ஆசிரியர் நியமன நிபந்தனைகளை நெகிழ்வான போக்கில் தளர்த்துவது சிறந்தது

Report Print Navoj in அரசியல்

ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபந்தனைகளை பிரதேசங்களுக்கு ஏற்ற விதத்தில் நெகிழ்வான போக்கில் தளர்த்துவதன் மூலமாகவே கிழக்கு மாகாண ஆளுநர் விரும்புகின்ற ஆசிரியர்களை அந்தந்த வலயங்களில் இருந்து தெரிவு செய்ய முடியும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

கிழக்கு மாகாண ஆசிரியர் நியமனத்திற்காக வெளியிடப்பட்டுள்ள நிபந்தனைகள் தொடர்பில் இன்றையதினம் கருத்துத் தெரிவிக்கும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

தற்போதுள்ள நிபந்தனைகளானது வேறு வலயங்கள் அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மீண்டும் குறித்த சில ஆண்டுகளில் அவர்களது பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்வது போன்று தான் அமையும்.

கல்குடா, மட்டக்களப்பு மேற்கு, போரதீவுப்பற்றுப் பிரதேசங்களில் 600இற்கும் மேற்பட்ட ஆசிரியர் பற்றாக்குறை இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது.

அந்த ஆசிரியர் பற்றாக்குறையைத் தீர்ப்பதற்காக கிழக்கு மாகாண ஆளுநர் எம்.எல்.ஏ.எம்ஹிஸ்புல்லா பொருத்தமான நடவடிக்கை எடுக்கப் போவதாக என்னிடம் குறிப்பிட்டிருந்தார். அதனை வரவேற்கின்றேன்.

அதாவது குறிப்பிட்ட வலயங்களில் இருந்து அந்தந்தப் பிரதேசத்தில் தொடர்ச்சியாகப் பணியாற்றக் கூடியவர்களில் இருந்தே ஆசிரியர்களைத் தெரிவு செய்யவுள்ளதாக விபரித்தார்.

அவ்வாறு செய்வதானால் இடமாற்றங்கள் கோராமல் தொடர்ச்சியாக அப்பிரதேசங்களிலே பல்லாண்டுகள் பணிபுரிவதற்கு வாய்ப்பு இருப்பதாக குறிப்பிட்டிருந்தார். அதுவும் சாத்தியமானதாகவே படுகின்றது.

ஆனால், தற்போதைய நிலையில் விஞ்ஞான, கணித, ஆங்கில, ஆரம்பக் கல்வி, தகவல் தொழில்நுட்ப ஆசிரியர்களுக்கான விண்ணப்பம் கோரப்பட்டுள்ளதாக அறிகின்றேன்.

அந்த விண்ணப்பத்தில் கோரியுள்ள நிபந்தனைகளின் அடிப்படையில் பார்க்கின்ற போது ஆளுநர் குறிப்பட்டவாறு அந்தந்த வலயங்களில் இருந்து ஆசிரியர்களை நியமனம் செய்வதற்கான வாய்ப்பு அரிதாகவே இருக்கப் போகின்றது.

அதாவது ஆரம்பக் கல்வி ஆசிரியர்களுக்கான விண்ணப்பதாரிகள் க.பொ.சாதாரணதரத்தில் சித்தி பெற்றிருப்பதுடன், உயர்தரத்திலும் குறிப்பிட்ட பிரமானங்களுக்கு அமைவாக சித்தி பெற்றிருக்க வேண்டும் என்பது ஏற்புடையதாகும்.

ஆனால் ஆங்கிலப் பாடத்தில் சாதாரணதரத்தில் சித்தி பெற்றிருக்க வேண்டும் எனக் கோருவது அவ்வலயங்களில் இருந்து ஆரம்பக் கல்வி ஆசிரியர்களைத் தெரிவு செய்வதில் அரிதான தண்மையை ஏற்படுத்துகின்றது.

ஏனெனில், மட்டக்களப்பு மேற்கு, கல்குடா, போரதீவுப் பற்றுப் பிரதேசம் போன்றவற்றில் ஆங்கிலம் கற்பிப்பதற்கான ஆசிரியர்கள் அக்காலத்தில் குறைவாகவே காணப்பட்டனர்.

