ஐ.நா மனிதவுரிமை ஆணையாளரைச் சினம் கொள்ளச் செய்த வடக்கு ஆளுநர்?

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

நான் தெரிவித்த கருத்தினை இலங்கையின் வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தவறாக புரிந்து கொண்டு கருத்து வெளியிட்டுள்ளார் என ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணையாளர் Michelle Bachelet தெரிவித்துள்ளார்.

இலங்கை அரசாங்கத்திற்கு எதிராக ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அலுவலகத்தின் அறிக்கையில் உள்ள சில விடயங்களை எவ்வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும், அதிக பொறுப்புணர்ச்சி மற்றும் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகர் அவருடைய இரு முக்கிய அதிகாரிகளுக்கு அறிவுரை வழங்கியதாகவும் ஆளுநர் சுரேன் ராகவன் ஊடகம் ஒன்றிற்கு வழங்கிய நேர்காணலில் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் பேசியுள்ள ஐ.நா மனிதவுரிமை ஆணையாளர்,

மனித உரிமை பேரவைக்கு நான் சமர்பித்த எழுத்து மற்றும் வாய்மூல கூற்றுக்கள் விடயத்தில் நான் திடமாக இருக்கிறேன். அக்கூற்றுக்கள் இலங்கையின் தற்போதைய நிலைமையை மிகச் சரியாக பிரதிபலிக்கின்றன.

இலங்கை அரசின் பிரதிநிதிகள் குழுவினருடன் மேற்கொண்ட கலந்துரையாடலில் நான் கூறிய கருத்துக்கள் திரிக்கப்பட்டுள்ளமை என்னை மிகவும் கவலை கொள்ளச் செய்துள்ளது.

ஜெனிவாவில் நடைபெறும் ஐ.நா. மனித உரிமைப் பேரவையில் கூறப்படும் விடயங்களை பாரிய விதத்தில் தவாறாக எடுத்துரைப்பு செய்யும் போக்கை இலங்கை பத்திரிகைகள் தொடர்கின்றன.

ஐ.நா. மனித உரிமை உயர்ஸ்தானிகராலயத்தின் அறிக்கையின் பிரதிகளை, அது பிரசுரிக்கப்படுவதற்கு முன் பேரவையின் 47 அங்கத்தவ நாடுகளினதும் வேண்டுகோளின் அடிப்படையில் இலங்கை அரசுக்கும் பகிரப்பட்டுள்ளது.

அறிக்கையை இறுதி மாற்றங்களுடன் பிரசுரிக்கப்படுவதற்கு முன் இலங்கை அரசின் கருத்துக்கள் கவனத்திற்கொள்ளப்பட்டதுடன், கடந்த பெப்ரவரி மாதம் ஐ.நா. மனித உரிமைகள் ஆணைக்குழுவின் முக்கிய உயர் அதிகாரிகளைக் கொண்ட பிரிதிநிதிகள் குழுவொன்று இலங்கைக்கு மேற்கொண்ட விஜயத்தின் போது அவர்கள், இலங்கை அரசின் பல உயரதிகாரிகளை சந்தித்து அறிக்கையின் விடயங்கள் தொடர்பாக மிக விரிவான கலந்துரையாடல்களை மேற்கொண்டமை குறிப்பிடத்தக்கது.

ஐ.நா. மனித உரிமை பேரவையின் 30/1 (2015) மற்றும் 34/1 (2017) தீர்மானங்களை செயற்படுத்த இலங்கை அரசாங்கத்திற்கும் அதன் மக்களுக்கும் ஒத்துழைப்பு வழங்க நானும் எனது அதிகாரிகளும் மிகுந்த அர்ப்பணிப்புடன் இருக்கின்றோம்.

கடந்த வாரம் மேற்கொள்ளப்பட்ட மற்றுமொரு தீர்மானத்தின் (40/1) போது, நான்கு ஆண்டுகளுக்கு முன்பு இலங்கை அரசு வாக்களித்த சில விடயங்களை பூர்த்தியாக செயற்படுத்த மேலும் இரண்டு ஆண்டுகள் கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.

அத்துடன், 2009 ஆண்டு முடிவுக்கு வந்த மோதல்களின் போது நடைபெற்ற பாரிய மனித உரிமை மீறல்களுக்கான பொறுப்புக்கூறல் மற்றும் நியாயம் வழங்குதல் தொடர்பான தமது கடப்பாடுகளை நிறைவேற்றுவது சம்பந்தப்பட்ட முன்னெடுப்புக்களில் இலங்கை அரசு மீள்கவனம் செலுத்த வேண்டும்.

என்ன நடந்தது என்ற விடயம் தொடர்பான உண்மைகளை நிலைநிறுத்தவும், நல்லிணக்கத்தை மேம்படுத்தவும் தேவையான தமது பொறுப்புக்களை நிறைவேற்ற இலங்கை அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று குறிப்பிட்டுள்ளார்.