யதார்த்தமான அரசியல் நிலைமைக்கு தமிழ் தேசிய தலைமைகள் முன்வர வேண்டும்

Report Print Kumar in அரசியல்

மக்களை தொடர்ந்து உசுப்பேற்றி மக்களிடம் வாக்குகேட்கும் வேலைத்திட்டங்களை மட்டும் செய்வதை விட்டுவிட்டு யதார்த்தமான அரசியல் நிலைமைக்கு தமிழ் தேசிய தலைமைகள் முன்வர வேண்டும் என தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சியின் பொதுச்செயலாளர் பூ.பிரசாந்தன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மட்டக்களப்பு - கல்லடி, உப்போடையில் இன்று காலை தமிழ் மக்கள் விடுதலைப் புலிகள் கட்சியினால் 100 மக்களுக்கு பணிமனை திறந்து வைக்கப்பட்டுள்ளது.

இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளதோடு தொடர்ந்தும் அவர் உரையாற்றுகையில்,

மட்டக்களப்பு மாவட்டத்தில் அரசியல் தெளிவு இல்லாத காரணத்தினால் தான் வருபவர்கள் போவர்கள் எல்லாம் எங்களை ஏமாற்றிக் கொண்டுள்ளனர்.

இன்று வரவு செலவு திட்டம் தொடர்பிலும் ஐ.நா.மனித உரிமைகள் பேரவை தொடர்பிலும் பல வாதப்பிரதிவாதங்கள் ஊடகங்களில் சென்று கொண்டிருக்கின்றது.

2015ஆம் ஆண்டு ஆட்சியதிகாரத்தினைப் பெறும் போது தமிழ் தேசிய கூட்டமைப்பும், நல்லாட்சி அரசாங்கமும் பல வாக்குறுதிகளை வழங்கினார்கள். ஆனால் இன்று வரையில் எதனையும் நிறைவேற்றவில்லை.

தொடர்ந்தும் சர்வதேசத்தினைக் காட்டி வாக்கு கேட்கும் நிலையே இருந்து வருகின்றது. அன்று இந்தியாவினை காட்டி வாக்குகேட்டார்கள், இன்று ஐ.நாவினை காட்டி வாக்கு கேட்டு வருகின்றனர்.

இதே தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு ஆதரவு தெரிவித்த ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன சர்வதேச பொறிமுறைக்குள் இல்லாமல் உள்ளூர் பொறிமுறைக்குள் தான் தீர்வுகாண முடியும் என தெளிவாக கூறிவிட்டார்.

ஆனால் அரசாங்கத்திற்கு முட்டுக்கொடுத்துக் கொண்டிருக்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் நாட்டில் சர்வதேச விசாரணை நடைபெறும், குற்றவியல் நீதிமன்றில் இலங்கையை நிறுத்துவோம் இல்லாதுவிட்டால் ஆயுதக் கலாச்சாரமாக மாறும் என்று கூறிக் கொண்டிருக்கின்றனர்.

மக்களை தொடர்ந்து உசுப்பேற்றி மக்களிடம் வாக்குகேட்கும் வேலைத்திட்டங்களை மட்டும் செய்வதை விட்டுவிட்டு யாதார்த்தமான அரசியல் நிலைமைக்கு தமிழ் தேசிய தலைமைகள் முன்வர வேண்டும்.

இந்த நிலையில் அரசுக்கு முட்டுக்கொடுக்கும் நோக்குடன் வரவு செலவுத் திட்டத்திற்கு எந்தவித நிபந்தனையும் இல்லாமல் தொடர்ச்சியாக ஆதரவு வழங்கி வருகின்றது.

அம்பாறை மாவட்டத்தில் நீண்டகாலமாக கல்முனை தமிழ் பிரதேச செயலகத்தினை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கை முன்வைக்கப்பட்டு வருகின்றது. முஸ்லிம் அரசியல் தலைமைகள் தங்களது பகுதிகளில் தமக்கான தனி கல்வி வலயங்களையும், பிரதேச செயலகங்களையும் அமைத்துக்கொண்டு வருகின்றனர்.

இந்த நிலையில் வரவு செலவு திட்டத்தில் ஆணி வேராக இந்த அரசாங்கம் நம்பியிருப்பது தமிழ் தேசிய கூட்டமைப்பையாகும். தமிழ் தேசிய கூட்டமைப்பு இம்முறை மக்களை ஏமாற்றாமல் திடமான முடிவினை எடுக்க வேண்டும்.

கல்முனையில் தனியான தமிழ் பிரதேச செயலகம் அமைக்கப்பட வேண்டும். கல்முனை தமிழ் மத்தி கல்வி வலயம் அமைப்பதற்கும் தமிழ் தேசிய கூட்டமைப்பு முன்வர வேண்டும். அதனையும் சாக்கு போக்கு சொல்லி இழுத்தடித்துவிட்டு வரவு செலவுத் திட்டத்திற்கு கையை உயர்த்திவிட்டு வந்தால் எதுவும் நடக்க மாட்டாது.

இம்முறை பேரம்பேசும் சக்தி தமிழ் மக்களுக்கு கிடைத்துள்ளது. இம்முறை அரசாங்கத்தின் வரவு செலவுத் திட்டத்தினை தீர்மானிக்கின்ற பலம் இருக்கின்றது. அந்த பலத்தினை பாவிக்க வேண்டும். அதற்காகவே தமிழ் மக்கள் தமிழ் தேசிய கூட்டமைப்புக்கு வாக்களித்தனர்.

இன்று மாகாணசபைகள் மக்கள் ஆட்சியற்ற நிலையில் பல்வேறு கஷ்டங்கள் எதிர்நோக்குகின்றது.

இன்று மாகாணசபை தேர்தல் நடாத்துவதில் ஐக்கிய தேசிய கட்சியும் தமிழ் தேசிய கூட்டமைப்புமே தடையாகவுள்ளது. மக்களுக்கு வழங்கிய வாக்குறுதிகளை நிறைவேற்றாத காரணத்தினால் எதனைக்கொண்டு மக்களிடம் வாக்கு கேட்டுச்செல்வது.

கிழக்கு மாகாணத்தில் எதனையும் தமிழ் தேசிய கூட்டமைப்பு செய்யவில்லை.மக்களுக்கு எதனையும் செய்யாத நிலையில் திராணியற்றவர்களாக மக்களிடம் செல்லமுடியாத நிலையில் உள்ளனர்.

மக்களை தொடர்ந்து ஏமாற்றி வரும் தமிழ் அரசியல் தலைவர்களின் போலி முகங்கள் எதிர்வரும் வரவு செலவு திட்டத்தில் வெளியே தெரியவரும்.

கிழக்கு மாகாணசபை தேர்தல் உடனடியாக நடாத்தப்பட வேண்டும். அவ்வாறு நடாத்தப்படும் போது தான் மக்கள் ஆட்சி மலரும் என தெரிவித்துள்ளார்.