எனவே அக்காலத்தில் க.பொ.த. சாதாரணதரத்தில் திறமையாக சித்திகள் பெற்றிருந்தாலும் ஆங்கிலப் பாடத்தில் சித்தி பெறுவதென்பது மிகக் கடினமாகவே அமைந்திருந்தது.

அந்த விடயத்தில் அக்காலத்தில் பரீட்சையில் தோன்றிய பரீட்சாத்திகளில் குற்றம் சாட்டுவதை விட போதிய ஆங்கில ஆசிரியர்களை வழங்காமல் இருந்தமையே காரணமாகக் காட்ட முடியும்.

எனவே ஆங்கிலத்தில் சித்தியினைக் கோருவதைத் தவிர்த்து நியமனம் பெற்று இரண்டு, மூன்று ஆண்டுகளுக்குள் ஆங்கிலத்தினைச் சாதாரண தரத்தில் சித்தி பெற்றுத் தரவேண்டும் என்ற நிபந்தனையை விதிப்பது பொருத்தமாக இருக்கும் என நினைக்கின்றேன்.

ஆங்கில ஆசிரியர்களுக்கான நியமனத்திற்கு க.பொ.த உயர்தரத்தில் மூன்று பாடங்களில் ஒன்றாக ஆங்கிலத்தை ஒரு பாடமாகக் கொண்டிருக்க வேண்டும் என்பதும் குறித்த வலயங்களில் உள்ள எந்தவொரு விண்ணப்பதாரிக்கும் பொருத்தமற்றதாகும்.

சாதாரணதரத்திலே ஆங்கிலத்தில் சித்தியடைவது முயல்கொம்பாக இருந்த நிலையில் உயர்தரத்தில் அவ்வலய மாணவர்கள் ஆங்கிலத்தில் சித்தி பெறுவதென்பது நடைமுறைச் சாத்தியமற்றது என்பதை மாகாண அதிகாரிகள், நிர்வாகிகள் சாதாரணமாகவே அறிந்திருப்பார்கள்.

அதேவேளை ஆங்கில ஆசிரியர்களுக்கான நிபந்தனையில் உயர்தரத்தில் ஆங்கிலம் எடுக்காது விட்டால் சாதாரண தரத்தில் ஆங்கிலம், ஆங்கில இலக்கியம் என்பவற்றில் திறமைச் சித்தி அல்லது அதி திறமைச் சித்தி பெற வேண்டும் என நிபந்தனை விதிக்கப்பட்டுள்ளது.

குறித்த வலயத்தில் சாதாரண தரத்தில் ஆங்கில இலக்கியம் எடுத்திருப்பதென்பது முற்றிலும் சாத்தியமற்ற தொன்றாகும் எனவே அவ்வலயத்தில் உள்ள விண்ணப்பதாரிகள் ஆங்கில ஆசிரியர்களாக வருவதென்பது மிகவும் கடினமானதாகவே இருக்கும்.

குறித்த வலயங்களில் 1 ஏ.பி பாடசாலைகள் மிகவும் அண்மிய காலத்திலேயே ஆரம்பிக்கப்பட்டிருந்தன. இதனால் விஞ்ஞான, கணித நெறிகளில் உயர்தரத்தில் கற்றுத் தேறிய விண்ணப்பதாரிகள் இருப்பதற்கான சாத்தியம் குறைவு.

அவ்வாறு சித்தி பெற்றிருந்தாலும் அவற்றை வைத்துக் கொண்டு பல்கலைக்கழகத்திற்கோ, தேசிய கல்வியியல் கல்லூரிக்கோ அல்லது வேறு டிப்ளோமா கற்கை நெறிகளுக்கோ அவ்வாறான விஞ்ஞான, கணிதப் பிரிவில் உயர்தரத்தில் சித்தியடைந்தவர்கள் சென்றிருப்பார்கள் எனவே கணித, விஞ்ஞான ஆசிரியர்களாக விண்ணப்பிப்பதற்கு கணித, விஞ்ஞானப் பிரிவில் குறித்த வலயங்களில் கல்வி கற்றுத் தேறியவர்கள் மிக மிகக் குறைவாகவே இருப்பர்.

