கிழக்கில் வைத்து பிரதமர் ரணில் விக்ரமசிங்க வழங்கியுள்ள உறுதி

Report Print Rusath in அரசியல்

கிழக்கு மாகாண அபிவிருத்திக்காக கூட்டங்களை நடத்தி அதனை செற்படுத்துவதாக உறுதியளிக்கிறேன் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க உறுதியளித்துள்ளார்.

ஜனாதிபதியின் தலைமைத்துவத்தின் கீழ் பிரதமரின் வழிகாட்டலின் கீழ் 10 இலட்சம் காணி உறுதிகளை வழங்கும் தேசிய விழா இன்றைய தினம் மட்டக்களப்பில் நடைபெற்றுள்ளது.

இதன்போது மட்டக்களப்பு வெபர் மைதானத்தில் வைத்து 7206 பேருக்கு காணி உறுதிப்பத்திரம் வழங்கி வைக்கப்பட்டுள்ளது.

இதில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

ஐக்கிய தேசிய முன்னணி அரசாங்கத்தின் விசாலமான திட்டங்களில் ஒன்றான காணியற்றவர்களுக்கு காணி அனுமதி பத்திரங்கள் வழங்கும் திட்டம் மட்டக்களப்பு மாவட்டத்தில் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.

நாங்கள் மக்களுக்கு ஜனநாயக உரிமையை பெற்றுக் கொடுத்துள்ளோம். ஒக்டோபர் மாதம் அதனைப் பாதுகாத்தோம்.

தற்போது வடக்கு, கிழக்கு, மலையகம் என சகல மாகாணங்களிலும் காணி இல்லாதவர்களுக்கு காணிக்கான உரித்து வழங்கப்படும்.

இதனை வைத்து வியாபாரம் செய்வதற்கான சுயதொழில் முயற்சிக்கு இலகு கடனை பெற்றுக்கொள்ள முடியும். சகல மாணவர்களின் கல்வியறிவு விருத்திக்காக 13 வருடங்கள் கல்வியை கட்டாயப்படுத்தியுள்ளோம்.

இதற்காக பயிற்றப்பட்ட ஆசிரியர்களை வழங்கவுள்ளோம். பாடசாலைகளில உயர்தரம் பயிலும் மாணவர்களுக்கு டெப்பை (Tab) வழங்கவுள்ளோம்.

டிஜிட்டல் மயமாக்கும் நடைமுறையை கொண்டுவர போகிறோம். இதன் மூலம் பொருளாதாரம் டிஜிட்டல் ஆக்கப்படும் இதன்மூலம் நிதிகளை பரிமாற்றம் செய்கின்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும்.

காணி உரிமை பத்திரங்களையும் கணனி முழுமையாக மயப்படுத்தவுள்ளோம். கணனி மயப்படுத்தலை கிராம ரீதியாக அமுல்படுத்தும் செயற்பாடுகளை நாங்கள் மேற்கொண்டுள்ளோம்.

இந்த நாட்டில் ஐக்கிய தேசிய கட்சி அரசாங்கம் மக்களுக்கு உரிமையை கொண்டு வந்துள்ளது. இதனை பாதுகாத்து முன்னெடுத்து கொண்டு செல்ல வேண்டும்.

வெளிநாட்டு தூதுவர்கள் வட மாகாணத்திற்கு மாத்திரம் செல்கிறார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் யோகேஸ்வரன் கூறியிருந்தார். அவர்களை விட அபிவிருத்தி செய்வதற்காக நான் கிழக்கு மாகாணத்திற்கு வந்திருக்கிறேன்.

கிழக்கு மாகாணத்தின் அபிவிருத்தி சம்பந்தமாக எதிர்வரும் காலங்களில் கூட்டங்களை கூட்டி கிழக்கு மாகாணத்தை முழுமையாக கட்டியெழுப்புவதற்கு திட்டம் வகுத்துள்ளேன்.

டிஜிட்டல் பெறுகின்ற உரிமையையும் உங்களுக்கு பெற்றுத் தருவோம். இன்று ஒவ்வொரு வீட்டிலும் கையடக்க தொலைபேசி பயன்படுத்தப்படுகின்றது. இவ்வாறு பயன்படுத்துவதனால் சரியான தகவல்களை பொதுமக்கள் பெறுகின்றார்கள்.

இதனால் தகவல்கள் விரிவடைந்து தங்களின் நோக்கம் நிறைவேறுகின்றது. வளர்ச்சியடைந்த நாடுகளில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் அந்த நாடுகள் முன்னேற்றமடைந்த நாடுகளாக மிளிர்கின்றன.

கொழும்பில் டிஜிட்டல் மயப்படுத்தப்பட்டுள்ளது. இதனால் கொழும்பில் உள்ள பெண்கள் கடைக்குப் போவதில்லை. வீட்டிலே இருந்து கொண்டு தங்களின் தேவைகளையும், பொருளாதார விடயங்களையும் எங்களுடைய மக்கள் இலகுபடுத்தப்படுகின்றார்கள்.

இதனால் பொருளாதாரம் விருத்தியடைகின்றது. இதனால் கொழும்பு பொருளாதாரத்தில் முன்னேற்றம் கண்டு பொருளாதார கேந்திர மிக்க பகுதியாக திகழ்கின்றது.

மட்டக்களப்பு, கல்முனையில் டிஜிட்டல் மையப்படுத்தி கடனட்டை பெறுகின்ற இயந்திரங்களை பொருத்தி உள்ளோம். இதேபோன்று கிராமப்புறங்கள், நகரப்புறங்களில் டிஜிட்டல் மையப்படுத்திய தொழிநுட்ப உரிமையை உங்களுக்கு பெற்று தரவுள்ளோம்.

எந்தவொரு மதத்தையும், கலாச்சாரத்தையும் மதிக்கின்ற உரிமையை பெற்றுத்தந்துள்ளோம். யுத்தத்தினால் கூடுதலான அழிவுகளை வடக்கு சந்தித்துள்ளது. வடக்கை கட்டியெழுப்புவது போல் கிழக்கையும் கட்டியெழுப்புவேன் என தெரிவித்துள்ளார்.

இந் நிகழ்வில் காணி அமைச்சர் கயந்த கருணாதிலக்க, இராஜாங்க அமைச்சர்களான அலிசாகிர் மௌலானா, எம்.எஸ்.எஸ்.அமீரலி, கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம். ஹிஸ்புல்லாஹ், காணி மறு சீரமைப்பு பிரதியமைச்சர் எட்வேட் குணசேகர, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞா.ஸ்ரீநேசன், சீ.யோகேஸ்வரன், கிழக்கு மாகாண பிரதம செயலாளர் சரத் அபகுணவர்த்தன, கிழக்கு மாகாண காணி ஆணையாளர், திணைக்களத் தலைவர்கள், அமைச்சின் செயலாளர்கள் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Latest Offers