணைந்து ‘இலங்கையின் நல்லிணக்கத்தையும் பொறுப்புக்கூறலையும் ஊக்குவித்தல்’ என்ற தலைப்பிலான 40/1 இலக்க தீர்மானத்தை முன்வைத்திருந்தன.

இந்த தீர்மானத்துக்கு இலங்கை இணை அனுசரணை வழங்கியிருந்தது. இந்த நிலையில், தீர்மானம் மீது சற்று முன்னர் வரை பேரவையில் விவாதம் நடத்தப்பட்டது. இதில் பல்வேறு நாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டு உரையாற்றினர்.

இத்தீர்மானம் நிறைவேற்றப்பட்ட பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய சரத் அமுனுகம,

“ ஐ.நா.வில் கடந்த 2015ஆம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் நீடிப்பாகவே இந்த புதிய பிரேரணை நிறைவேற்றப்பட்டுள்ளது. அரசாங்கம் முன்னதாக உறுதியளித்த விடயங்களை நிறைவேற்றவே சர்வதேச சமூகம் மேலும் இரண்டு வருட கால அவகாசத்தை வழங்கியுள்ளது. உண்மையில் இது ஒரு நல்லெண்ண சமிக்ஞையாகும்.

எவ்வாறாயினும், அரசாங்கம் ஏற்கனவே ஏற்றுக்கொண்ட விடயங்களை செயற்படுத்த மேலும் காலம் அவசியமாகின்றது. இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் கிடைக்கப் பெற்று இருக்கிறது.

எனினும், நாம் எந்த உடன்பாட்டிற்கு வருவதாக இருந்தாலும் இலங்கையின் அரசியலமைப்பிற்கு உட்பட்டதாக இருக்க வேண்டும். இது, இந்தியா, பாகிஸ்தான் என எந்த நாடாக இருந்தாலும் பொருந்தும். எந்தவொரு தீர்மானத்திற்கு வருவதாக இருந்தாலும் அது இலங்கையின் அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாகவே இருக்க வேண்டும். அரசியல் சாசனத்திற்கு உட்பட்டதாக இருந்தால் நிச்சயமாக நிறைவேற்றுவோம்.

சர்வதேச நாடுகள் நேற்று குறை கூறியிருந்த போதும், அதனை எவ்வாறு செயற்படுத்த போகிறோம் என்பது எமது நாட்டின் சூழ்நிலையிலேயே தங்கியுள்ளது.

இதேவேளை, ஐ.நா. மனித உரிமைகள் பேரவையில் நிறைவேற்றப்பட்ட புதிய பிரேரணையை ஏற்றுக்கொண்டாலும், கலப்பு நீதிமன்றத்தை ஏற்கவில்லை“ என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers