சரித்திர பாடங்களை கற்றுணர்ந்து செயற்படாவிட்டால் தரித்திரம் என்பது தொடர் கதையே

Report Print Navoj in அரசியல்
65Shares

சரித்திரம் தந்த பாடங்களைக் கற்றுணர்ந்து செயற்படாவிட்டால் தரித்திரம் என்பது தொடர் கதையாகவே இருக்கப் போகின்றது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் ஞானமுத்து ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று இடம்பெற்ற வரவு செலவுத் திட்ட விவாதத்தின் அபிவிருத்தி உபாய முறைகள் மற்றும் சர்வதேச வர்த்தக அமைச்சுக்கான விடயதானங்கள் தொடர்பிலான விவாத வேளையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இதன் போது அவர் மேலும் தெரிவிக்கையில்,

வடக்கு மற்றும் கிழக்குப் பகுதியில் 30 ஆண்டுகள் யுத்தம் நடைபெற்றது. அதனைக் காரணமாகக் கொண்டு மட்டக்களப்பில் உள்ள பல தொழிற்சாலைகள் மூடப்பட்டன, முடக்கப்பட்டன.

யுத்தம் முடிவடைந்து 10 ஆண்டுகள் கடந்தும் எந்தவொரு தொழிற்சாலையும் மீளமைக்கப்படவுமில்லை, திறக்கப்படவும் இல்லை. தற்போது பல கோரிக்கைகளைத் தொடர்ந்து வாழைச்சேனை காகித ஆலையினை மீண்டும் செயற்பட வைப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டுள்ளது. அம் முடிவு துரிதப்படுத்தப்பட வேண்டும்.

தென்கொரியா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இந்தக் காகித ஆலையை அமைப்பதில் 2016ஆம் ஆண்டுகளில் இருந்தே ஆர்வம் காட்டி வந்தன.

வெளிநாட்டு முதலீட்டாளர்கள் வருவதற்கு எமது அபிவிருத்திக் கதவுகளை அமைச்சர் திறந்துவிட வேண்டும். அதேவேளை தேவபுரம் அரிசி ஆலை, மண்டூர் ஓட்டுத் தொழிற்சாலை, இலுப்படிச்சேனை ஓட்டுத் தொழிற்சாலை, கும்புறுமூலை அரச அச்சகம் போன்றவை ஆரம்பிக்கப்பட்டு சில காலம் அல்லது ஆரம்பிக்கப்பட்டவுடனேயே மூடப்பட்டு விட்டன.

இந்த நிலையில் தொழில் வாய்ப்புக்கள் இல்லாமல் இளைஞர் யுவதிகள் விரக்தியின் விளிம்பில் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். பட்டதாரிகள் கூட பட்டச் சான்றிதழ்களைப் பெற்றிருந்தும் 40, 45 வயதுகளைக் கடந்த நிலையில் ஏமாற்றம் அடைந்த நிலையிலுள்ளனர். இது நாட்டுக்கு நல்ல சகுணமாகத் தெரியவில்லை.

யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பல பிரதேசங்கள் அபிவிருத்திக்காக வளங்களுடன் காத்துக் கிடக்கின்றன.

குறிப்பாக வாகரை, கிரான், கரடியனாறு, வவுணதீவு, பட்டிப்பளை, வெல்லாவெளி போன்ற அதிகமாக யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட பிரதேசங்களில் மக்கள் மத்தியில் வறுமை தாண்டவமாடிக் கொண்டிருக்கின்றது.

மட்டக்களப்பு மாவட்டம் வறுமைத் தரவரிசையில் 03ஆவது இடத்தில் உள்ளது.

மேலும், 11.4 வீதமான மக்கள் வறுமையின் கோரப் பிடிக்குள் சிக்கியுள்ளனர். எனவே, இந்தப் பிரதேசங்களில் காணப்படுகின்ற வளங்களை அடிப்படையாகக் கொண்டு சாத்திய வள ஆய்வுகளை மேற்கொண்டு பொருத்தமான தொழிற்சாலைகளை அமைக்க வேண்டிய தேவையினை அரசாங்கம் உரத்த சிந்தனைக்கு உட்படுத்தி செயற்படுத்த வேண்டும்.

யுத்தம் முடிந்து 10 ஆண்டுகள் கடந்தும் கைத்தொழில் அபிவிருத்திகள் என்பது நத்தை வேகத்தோடு போட்டி போட்டுக் கொண்டிருக்கின்றது.

மேலும், வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் மொத்தமாக நாட்டில் உள்ள தொழிற்சாலைகளில் ஒரு வீதத்திலும் குறைவான தொழிற்சாலைகளே காணப்படுகின்றன.

