தமிழ் தேசிய கூட்டமைப்பை கடுமையாக விமர்சித்த வியாழேந்திரன்

Report Print Kumar in அரசியல்

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆட்டுமந்தைகள் போலவும் எருமமாட்டு கூட்டங்கள் போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு கரங்களையும் உயர்த்தி இந்த அரசாங்கத்தினை காப்பாற்றுவதாக மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் தெரிவித்தார்.

மட்டக்களப்பில் எதிர்வரும் சனிக்கிழமை ரணில் விக்ரமசிங்க தலைமையில் நடைபெறவுள்ள காணி உறுதிப்பத்திரம் வழங்கும் நிகழ்வில் தமிழ் தேசிய கூட்டமைப்பு புறக்கணிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கவலை தெரிவித்தார்.

மட்டக்களப்பு, கேம்பிறிட்ஸ் முன்பள்ளியின் வருடாந்த விளையாட்டு நிகழ்வில் பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் எஸ்.வியாழேந்திரன் கலந்துகொண்டார்.

இங்கு தொடர்ந்து உரையாற்றிய அவர்,

தற்போதுள்ள அரசாங்கம் தங்களுக்கு யார் ஆதரவு வழங்குகின்றார்களோ அவர்களுக்கு முன்னுரிமை வழங்கும் செயற்பாட்டினையே செய்துவருகின்றது.

எதிர்வரும் சனிக்கிழமை மட்டக்களப்பு மாவட்டத்தில் 7000பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கப்படவுள்ளது. இந்த நிகழ்வுக்கு 75வீதமாகவுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் பிரதிநிதிகள் யாரும் அழைக்கப்படவில்லை. ஐக்கிய தேசிய கட்சியின் காணி அமைச்சினால் இந்த நிகழ்வு நடாத்தப்படவுள்ள நிலையில் பிரதமர் ரணில் விக்ரமசிங்க இங்கு தலைமைதாங்குகின்றார்.

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரச காணியில் குடியிருப்பவர்களுக்கு அதற்கான உரிமையை வழங்குகின்ற ஓரு முக்கியமான நிகழ்வு.இந்த நிகழ்வுக்கு 75வீதமாகவுள்ள மக்களை பிரதிநிதித்துவப்படுத்தும் தமிழ் தேசிய கூட்டமைப்பின் எந்த பிரதிநிதிகளும் அழைக்கப்படவில்லை. இதன் பின்புலம் என்ன?.

வரவு செலவுத்திட்டத்திற்கு ஆட்டுமந்தைகள் போலவும் எருமைமாட்டு கூட்டங்கள் போலவும் தமிழ் தேசிய கூட்டமைப்பு இரண்டு கரங்களையும் உயர்த்தி ஆதரவு வழங்க இந்த அரசாங்கத்தினை காப்பாற்றுகின்றது.

இந்த அரசாங்கமே இன்று தமிழ் தேசிய கூட்டமைப்பின் அத்திவாரத்தில்தான் இருக்கின்றது. மிகப்பெரும் தியாகத்தினை ரணில் விக்ரமசிங்கவுக்காகவும் இந்த அரசாங்கத்திற்காகவும் செய்த தமிழ் தேசிய கூட்டமைப்பு பெருமளவான அரச காணியை தனியார் காணியாக மாற்றும் நிகழ்வுக்கு அழைக்கப்படாத மிகமோசகமான நிலையேற்பட்டுள்ளது.

இந்த நிகழ்வினை தன்மானமுள்ளவன் என்ற அடிப்படையில் இந்த நிகழ்வினை நிராகரிக்கின்றேன். புறக்கணிக்கின்றேன். இது தொடர்பிலான கேள்வியை வரவுசெலவு திட்டத்தில் எழுப்ப இருக்கின்றேன் என்றார்.

Latest Offers