எனவே க.பொ.த சாதாரணதர பரீட்சையில் கணிதம் அல்லது விஞ்ஞானத்தில் அதிவிசேட சித்தி அல்லது அதி திறமைச் சித்தி பெற்றவர்கள், வணிகப் பிரிவில் அல்லது கலைப் பிரிவில் கற்றிருந்தாலும் பரவாயில்லை என்ற அடிப்படையில் நிபந்தனைகளை விதிப்பதே அவ்வலயங்கள் சார்ந்தவர்களில் இருந்து ஆசியர்களை தேர்தெடுப்பதற்கு வாய்ப்பாக அமையும்.

மேற்படி நிபந்தனைகளை அப்பிரதேசங்களுக்கு ஏற்ற விதத்தில் நெகிழ்வான போக்கில் தளர்த்துவதன் மூலமாகவே கிழக்கு மாகாண ஆளுநர் விருப்புகின்ற ஆசிரியர்களை குறித்த அந்த வலயங்களில் இருந்து தெரிவு செய்ய முடியும்.

ஆளுநரின் கருத்தான அந்த அந்த பிரதேசங்களில் உள்ள விண்ணப்பதாரிகளில் இருந்து ஆசிரியர்களை தேர்ந்தெடுத்தல் என்ற விடயம் நடைமுறைச் சாத்தியமானதாக அமைந்தால் தான் நீண்ட காலத்திற்கு அப்பிரதேசங்களின் கல்வி அபிவிருத்தியை மேற்கொள்ள முடியும்.

மாறாக தற்போது ஆசிரியர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நிபந்தனைகள் என்பது வேறு வலயங்களில் இருந்து, அல்லது வேறு மாவட்டங்களில் இருந்து ஆசிரியர்களை இறக்குமதி செய்து மீண்டும் குறித்த சில ஆண்டுகளில் அவர்களது பிரதேசங்களுக்கு ஏற்றுமதி செய்வது போன்று தான் அமையும்.

கடந்த காலத்தில் கஷ்ட, அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளின் வெற்றிடங்களை மையமாக வைத்து நியமனங்களைப் பெற்ற பிற வலயத்தவர்கள், பிற மாவட்டத்தினர் நியமனம் பெற்று மிகக் குறுகிய காலத்தில் தத்தமது பிற மாவட்டங்களுக்கு தற்காலிய இடமாற்றம் பெற்றுச் சென்றனர்.

ஆனால் அவர்களின் பெயர்கள் கஷ்ட, அதிகஷ்ட பிரதேச பாடசாலைகளில் வேலை செய்வது போன்று ஆளணி பட்டியலில் காண்பிக்கப்பட்டிருந்தது. இதனால் வெற்றிடங்கள் மறைக்கப்பட்டிருந்தன.

பின்னர் தற்காலிக இடமாற்றம் பெற்றவர்கள் நிரந்தர இடமாற்றங்களைப் பெற்று பிறமாவட்டங்களுக்கே சென்று விட்டனர். இதனால் கல்குடா, மட்டக்களப்பு மேற்கு பொன்ற வலயங்கள் தொடர்ந்தும் ஆசிரியர் பற்றாக்குறையுள்ள வலயங்களாகவே செய்யப்பட்டிருந்தன.

அதே வேளை மட்டக்களப்பு வலயம், கல்முனை வலயம், சம்மாந்துறை வலயம் போன்ற வலயங்களில் அளவுக்கதிகமான ஆசிரியர்கள் நிரப்பப்பட்டிருந்தனர்.

சில வலயங்களில் மிகைநிரம்பலும், குறித்த சில வலயங்களில் பற்றாக்குறையினை ஏற்படுத்தக் கூடிய விதத்திலேயே மாகாணக் கல்வி நிர்வாகம் செயற்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும் என தெரிவித்துள்ளார்.