இந்தியா மீது கடுமையான குற்றச்சாட்டுக்களை முன்வைத்துள்ள வடக்கு கிழக்கின் முன்னாள் முதல்வர்!

Report Print S.P. Thas S.P. Thas in அரசியல்

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை. அதனை தடுக்கும் முயற்சிகளையே அவர்கள் செய்து வருகின்றனர் என இணைந்த வடக்கு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சர் வரதராஜப்பெருமாள் குற்றம் சாட்டியுள்ளார்.

யாழ்ப்பணத்தில் உள்ள அவரது இல்லத்தில் இன்று செய்தியாளர்களுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். இதன்போது பேசிய அவர்,

தமிழ் மக்கள் சர்வதேச விசாரணையை வலியுறுத்தி வரும் நிலையில் அவ்வாறான ஒரு விசாரணையை இந்தியா விரும்பவில்லை. அதனை தடுக்கும் முயற்சிகளையே அவர்கள் செய்து வருகின்றனர்.

இந்திய அரசு தனது தேசிய பாதுகாப்பினையும் நலனையும் கருத்திற்கொண்டே செயற்படுகின்றது. தமிழ் மக்களின் நலனை இந்தியா கவனிக்கவில்லை. இதனால் சர்வதேச விசாரணைக்கு இந்தியா எந்த விதத்திலும் உதவாது. மாறாக அதனைத் தடுப்பதில் மும்முரமாக பணியாற்றும் என்பதே உண்மை.

இதேவேளை, இலங்கை தொடர்பான விடயம் ஜெனிவாவில் பேசப்படும்போது, இந்தியா 13 ஆவது திருத்தச் சட்டத்தை முழுமையாக நடைமுறைப்படுத்துங்கள் என்றே கூறி வருகின்றது. இதனையே ஆரம்பகாலத்தில் இருந்து கூறி வருகின்றது. இதற்கு அப்பால் ஏனைய விடயங்களில் இந்திய அரசு கவனம் செலுத்துவதில்லை. அதற்காக அவர்கள் தயாராகவும் இல்லை என்றார்.