பதிலடி கொடுக்க தயாரா? த.தே.கூட்டமைப்பிற்கு சவால் விடும் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்

Report Print Vamathevan in அரசியல்

ஜனாதிபதியை தீர்மானிப்பதில் தமிழ் பேசும் மக்களே இராஜதந்திர முடிவுகளை உள்ளார்ந்தமாக ஏற்படுத்த வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியின் தலைமையகத்தில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின் போதே இவ்வாறு கருத்து தெரிவித்துள்ளார். மேலும் தெரிவிக்கையில்,

மீண்டும் மைத்திரிபால சிறிசேனவை ஜனாதிபதியாக்குவதன் மூலம் முழுமை அடையும் என்ற நம்பிக்கை உணர்வு தமிழர்களிடம் ஏற்பட்டுள்ளது.

எதிர்வரும் ஜுலை அல்லது ஆகஸ்ட் மாதத்தில் தேசிய மாநாடொன்றை ஜனாதிபதி தலைமையில் நடத்த திட்டம் உள்ளது.

ஸ்ரீலங்கா சுதந்திர கட்சியானது இன, மத, மொழிகளுக்கு அப்பாற்பட்ட ஒரே ஒரு தேசிய கட்சி. ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம் ஸ்தாபிக்கப்பட்டுள்ளமை வரலாற்றில் முதன்மையான நிகழ்வாகும்.

ஸ்ரீலங்கா சுதந்திர தமிழர் ஒன்றியம், தேசிய கட்சி ஊடாக சிறுபான்மையினரை ஒன்றிணைத்து அவர்களின் அபிலாசைகளுக்கும் முக்கியத்துவமளித்து செயற்படுவது வரலாற்று பதிவாகும்.

ஜெனிவாவில் தமிழர் விடயத்தில் இவ் அரசு கபடத்தனத்தை காட்டி விட்டதாக புலம்பும் தமிழ் தேசிய கூட்டமைப்பினர் மக்கள் நலன் இன்றிய இந்த வரவு செலவு திட்டத்தை எதிர்த்து வாக்களிப்பதன் மூலம் அதற்கு பதிலடி கொடுக்க தயாரா?

மாறாக முழுமையான ஆதரவையே அவர்கள் வழங்க உள்ளனர். மக்களின் இறைமைகளை தொடர்ந்தும் அடகு வைத்து தமது நலன்களை முன்னிறுத்தி செயற்பட்டு வருகின்றது.

ஜனநாயகம், உரிமை குறித்து வசை பாடும் இவர்களினால் மாகாணசபையின் தேர்தலை கூட நடத்த முடியாதுள்ளனர்.

எனவே எவ்வாறு மக்களின் உரிமைகளுக்காகவும், ஜனநாயகத்திற்கும் குரல் கொடுக்க முடியும். எனவே உணர்ச்சி அரசியல் வேண்டாம், நாட்டை பிளவுபடுத்துகின்ற அரசியல் வேண்டாம், எதிர்கால எமது சந்ததியினரின் வறுமையினையும், கல்வியினையும், பொருளாதாரத்தினையும் அபிவிருத்தி செய்யும் உணர்வுபூர்வமான நோக்கினை கொண்டதாக அரசியலை முன்னெடுக்க வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Latest Offers