பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக ஒன்றிணைய வேண்டும்

Report Print Sumi in அரசியல்

தமது நியாயமான உரிமைகளுக்காகவும் ஜனநாயக அடிப்படையிலான கோரிக்கைகளுக்காகவும் குரல் எழுப்பி போராடுகின்ற அனைத்துத் தரப்பினருக்கும் எதிராக, ஜனநாயக விரும்பிகளை அச்சுறுத்தும் வகையில் இலங்கையில் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டம் கொண்டு வரப்படுகிறதென புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சி அறிவித்துள்ளது.

பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்திற்கு எதிராக இன்று வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்துள்ளது.

மேலும் அவ் அறிக்கையில்,

ஜனநாயகத்தையும் சட்ட ஆட்சியையும் பாதுகாத்து வருவதாக உரத்துக் கூறிக் கொண்டே ரணில் தலைமையிலான இன்றைய அரசாங்கம் மிக மோசமான காட்டுச் சட்டமாகப் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற முன்நிற்கிறது.

பொலிஸாருக்கும் ஆயுதப் படையினருக்கும் அவர்களது விருப்பு வெறுப்பிற்கு ஏற்றவாறு இச்சட்டத்தை அமுல்படுத்துவதற்கு ஏற்றவாறான பரந்த பொருள் கோடல்களை இச் சட்டத்தின் விதிகள் வழங்குகின்றன.

தமது நியாயமான கோரிக்கைகளை முன்வைத்து வீதிக்கு இறங்கி, நீதி நியாயம் கேட்கும் எவரையும் இச்சட்டத்தின் மூலம் 20 வருடச் சிறைத் தண்டனை வரை தண்டிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

எனவே, இச்சட்டமூலத்தைத் தொழிலாளர்கள் உள்ளிட்ட அனைத்து உழைக்கும் மக்களும் ஒடுக்குமுறைகளுக்கு உள்ளாகி நிற்கும் தேசிய இனங்களும் ஒன்றிணைந்து எதிர்த்து, அதனை மீளப் பெறுவதற்கு வலியுறுத்த வேண்டும் என இவ் அறிக்கையானது புதிய ஜனநாயக மாக்சிச லெனினிசக் கட்சியின் அரசியல் குழு சார்பாக அக் கட்சி கோரியுள்ளது.

1979ஆம் ஆண்டில் தமிழ் இளைஞர்களுக்கு எதிராக ஜே.ஆரின் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி பயங்கரவாதத் தடைச் சட்டத்தைக் கொண்டு வந்தது. கடந்த 40 வருடங்களில் அக் கொடூர சட்டத்தினால், மறுக்கப்பட்ட உரிமைகளைப் பெறப் போராடிய தமிழ் மக்கள் ஒடுக்கப்பட்டனர்.

இன்றும் 100இற்கும் மேற்பட்ட அரசியல் கைதிகள் அச்சட்டத்தின் கீழ் பல வருடங்களாகச் சிறைகளில் அடைக்கப்பட்டுள்ளனர்.

இந்நிலையிலேயே, இன்றைய ரணில் தலைமையிலான ஐக்கிய தேசியக் கட்சி அரசாங்கம் பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை நாடாளுமன்றத்தில் நிறைவேற்ற மும்முரம் காட்டி நிற்கிறது.

இத்தகைய ஒடுக்கு முறைச் சட்டத்தினைப் பொறுத்தவரையில், அரசாங்கத்திற்கு தமது ஆதரவுக் கரங்களை உயர்த்தி வரும் தமிழ், முஸ்லிம், மலையக நாடாளுமன்றக் கட்சிகள் எத்தகைய நிலைப்பாட்டினை எடுக்கப் போகின்றன? தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இக் காட்டுமிராண்டிச் சட்டத்தை ஆதரிக்கப் போகிறதா? அதே போன்று மலையகத்தின் கட்சிகளும், முஸ்லிம் கட்சிகளும் தமது மக்களுக்குத் தமது புற முதுகுகளைக் காட்டித் துரோகமிழைக்கப் போகின்றனவா?

எனவே, தத்தமது கோரிக்கைகளுக்காகப் போராடி வரும் தொழிலாளர்களும், ஏனைய உழைக்கும் மக்களும், மாணவர்களும், இளைஞர்களும், தமது நியாயமான உரிமைகளுக்காகப் போராடி வரும் தமிழ், முஸ்லிம், மலையக மக்களும் ஒண்றிணைந்து பயங்கரவாத எதிர்ப்புச் சட்டத்தை கொண்டு வருவதை நிறுத்து என உரத்துக் குரல் கொடுத்துப் போராடுவது அவசியமாகும் என அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Latest Offers