வெளிநாட்டில் சிறைவைக்கப்பட்டுள்ள தமிழ் அகதிக்கு இரத்த புற்றுநோய்! 10 ஆண்டுகளாக தொடர்ந்து தவிப்பு

Report Print Nivetha in அரசியல்

இலங்கையில் நிலவும் பாதுகாப்பற்ற சூழல் காரணமாக அந்நாட்டிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் தஞ்சமடைந்த சிவகுரு நவநீதராசா இரத்த புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளார்.

இந்நிலையில், அவரை உடனடியாக விடுதலை செய்ய வேண்டும் என ஆஸ்திரேலிய அரசுக்கு தமிழ் ஏதிலிகள் கழகம் கோரிக்கை விடுத்துள்ளது.

கடந்த 2009ஆம் ஆண்டு போருக்கு பின்னர் சிவகுரு நவநீதராசா இலங்கையிலிருந்து வெளியேறி ஆஸ்திரேலியாவில் படகு வழியாக தஞ்சமடைந்திருக்கிறார்.

அப்போது அவரை கிறிஸ்துமஸ் தீவு முகாமில் தடுத்து வைத்த ஆஸ்திரேலிய அரசு, பின்னர் வில்லாவுட் தடுப்பு முகாமிற்கு மாற்றியது.

அதன் பிறகு, கடந்த 2016 முதல் மெல்பேர்ன் குடிவரவு இடைமாற்று மையத்தில் அவர் வைக்கப்பட்டுள்ளார். 2010ம் ஆண்டு ராஜனுக்கு அகதி அந்தஸ்து கிடைத்த நிலையில், ASIO எனப்படும் ஆஸ்திரேலிய பாதுகாப்பு புலனாய்வு அமைப்பு அவரை பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான நபராக அடையாளப்படுத்தியிருக்கின்றது.

ஆனால், அம்முடிவினை 2016ல் ரத்து செய்த போதிலும் அவருக்கான பாதுகாப்பு விசா வழங்கப்படவில்லை. இதையடுத்து 2017யில் காமன்வெல்த் மற்றும் குடிவரவு தீர்ப்பாயம் வெளியிட்ட அறிக்கையில், ராஜனின் தற்காலிக பாதுகாப்பு விசா விண்ணப்பத்துக்கு முன்னுரிமை அளிக்குமாறு பரிந்துரை செய்திருந்தது.

அத்துடன் அவரது உடல்நிலையும் மனநிலையும் மோசமான நிலையில் இருப்பதையும் அத்தீர்ப்பாயம் சுட்டிக்காட்டியிருந்தது.

ஆனால், ஆஸ்திரேலிய குடிவரவுத்துறை இதனை கருத்தில் கொள்ளாமல் அந்த விண்ணப்பத்தை நிராகரித்ததாக கூறப்படுகின்றது.

இந்த நிராகரிப்பைத் தொடர்ந்து ஆஸ்திரேலிய நிர்வாக மேல்முறையீட்டு தீர்ப்பாயத்தில் மேல்முறையீடு செய்துள்ள ராஜன், தீர்ப்பாயத்தின் முடிவினை எதிர்நோக்கியிருக்கிறார்.

இந்த நிலையிலேயே அவர் ரத்தப் புற்றுநோயால் பாதிக்கப்பட்டுள்ளமை தெரிய வந்துள்ளது. அவரை தொடர்ந்து இந்த நிலையில் வைத்திருப்பது ராஜனுக்கு மோசமான உடல்நல பாதிப்பை ஏற்படுத்தும் என ராஜனின் குடும்பமும் நண்பர்களும் அஞ்சுவதாக கூறியுள்ள தமிழ் ஏதிலிகள் கழகம் அவரை விடுவிக்கவும் கோரிக்கை விடுத்திருக்கின்றது.

இதேவேளை, 45 வயதான ராஜன, தனது வாழ்வின் ஐந்தில் ஒரு பங்கை ஆஸ்திரேலிய தடுப்பு முகாம்களில் கழித்துள்ளார் என்பதும் குறிப்பிடத்தக்கது.