நியூசிலாந்து பிரதமரின் துணிகரமான செயற்பாடுகளுக்கு அமைச்சர் ரிஷாத் பாராட்டு!

Report Print Gokulan Gokulan in அரசியல்

அமைச்சர் ரிஷாத் பதியுதீனின் கீழான திறன் அபிவிருத்தி மற்றும் தொழில் பயிற்சி அமைச்சின் வேலைத்திட்டங்களுக்கும், செயற்பாடுகளுக்கும் நியூசிலாந்து பல்வேறு உதவிகளை வழங்குமென உயர்ஸ்தானிய தூதுவர் ஜோயன்னா கெம்ப்கெர்ஸ் உறுதியளித்துள்ளார்.

நாடாளுமன்றத்தில் இன்று அமைச்சர் ரிஷாத் பதியுதீனுடன் இடம்பெற்ற சந்திப்பின் போதே அவர் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.

வடக்கில் மீளக்குடியேறுவோரின் வசதிகளை மேம்படுத்துவதற்கும் ஒத்துழைப்பு வழங்குவதாகவும் தெரிவித்துள்ளார்.

இதன்போது அமைச்சர் ரிஷாத் பதியுதீன் மேலும் தெரிவிக்கையில்,

நியூசிலாந்தில் இடம்பெற்ற பள்ளிவாசல் படுகொலைகள் மிகவும் மனவறுத்ததிற்குரியது. அந்த சம்பவம் எங்களுக்கு கவலை தருகிறது.

இந்த சம்பவம் நடந்தவுடன் நியூசிலாந்து பிரதமர் ஜெசிந்தா ஆர்டர்ன் மேற்கொண்ட பாதுகாப்பு நடவடிக்கைகளும், சிறுபான்மை மக்கள் மீது குறிப்பாக முஸ்லிம் மக்கள் மீது காட்டிய பரிவு எமக்கு ஆறுதல் அளிக்கின்றது.

நியூஸிலாந்து பிரதமரின் இந்த உடனடி செயற்பாடுகளையும் அவரது துணிச்சலையும் இலங்கையர்களாகிய நாம் பாராட்டுவதோடு நன்றிகளையும் தெரிவிக்கின்றோம்.

இதன்போது எதிர்வரும் காலங்களில் நியூசிலாந்தில் இவ்வாறான சம்பவங்கள் இடம்பெறாத வகையில் முற்காப்பு நடவடிக்கைகளும், விழிப்பான செயற்பாடுகளும் மேற்கொள்ளப்பட வேண்டுமென அமைச்சர் ரிஷாத், உயர்ஸ்தானிகரிடம் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

திறன் அபிவிருத்தி அமைச்சின் மூலம் இளைஞர்களினதும், யுவதிகளினதும் திறன்களை வளர்ப்பதற்கும் அதன் மூலம் தொழில் இல்லாத பிரச்சினைகளை குறைப்பதற்கும் நியூசிலாந்து உதவ வேண்டும் என அமைச்சர் விடுத்த வேண்டுகோளை ஏற்றுக்கொண்ட உயர்ஸ்தானிகர் நியூசிலாந்து இலங்கைக்கு வேண்டிய அனைத்து உதவிகளையும் வழங்குவதற்கு தயாராக இருப்பதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

இந்தியா, பங்களாதேஸ் நாடுகளின் உயர்ஸ்தானியராகவும் கடமையாற்றும் இவர், நேபால் நாட்டிலும் நியூசிலாந்துக்கான தூதுவராகவும் பணியாற்றி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.