முதற்தடவையாக ஐந்து கட்சிகள் இணைந்து ஐக்கிய நாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளோம். இதிலே சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் வெறுமனே கையெழுத்து மாத்திரம் வைத்து கொடுக்க போகின்றார்களா..? என நாடாளுமன்ற உறுப்பினர் சிவசக்தி ஆனந்தன் கேள்வி எழுப்பியுள்ளார்.
வவுனியாவில் இன்று ஊடகவியலாளர் எழுப்பிய கேள்வி ஒன்றுக்கு பதில் அளிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார். அவர் மேலும் தெரிவிக்கையில்,
சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்கள் வெறுமனே கையெழுத்து மாத்திரம் வைத்துக் கொடுக்கப் போகின்றார்களா அல்லது தமிழ் மக்களின் மாற்றுத் தலைமைக்கான பாதையில் தொடர்ந்து பயணிக்கப் போகிறார்களா என குறிப்பிட்டுள்ளார்.
மனித உரிமை பேரவையில் 30:1 தீர்மானம் முன்வைக்கபட்ட போது அது சர்வதேச விசாரணையா, உள்நாட்டு விசாரணையா என்று சொற்களில் தொங்கி கொண்டிருக்காமல் அதன் உள்ளடக்கத்தையே பார்க்கவேண்டும் என்று சுமந்திரன் வலியுறுத்தியிருந்தார்.
தற்போது புதுக்கதை ஒன்றை கூறுகின்றார். மனித உரிமை பேரவைக்கு காலநீடிப்பு வழங்கபடவில்லை. கண்காணிப்பதற்காகவே இந்த இரண்டு வருடங்கள் வழங்கப்படுகின்றதாக சொல்கிறார். இது தமிழ் மக்கள் மீதுள்ள நலனிற்குமாறாக அரசாங்கத்தை பாதுகாப்பதாகவே இதன் நோக்கம் அமைந்துள்ளது.
காணாமல் ஆக்கபட்டவர்களிற்கான அலுவலகம் அமைக்கபட வேண்டும் என்று நாடாளுமன்றத்திலே ஆதரவாக வாக்களிக்கின்றார்கள். அதேவேளை அந்த அலுவலகத்தில் நம்பிக்கை இல்லை என்று தமிழ் மக்களால் மேற்கொள்ளப்படும் ஆர்பாட்டங்களிலும் கலந்து கொள்கின்றார்கள்.
பாதுகாப்பிற்கு அதிக நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக வரவு செலவுதிட்டத்தை விமர்சித்துவிட்டு அதற்கு ஆதரவாக வாக்களிக்கின்றார்கள். இது அவர்களுடைய இரட்டை முகத்தையே காட்டுகின்றது.
இந்த முன்னுக்கு பின் முரணான தன்மை தொடர்பாக தமிழ் மக்கள் புரிந்து கொள்ளவேண்டும். இவர்களிற்கு பதவிகளையும், பட்டங்களையும், மாடிவீடுகளையும், வசதிகளையும் கொடுத்து இறால் போட்டு சுறா பிடிக்கும் செயற்பாட்டையே அரசாங்கம் மேற்கொள்கின்றது.
இவர்களால் தெரிவிக்கபடும் கருத்துக்கள் சர்வதேச ரீதியில் அரசாங்கத்திற்கு சாதகத்தை ஏற்படுத்துகின்றது. எனவே மாற்றுதலைமை தொடர்பாக நாம் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றோம்.
அது போல முதற்தடவையாக ஐந்து கட்சிகள் இணைந்து ஐக்கியநாடுகள் சபைக்கு மகஜர் அனுப்பி வைத்துள்ளோம். இதிலே சித்தார்த்தன், செல்வம் அடைக்கலநாதன் போன்றவர்களும் கையெழுத்து வைத்துள்ளார்கள். அவர்கள் வெறுமனே கையெழுத்து மாத்திரம் வைத்து கொடுக்கபோகின்றார்களா ...? அல்லது தமிழ் மக்களின் மாற்று தலைமைக்கான பாதையில் தொடர்ந்து பயணிப்பார்களா..? என்பதை பொறுத்திருந்து தான் பார்க்கவேண்டும். எனவும் தெரிவித்துள்ளார்.