புத்தளம் மக்களின் எதிர்ப்பு காரணமாக ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தனது நிகழ்ச்சி நிரலை மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
அருவக்காலு பகுதியில் குப்பைகள் கொட்டப்படுவதனை எதிர்த்து மக்கள் பாரியளவில் போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் புத்தளம் பகுதிக்கு இன்றைய தினம் விஜயம் செய்யும் ஜனாதிபதியை சந்திக்க அனுமதி வழங்குமாறு பிரதேச மக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர்.
மக்கள் போராட்டங்களை நடத்துவதன் காரணமாகவே ஜனாதிபதியின் நிகழ்ச்சி நிரலில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.
குறிப்பாக முதலில் நடைபெறவிருந்த நிகழ்விற்கு அருகாமையில் போராட்டக்காரர்கள் குழுமியிருந்த காரணத்தினால் ஜனாதிபதி இறுதியாக நடைபெறவிருந்த நிகழ்வில் முதலில் பங்கேற்றுள்ளார்.
போராட்டத்தை தடுப்பதற்கு புத்தளம் பொலிஸார் நீதிமன்ற தடையுத்தரவு பெற்றுக் கொண்டிருந்த போதிலும் அதனையும் மீறி மக்கள் போராட்டங்களில் ஈடுபட்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
குப்பை பிரச்சினை குறித்து ஜனாதிபதியிடம் நேரடியாக தெளிவுபடுத்த சந்தர்ப்பம் வழங்குமாறு போராட்டக்காரர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
போராட்டக்காரர்களை கட்டுப்படுத்தும் நோக்கில் கலகத் தடுப்புப் பொலிஸார் அழைக்கப்பட்டுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.