இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிற்கு விடுத்துள்ள அறிவிப்பு

Report Print Steephen Steephen in அரசியல்

வரவு செலவுத் திட்டத்தின் இறுதி வாக்கெடுப்பின் போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எதிராக வாக்களிக்கவில்லை என்றால், புதிய கூட்டணியை ஏற்படுத்தும் நோக்கில் அந்த கட்சியுடன் நடத்தும் பேச்சுவார்த்தையில் இருந்து விலகிக்கொள்ள வேண்டும் என கூட்டு எதிர்க்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள், எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்சவுக்கு அறிவித்துள்ளதாக அரசியல் தரப்புத் தகவல்கள் தெரிவிக்கின்றன.

ஐக்கிய தேசியக் கட்சிக்கு எதிரான அரசியல் கூட்டணியை ஏற்படுத்த பேச்சுவார்த்தை நடத்தி வரும் வேளையில், ஐக்கிய தேசியக் கட்சியின் அரசாங்கத்தை பாதுகாக்க முயற்சிகள் மேற்கொள்ளப்படுமாயின், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியுடன் தொடர்ந்தும் பேச்சுவார்த்தை நடத்துவதில் எந்தப் பயனும் இல்லை என இந்த நாடாளுமன்ற உறுப்பினர்கள் மகிந்த ராஜபக்சவிற்கு அறிவித்துள்ளனர்.

தற்போதைய சந்தர்ப்பத்தில் ஆத்திரப்படாமல் பொறுமையாக அரசியலில் ஈடுபட வேண்டும் என என சுட்டிக்காட்டியுள்ள எதிர்க்கட்சித் தலைவர், அரசாங்கத்திற்கு எதிரான சகல அரசியல் அணிகளை இணைந்துக்கொண்டு , நாடாளுமன்றத்திலும் அதற்கு வெளியிலும் அரசாங்கத்தை விமர்சித்து, எப்படியாவது தேர்தல் ஒன்றை பெற்றுக்கொள்ள முயற்சிக்க வேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

கடந்த திங்கட் கிழமை நாடாளுமன்றத்தில் நடைபெற்ற பேச்சுவார்த்தையின் போது, கூட்டு எதிர்க்கட்சியின் இளம் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த விடயம் தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவரிடம் தெளிவுப்படுத்தியுள்ளனர் எனவும் கூறப்படுகிறது.