தமிழீழ நிலைப்பாட்டை எப்போது தமிழரசு கைவிட்டதோ! மனோவின் பதில்

Report Print Rakesh in அரசியல்

இலங்கைத் தமிழரசுக் கட்சி வடக்கு, கிழக்குக்கு வெளியே உள்ள ஏழு மாகாணங்களில் எங்கு வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம் என அமைச்சர் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

அத்துடன் இதை தாம் வரவேற்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இனிவரும் காலங்களில் வடக்கு, கிழக்குக்கு வெளியில் குறிப்பாக கொழும்பில் தேர்தல்களில் போட்டியிடுவது குறித்து இலங்கைத் தமிழரசுக் கட்சியும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் தீவிரமாகப் பரிசீலிப்பதாக நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.

குறித்த அறிவிப்பு தொடர்பில் தனது நிலைப்பாட்டை விளக்கும் வகையில் தனது முகநூலில் அறிவிப்பொன்றை பதிவிட்டுள்ளார் அமைச்சர் மனோ கணேசன். அதில்,

தமிழரசுக் கட்சி கொழும்பில் தேர்தல் அரசியலில் ஈடுபடப் போவதாகவும், இதுபற்றிய என் கருத்து என்ன என அநேகர் கேட்கிறார்கள். நான் என்ன சொல்ல? வாங்கோ, வாங்கோ என்றுதான் சொல்வேன்!

இலங்கை தமிழரசுக் கட்சி வடக்கு - கிழக்குக்கு வெளியே உள்ள ஏழு மாகாணங்களில் எங்கு வேண்டுமானாலும் தேர்தல்களில் போட்டியிடலாம். இதை நான் வரவேற்கிறேன்.

முழு இலங்கையை தாய்நாடாக ஏற்று கொண்டு, தமிழீழ நிலைப்பாட்டை எப்போது தமிழரசு கைவிட்டதோ, அப்போதிருந்து இந்த உரிமை அந்தக் கட்சிக்கு இயல்பாக இருக்கின்றது.

இது பற்றிய எனது இந்த கருத்தை இதற்கு முன்னமே பலமுறை நான் அறிவித்திருக்கின்றேன். ஜனநாயக கட்சி கிளைகளை யாரும் இந்த ஜனநாயக நாட்டில் எங்கும் அமைக்கலாம்.

நாமும் வடக்கு, கிழக்கில் எமது கட்சி கிளைகளை அமைக்கலாம். அங்குள்ள பல்வேறு அமைப்புகளுடன் கூட்டாகவோ, தனித்தோ செயற்படலாம்.

இதுதான் ஜனநாயக மக்கள் முன்னணி - தமிழ் முற்போக்குக் கூட்டணி ஆகிய அமைப்புகளின் நிலைப்பாடு என தெரிவிக்கப்பட்டுள்ளது.