வெளிநாடுகளில் கல்வி கற்கும் த.தே.கூட்டமைப்பு எம்.பிக்களின் பிள்ளைகளும், சொந்தங்களும்! ஆனால்...

Report Print Rakesh in அரசியல்

ரணில் விக்ரமசிங்க தலைமையிலான ஐக்கிய தேசிய முன்னணி அரசை தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களே பாதுகாத்து வருகின்றதாக நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

அவர்களை எதிர்வரும் பொது தேர்தலில் தமிழ் மக்கள் விரட்டியடிக்க வேண்டும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசியல் நிலவரம் தொடர்பாக தமிழ் ஊடகம் ஒன்றுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில், தமிழ் தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்கள் தமிழ் மக்களை ஏமாற்றி சுகபோக அரசியலை மேற்கொண்டு வருகின்றனர்.

அவர்கள் ரணில் அரசின் பல கோடி ரூபாக்களுக்கு விலை போய் வரவு - செலவுத் திட்டத்தை ஆதரித்துள்ளார்கள்.

அதனால் தமிழ் மக்களுக்கு எவ்வித பிரயோசனமும் இல்லை. தமிழ் தேசிய கூட்டமைப்பு நாடாளுமன்ற உறுப்பினர்களின் பிள்ளைகள், அவர்களின் சொந்தங்கள் வெளிநாடுகளில் கல்வி கற்கின்றனர்.

ஆனால், கூட்டமைப்பினரை நாடாளுமன்றத்துக்கு அனுப்பிய தமிழ் மக்களின் பிள்ளைகள் வடக்கு, கிழக்கில் கொட்டில்களில் கல்வி கற்கின்றனர்.

இதுதான் இன்றைய நிலைமை. உள்நாட்டிலும் வெளிநாட்டிலும் புலி வேசம் போட்டு ஆடித் திரியும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பினரின் உண்மை முகத்தை எதிர்வரும் பொதுத் தேர்தலில் தமிழ் மக்கள் கிழித்து காட்ட வேண்டும்.

அவர்களுக்குத் தக்க பாடத்தை தமிழ் மக்கள் புகட்ட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.