அதே போன்று ஆலைத் தொழிலாளிகள் வடக்கு மற்றும் கிழக்கில் 02 வீதத்திலும் குறைவாகவே காணப்படுகின்றனர். ஆயின், வடக்கு மற்றும் கிழக்குப் பிரதேசங்களில் தொழிற்சாலைகள் இன்மை, தொழில் வாய்ப்புகள் இன்மை பாரிய சமூகப் பொருளாதாரப் பிரச்சினைகளாகத் தலைத்தூக்கி நிற்கின்றது.

கடந்த ஆட்சியாளர்கள் யுத்தத்தின் பின்னர் 06 ஆண்டுகளை வடக்கு மற்றும் கிழக்கில் அபிவிருத்திகள் செய்யாமல் வீண்விரயம் செய்துள்ளனர். அதே போன்று தற்போதைய ஆட்சியாளர்கள் மூன்றரை வருடங்களாக கைத்தொழில் அபிவிருத்தியில் கவனம் செலுத்தாமல் கரிசனையின்றி இருக்கின்றனர்.

ஆயின், வடக்கு அல்லது கிழக்கில் காணப்படுகின்ற வறுமை நிலைக்கு இவையும் காரணங்களாக உள்ளன.

கடந்த காலத்தில் இரண்டு வகையான புரட்சிகளை இந்த நாடு அனுபவித்து பாடங்களைக் கற்றுக் கொண்டுள்ளது. போராட்டங்கள் முடிந்தாலும் போராட்டங்களுக்கான காரணங்கள் அப்படியே இருந்து கொண்டிருக்கின்றன.

சரித்திரம் தந்த பாடங்களைக் கற்றுணர்ந்து செயற்படாவிட்டால் தரித்திரம் என்பது தொடர் கதையாகவே இருக்கப் போகின்றது. எனவே சர்வதேச வர்த்தக அமைச்சர் வடக்கு கிழக்கு மாகாணங்களில் கூடுதலான கரிசனை செலுத்தி அபிவிருத்தியை உத்வேகப்படுத்த வேண்டும்.

மீண்டும் மீண்டும் இளைஞர் யுவதிகளின் மனங்களில் விரக்தி விதைகளை விதைத்து விபரீதமான பாதையில் அவர்களைக் கொண்டு செல்வதற்கு வழிவகுக்கக் கூடாது.

மண்முனைப் பற்றுப் பிரதேசத்தில் ஆடைத் தொழிற்சாலையொன்று சர்வதேச வர்த்தக அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் முயற்சியினால் ஸ்தாபிக்கப்பட்டுள்ளது.

அதனை வரவேற்கின்றோம். அதற்கு தொழிலாளர்கள் தொலைதூரங்களில் இருந்து எடுத்து வரப்படுகின்றனர்.

ஆனால் தொழிலாளர்கள் அதிகமாக உள்ள இடங்களில், முன்பு யுத்தமாக இருந்த வலயங்களில் ஏன் தொழிற்சாலைகளை நிறுவுவதில் பின்னடிப்புச் செய்கின்றீர்கள். மக்களை நாடியும், நிலவளமுள்ள பிரதேசங்களை நாடியும் தொழிற்சாலைகள் நிறுவப்பட வேண்டும்.

இன்னும் காலங்களைக் கடத்தாமல் விரைந்து செயற்படுங்கள். மக்கள் அரசாங்கத்தினை பல அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் தெரிவு செய்திருந்தனர். அதற்கான நன்றிக்கடன்களுக்காகயினும் தொழிற்சாலைகளைத் திறவுங்கள், தொழில்களை வழங்குங்கள்.

இன்னும் இருக்கின்ற ஒன்றரை வருடங்களைத் திட்டமிட்டுச் செயற்படுங்கள்.

அதே போன்று இராணுவக் கட்டுப்படற்ற வலயம், இராணுவக் கட்டப்பாடுள்ள வலயம் என்று இரண்டு நிலத் துண்டங்களாகக் காணப்பட்ட பிரதேசங்களை வாவியின் குறுக்கே பாலங்களை அமைப்பதன் மூலம் இரண்டு பிரதேசங்களையும் புவியியல் ரீதியாக இணைத்து விடுங்கள்.

நரிப்புல்தோட்டம், சந்திவெளி, மண்டூர், கிண்ணையடி, அம்பிளாந்துறை, கிரான் போன்ற பாலங்களை விரைந்து செயற்பட்டு அமைப்பதற்கான நடவடிக்கைகளை எடுங்கள்.

2016இல் வரவு செலவுத் திட்டத்தின் போது வழங்கப்பட்ட உத்தரவாதங்கள் செத்துக் கிடக்கின்றன. அவற்றை உயிர்ப்பிக்குமாறும் கேட்டுக் கொள்கின்றேன் என்று தெரிவித்துள்ளார்.