வலிகாமம் வடக்கில் இன்று காணி அளவீட்டு பணிகள்! இடைநிறுத்துமாறு பிரதமர் உத்தரவு?

Report Print Rakesh in அரசியல்

வலிகாமம் வடக்கில் கடற்படை முகாமிற்காக 232 ஏக்கர் காணியை சுவீகரிப்பதற்கான அளவீட்டு பணிகள் இன்று நில அளவீட்டுத் திணைக்களத்தால் மேற்கொள்ளப்படவுள்ளது.

ஆயினும், அந்தப் பணி கைவிடப்பட்டுள்ளதாக பிரதமர் ரணில் விக்ரமசிங்க மற்றும் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக ஆகியோரினால் நேற்று காலை தனக்கு அறிவிக்கப்பட்டதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளதாக எமது செய்தியாளர் குறிப்பிட்டார்.

எனினும், இந்த அறிவிப்பு நில அளவைத் திணைக்களத்துக்கு உத்தியோகபூர்வமாக கிடைக்கவில்லை எனவும், திட்டமிட்டபடி இன்று காணி அளவீடு இடம்பெறும் எனவும் திணைக்கள வட்டாரங்கள் கூறுகின்றதாக தகவல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

232 ஏக்கரில் பெரியளவிலான கடற்படை முகாமை அமைப்பதற்காக நகுலேஸ்வரம், காங்கேசன்துறை ஆகிய பகுதிகளில் நிலங்களை சுவீகரிப்பதற்கு இன்று அளவீட்டு பணிகள் இடம்பெறும் என நில அளவைகள் திணைக்களம் அறிவித்திருந்தது.

தமக்குப் பிரதமரால் வழங்கப்பட்ட உறுதிமொழியை மீறி இந்தக் காணி சுவீகரிப்பு முன்னெடுக்கப்படுவதாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குற்றஞ்சாட்டியிருந்தது.

இந்தநிலையில், இன்று நடைபெறவிருந்த காணி அளவீட்டு பணிகள் பிரதமரின் அறிவுறுத்தலுக்கு அமைய இடைநிறுத்தப்பட்டு உள்ளதாக காணி அமைச்சர் கயந்த கருணாதிலக மற்றும் பிரதமர் அலுவலகத்தால் நேற்று காலை தமக்கு அறிவிக்கப்பட்டதாக நாடா ளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

ஆயினும், இன்று திட்டமிட்ட படி அங்கு காணி அளவீடு இடம்பெறும் என நில அளவை திணைக்களம் கூறியுள்ளது.

Latest Offers