நாடாளுமன்றத்தில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பிரச்சினை தொடர்பில் விசாரணை

Report Print Thiru in அரசியல்

நாடாளுமன்றத்தில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி குறித்து இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸ் தலைமையில் விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தில் அறை இலக்கம் இரண்டில் நேற்று இந்த விசாரணைகள் இடம்பெற்றுள்ளன.

நாடாளுமன்றத்தின் கல்வி, உயர்கல்வி மற்றும் மனிதவள மேம்பாடு குழுவிற்கு கிடைக்கப் பெற்ற முறைப்பாட்டிற்கு இணங்க விசாரணைகள் நடைபெற்றுள்ளதாக தெரியவருகிறது.

இந்த விசாரணை தொடர்பில் இராஜாங்க அமைச்சர் வடிவேல் சுரேஸிடம் வினவிய போது,

எங்களுக்கு கல்வியற் கல்லூரி தொடர்பாக கிடைத்த முறைப்பாடுக்கு அமையவே இந்த விசாரணை நடைபெற்றது.

மலையகத்தின் சொத்தாக காணப்படும் இந்த கல்வியற் கல்லூரியை பாதுகாக்க வேண்டியது எம் அனைவரினதும் பொறுப்பாகும்.

அந்த அடிப்படையில் விசாரணைகள் செய்யப்பட்டு சம்பந்தப்பட்ட அனைவரிடமும் கலந்தாலோசித்து, முடிவில் ஆசிரியர் பயிலுனர்களின் கல்விக்கு எந்த விதமான இடையூரும் ஏற்படாத வகையில் விசாரணை முடிவுக்கு கொண்டு வரப்படும்.

நீண்டகாலம் சேவையாற்றும் அதிகாரிகளுக்கு இடமாற்றம் வழங்கப்படும். கல்வி அமைச்சினால் முன்னெடுக்கப்படும் ஒழுங்காற்று விசாரணைகள் சுயாதீனமாக இருக்கும்.

அதன் முடிவுக்கு அமைய தீர்மானங்கள் எடுக்கப்படும். தற்போது நிர்வாகத்தில் ஏற்பட்டிருக்கும் பிணக்குகள் கல்லூரியின் நலன் கருதி சுமூகமாக தீர்க்கப்படும்.

பொலிஸ் நிலையங்களில் செய்யபட்ட முறைப்பாடுகள் சுமூகமாக தீர்க்கப்படும் இந்த ஸ்ரீபாத கல்வியற் கல்லூரியின் பிரச்சினை ஒரு சமூகத்தின் பிரச்சினையாக இருக்கின்றது.

எனவே, இதற்கு ஒரு சுமூகமான தீர்வு எட்டப்பட்டு கல்வியற் கல்லூரி எந்தவிதமான பிரச்சினைகளும் இன்றி, இயங்க தேவையான அனைத்து விடயங்களும் நாடாளுமன்றத்தின் கல்வி உயர்கல்வி மற்றும் மனிதவள மேம்பாட்டு குழுவினால் முன்னெடுக்கப்படும் என்று தெரிவித்துள்ளார்.

இதன் போது நாடாளுமன்ற உறுப்பினர்களான எம்.திலகராஜ், முஜிபுர் ரஹமான், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், கல்வி அமைச்சின் மேலதிக செயலாளர்கள், அதிகாரிகள், விரிவுரையாளர்கள், ஆசிரிய பயிலுனர்கள், லிந்துல பத்தனை பொலிஸ் நிலைய பொலிஸ் அதிகாரிகள், கொட்டகலை பிரதேச சபையின் தலைவர் ஆர்.பிரசாந் உட்பட கொட்டகலை பிரதேச சுகாதார அதிகாரிகள் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அண்மையில் ஸ்ரீபாத கல்வியற் கல்லூரி உத்தியோகத்தர்கள் காரியாலயத்தில் மது பாவித்தமை தொடர்பாக ஏற்பட்ட பிரச்சினையால் மாணவர்களுக்கும் நிர்வாகத்திற்கும் இடையில் பிணக்குகள் ஏற்பட்டிருந்தன.

இந்த பிணக்கு காரணமாக சம்பந்தப்பட்டவர்களில் ஒரு சாரார் பொலிஸில் முறைப்பாடுகளையும் மேற்கொண்டிருந்தனர்.

இதற்கான விசாரணைகள் பொலிஸாரால் நடைபெற்றுவரும் அதேவேளை கல்வி அமைச்சின் ஒழுங்காற்று பிரிவினரும் விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

மேலும், சம்பந்தப்பட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் சிற்றூழியர்கள் தற்காலிகமாக இடமாற்றமும் செய்யப்பட்டிருந்தனர்.

Latest Offers