ஹம்பாந்தோட்டை எண்ணெய் சுத்திகரிப்பு முதலீட்டின் பின்னணியில் அர்ஜூன் மகேந்திரன்?

Report Print Steephen Steephen in அரசியல்

ஹம்பாந்தோட்டை பிரதேசத்தில் பெற்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஏற்படுத்த மேற்கொள்ளப்படும் முதலீடு மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் சம்பாதித்த பணமோ என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச தெரிவித்துள்ளார்.

கொழும்பில் இன்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

வொக்ஸ்வேகன் நிறுவனத்தின் தொழிற்சாலை ஒன்றை கொண்டு வருவதாக அரசாங்கம் கூறியது. அப்படியான தொழிற்சாலை அமைக்கப்படாது என அந்த நிறுவனம் கூறியது.

பெற்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு நிலையத்தை ஓமான் நிறுவனம் அமைக்க உள்ளதாக அரசாங்கம் கூறியது. எனினும் ஓமான் அதனை மறுத்துள்ளது. பின்னர் இந்திய நிறுவனம் பெற்ரோலிய எண்ணெய் சுத்திகரிப்பு தொழிற்சாலைக்கு முதலீடு செய்ய உள்ளதாக தெரிவித்தனர்.

அப்படியான செய்தி பற்றி தெரியாது என இந்திய ஊடகம் கூறியுள்ளது. சிங்கப்பூர் நிறுவனம் இந்த முதலீட்டை செயய உள்ளதாக தற்போது கூறுகின்றனர்.

முதலீட்டுச் சபை கூறும் எதனையும் நம்ப முடியாது. இந்த சிங்கப்பூர் நிறுவனத்தின் பின்னணியில் அர்ஜூன் மகேந்திரன் இருக்கலாம் என்ற சந்தேகம் ஏற்பட்டுள்ளது.

இதேவேளை, மத்திய வங்கியின் பிணை முறி மோசடியில் சம்பாதித்த பணத்தை ஹம்பாந்தோட்டையில் 400 ஏக்கர் காணியை கொள்ளையிட்டு, இந்த எரிபொருள் சுத்திகரிப்பு தொழிற்சாலையை அமைக்க முதலீடு செய்யலாம். கடந்த 4 ஆண்டுகளாக அரசாங்கம் மக்களை ஏமாற்றியதை மட்டுமே செய்துள்ளது எனவும் நாமல் ராஜபக்ச குறிப்பிட்டுள்ளார்.