நான் சொன்னதை தவறாக அர்த்தப்படுத்திவிட்டார்கள்! வருத்தம் தெரிவித்தார் வடக்கு ஆளுநர்

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

என்னுடைய நேர்காணலின் சில பகுதிகள் துருதிஷ்டவசமாக, மொழியாக்கம் அல்லது தெரியாத காரணங்களால், உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது வருத்தத்துக்குரியது என வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன் தெரிவித்துள்ளார்.

ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் இணைக்கப்பட்டுள்ள சில விடயங்கள்“ தவறானவை என்றும் அதனை மன்னிக்க முடியாது என்றும் ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பசெலெட் அம்மையார் தம்மிடம் ஒப்புக்கொண்டார் என, அரசதரப்பு குழுவின் உறுப்பினரான வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன், கூறியதாக கொழும்பு ஊடகம் ஒன்று செய்தி வெளியிட்டிருந்தது,

இந்நிலையில், இது தொடர்பில் மறுப்பு அறிக்கை வெளியிட்டிருந்த ஐக்கிய நாடுகள் சபையின் மனிதவுரிமைகள் ஆணையாளர், வழக்கமான நடைமுறைகளின் படி, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கை, வெளியிடப்படுவதற்கு முன்னர் இலங்கை அதிகாரிகளுடன் பகிர்ந்து கொள்ளப்பட்டது.

அறிக்கை இறுதி செய்யப்படுவதற்கு முன்னர், இலங்கை அரசாங்கத்தின் கருத்துக்கள் உள்வாங்கப்பட்டன. கடந்த பெப்ரவரி மாதம் இலங்கைக்குப் பயணம் மேற்கொண்டிருந்த ஐ.நா மனித உரிமைகள் ஆணையத்தின் இரண்டு மூத்த அதிகாரிகள், பரந்துபட்ட கலந்துரையாடல்களை அதிகாரிகளுடன் நடத்தியிருந்தனர்.

பொறுப்புக்கூறல் முக்கியமானது. தண்டனையில் இருந்து தப்பிக்கும் நிலை தொடர்வதானது, சமூக அல்லது இனங்களுக்கிடையிலான வன்முறைகளையும், உறுதியின்மையையும், ஊக்குவிக்கிறது. இந்த பிரச்சினையைத் தீர்த்து, குற்றவாளிகளை நீதியின் முன் நிறுத்துவது, பாதிக்கப்பட்ட எல்லா சமூகங்களின் மத்தியிலும் நம்பிக்கையை கட்டியெழுப்புவதற்கு அவசியமானது.

மனித உரிமை மீறல்கள் தொடர்பாக நீதி மற்றும் பொறுப்புக்கூறல் கடப்பாடுகளை நிறைவேற்றுவதில் இலங்கை அரசாங்கம் இப்போது கவனம் செலுத்த வேண்டும், தமது வாக்குறுதியை மதித்து, நல்லிணக்கத்தை ஊக்குவிக்கும் வகையில் என்ன நடந்தது என்ற உண்மையை வெளிப்படுத்த வேண்டும்.

இலங்கை தொடர்பான அறிக்கை சரியானதே, அந்த நிலைப்பாட்டில் உறுதியாக இருக்கின்றோம். எமது அறிக்கையில் எந்தத் தவறும் இல்லை என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில் இது தொடர்பில் அறிக்கை வெளியிட்டுள்ள வடக்கு மாகாண ஆளுநர் சுரேன் ராகவன்,

ஐ.நா மனித உரிமை ஆணையாளருடனான சந்திப்புத் தொடர்பாக, தாம் கூறிய விடயங்கள் உள்ளூர் ஊடகங்களில் தவறாக மேற்கோள்காட்டப்பட்டு, தவறாக பிரசுரிக்கப்பட்டுள்ளன.

ஜெனிவாவில் இருந்து திரும்பிய பின்னர் நடத்திய செய்தியாளர் சந்திப்பில், நேர்காணலின் சில பகுதிகள் துருதிஷ்டவசமாக, குறிப்பாக ஆங்கில ஊடகத்தில், மொழியாக்கம் அல்லது தெரியாத காரணங்களால், உண்மையான அர்த்தத்தை இழந்து விட்டது வருத்தத்துக்குரியது.

எல்லா கலந்துரையாடல்களும் முழுமையான இருதரப்பு ஆதரவுடன் இடம்பெற்றன. மனித உரிமை ஆணையாளர் பசெலெட் அம்மையார் முன்மாதிரியான இராஜதந்திர ஒழுங்கையும் திறன்களையும் வெளிப்படுத்தியவர். அவரை நான் மிகவும் மதிக்கிறேன் என்றார்.