யாழ்.வலிகாமம் மேற்கு பிரதேச சபையில் திரிபீடகத்தை கௌரவிக்கும் வாரம் அனுஷ்டிப்பதில்லை என சபை உறுப்பினர்களினால் எடுக்கப்பட்ட தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.
குறித்த தீர்மானத்திற்கு அமைய இந்த வாரத்தில் சபையில் அது தொடர்பான எந்தவொரு நிகழ்வுகளும் நடைபெறவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
கடந்த ஜனவரி மாதம் 05ஆம் திகதி ஜனாதிபதியால் தேரவாத பௌத்த திரிபீடகம் தேசிய மரபுரிமையாகப் பிரகடனம் செய்யப்பட்டிருந்தது.
மார்ச் 16ஆம் திகதி முதல் 23ஆம் திகதி வரையான காலத்தில் பௌத்த திரிபீடகத்தை கௌரவிக்கும் வாரமாக அனுஷ்டிக்குமாறு ஜனாதிபதி செயலகத்தின் ஏற்பாட்டில் அரச திணைக்களங்கள் மற்றும் நிறுவனங்களுக்கு சுற்றுநிரூபம் அனுப்பப்பட்டிருந்தது.
அந்த சுற்றுநிரூபத்தில் அனைத்து நிறுவனங்களையும் பௌத்த கொடிகளால் அலங்கரிக்குமாறும், 22ஆம் திகதி பௌத்த சமய நிகழ்ச்சிகள் மற்றும் தர்ம போதனையை நடத்துமாறும் கூறப்பட்டிருந்தது.
வலி.மேற்கு பிரதேச சபையின் அமர்வு கடந்த 15ஆம் திகதி தவிசாளர் த.நடனேந்திரன் தலைமையில் நடைபெற்றபோது, மேற்படி சுற்றுநிரூபம் செயலாளரினால் சபைக்கு வாசித்துக் காண்பிக்கப்பட்டுள்ளது.
இதன்போது, வலி.மேற்கு பிரதேச சபை தமிழர் பிரதேசத்தில் அமைந்திருப்பதால், இங்கு பௌத்தர்கள் எவரும் பணியாற்றாத நிலையில், இங்கு பௌத்த நிகழ்வுகளை நடத்துவதற்கும் சபை அலுவலகத்தை பௌத்த கொடிகளால் அலங்கரிப்பதற்கும் முடியாது என உறுப்பினர் ந.பொன்ராசா கருத்து முன்வைத்துள்ளார்.
அவரைத் தொடர்ந்து மேலும் பல உறுப்பினர்கள் இதே கருத்தை முன்வைத்துள்ளனர்.
இதன்போது, இங்கு திரிபீடகத்தை உலக மரபுரிமையாகப் பிரகடனப்படுத்தும் வாரத்தை வலி.மேற்கு பிரதேச சபையில் அனுஷ்டிப்பதில்லை என ஏகமனதாக தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்நிலையிலேயே குறித்த தீர்மானம் அமுல்படுத்தப்பட்டுள்ளது.