சம்பந்தன் தலைமையிலான கூட்டமைப்பை சந்திக்க நேரம் ஒதுக்காத மைத்திரி

Report Print Rakesh in அரசியல்

ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைச் சந்திப்பதற்கு இரா.சம்பந்தன் தலைமையிலான தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் நேற்று அனுமதி கோரியிருந்தபோதும், அவர்களைச் சந்திப்பதற்கு ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன நேரம் ஒதுக்கவில்லை. அதையடுத்து இன்று ஜனாதிபதியைச் சந்திப்பதற்குத் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு திட்டமிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகவும், சமகால அரசியல் நிலவரம் தொடர்பாகவும் ஜனாதிபதியை இன்று (நேற்று) சந்திக்கத் திட்டமிட்டுள்ளோம் என்று நேற்று நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார்.

எனினும் சந்திப்புக்கான நேரத்தை ஜனாதிபதி ஒதுக்காத காரணத்தால் அந்தச் சந்திப்பு நடைபெறவில்லை என்று அறியமுடிந்தது.

இன்று மாலை 3 மணியளவில் வடக்கு, கிழக்கு மாகாண அபிவிருத்திக்கான விசேட ஜனாதிபதி செயலணிக் கூட்டம் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தலைமையில் நடைபெறவுள்ளது. அந்தக் கூட்டத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் பங்கேற்கவுள்ளது.

அந்தக் கூட்டத்தின் பின்னர் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவைத் தனித்துச் சந்தித்துப் பேச்சு நடத்த தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினர் திட்டமிட்டுள்ளனர்.

அதேவேளை, வடக்கு, கிழக்கு அபிவிருத்தி தொடர்பாகப் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுக்கும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கும் இடையே நேற்றுமுன்தினம் நாடாளுமன்றக் கட்டடத் தொகுதியில் சந்திப்பு நடைபெற்றது.

அதில் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் போரால் பாதிக்கப்பட்ட மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வேலைத்திட்டங்களுக்காக 2 ஆயிரத்து 500 மில்லியன் ரூபாவைப் பயன்படுத்துவது தொடர்பில் ஆராயப்பட்டது என்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

Latest Offers