காடழிப்புடன் தொடர்பு உண்டு என நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு தண்டனையையும் ஏற்கத் தயார்: ரிசாட்

Report Print Kamel Kamel in அரசியல்

காடழிப்புடன் தொடர்பு உண்டு என நிரூபிக்கப்பட்டால் எந்தவொரு தண்டனையையும் ஏற்றுக்கொள்ளத் தயார் என அமைச்சர் ரிசாட் பதியூதீன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றில் இன்றைய தினம் உரையாற்றிய போது அமைச்சர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.

வில்பத்து வனத்தை தாம் அழிக்கவில்லை என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தாமோ தாம் பிரதிநிதித்துவம் செய்யும் முஸ்லிம் சமூகமோ எந்தவொரு தவறையும் இழைக்கவில்லை எனவும், தங்களுக்கு வழங்கப்பட்ட காணிகளிலேயே முஸ்லிம் மக்கள் மீள் குடியேற்றப்பட்டுள்ளனர் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

சிங்கள ஊடகங்களும், சமூக வலைத்தளங்களிலும் வில்பத்து வனப்பகுதியை அழித்து குடியேற்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாக பொய்யான பரப்புரை மேற்கொள்ளப்பட்டு வருகிறது. 25 ஆண்டுகளுக்கு முன்னர் மக்கள் வசித்த பகுதிகளிலேயே குடியேற்றங்கள் செய்யப்பட்டுள்ளன.

புத்தளம் மாவட்டத்தில் 25 ஆண்டுகளாக முஸ்லிம் மக்கள் அகதிகளாக இருந்த காரணத்தினால், அவர்கள் வாழ்ந்த கிராங்கள் காடுகளாக மாறியிருந்தன. அவர்களை மீள குடியேற்றும் போது பிரதேச செயலாளர் கிராமங்களில் வளர்ந்திருந்த காடுகளை அழித்து மக்களை குடியேற்றம் செய்துள்ளார்.

அதற்கு எனக்கு எந்த தொடர்பும் இல்லை. இந்த விடயத்தை சமூக வலைத்தளங்கள் மற்றும் சிங்கள ஊடகங்கள் மூலம் இனவாத கையாள்கின்றனர். மேற்கொள்ளப்பட்டு வரும் இந்த சேறுபூசும் பிரசாரம் முற்றிலும் உண்மைக்கு புறம்பானது.

எனக்கு எதிராக முன்னெடுக்கப்படும் இந்த சேறுபூசும் பிரசாரம் யாரை மகிழ்விக்க மேற்கொள்ளப்படுகிறது என்பது எனக்கு தெரியாது. 2015 ஆம் ஆண்டுக்கு பின்னர் ஒரு அங்குலம் நிலத்தை கூட மக்களுக்கு வழங்கவில்லை.

வில்பத்து வனப் பகுதியில் முஸ்லிம்கள் குடியேறவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers