கோத்தபாயவை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தயாராக வேண்டும்

Report Print Steephen Steephen in அரசியல்

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவை ஜனாதிபதியாக பதவிக்கு கொண்டு வரும் போராட்டத்தில் எந்த கருத்து வேறுபாடும் இன்றி தான் முன்னணியில் இருப்பதாக ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் ஜோன் செனவிரத்ன தெரிவித்துள்ளார்.

இரத்தினபுரியில் நேற்று செய்தியாளர்களிடம் கருத்து வெளியிடும் போதே அவர் இதனை கூறியுள்ளார்.

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் கோரிக்கைக்கு அமைய மக்களுக்கு சேவை செய்ய எண்ணி நல்லாட்சி அரசாங்கத்தில் இணைந்துக்கொண்டேன்.

எனினும் ஆறு, ஏழு மாதங்களில் அந்த எதிர்பார்ப்பு இல்லாமல் போனது. இதனால், மகிந்த ராஜபக்சவின் தலைமையை ஏற்றுக்கொண்டு அரசாங்கத்தில் இருந்து விலகினேன்.

தற்போது நான் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் அங்கம் வகித்து வருகின்றேன். நாட்டை கட்டியெழுப்பக் கூடிய அடுத்த தலைவர் கோத்தபாய ராஜபக்ச என்பதால், அவரை ஜனாதிபதியாக தெரிவு செய்ய தயாராக வேண்டும் எனவும் ஜோன் செனவிரத்ன குறிப்பிட்டுள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் மைத்திரி அணியில் அங்கம் வகித்து வந்த ஜோன் செனவிரத்ன, சுசில் பிரேமஜயந்த, லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன உட்பட சில முக்கியமான நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்ச அணியான ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவில் இணைந்து செயற்பட்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.