கோத்தபாயவின் குடியுரிமையை இரத்துச் செய்ய முடியுமா?

Report Print Steephen Steephen in அரசியல்

கோத்தபாயவின் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய முடியுமா என்பதை அந்நாட்டு ராஜாங்க திணைக்களத்திடமே கேட்க வேண்டும் என ஸ்ரீலங்கா சுதந்திரக்கட்சியின் பொதுச் செயலாளர் தயாசிறி ஜயசேகர தெரிவித்துள்ளார்.

கொழும்பில் உள்ள சுதந்திரக் கட்சியின் தலைமையகத்தில் இன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் ராஜபக்ச மீது நாங்கள் மிகவும் மரியாதை வைத்திருக்கின்றோம். நபர் என்ற வகையில் நான் அவருக்கு மரியாதை கொடுப்பவன். கட்சி என்ற ரீதியிலும் அவர் மீது மரியாதை உள்ளது.

இலங்கையில் அவர் ஒரு வேலைத்திட்டத்தில் இறங்கும் போது, அதற்கு தடையேற்படுத்தும் வகையில் அமெரிக்காவில் வழக்கு தொடரப்பட்டுள்ளதா என்பது குறித்து நாம் ஆராய வேண்டும்.

அது சிவில் வழக்கு. குற்றவியல் வழக்கு அல்ல. ஆனால், குற்றவியல் பற்றியும் பேசப்படும் என்று நான் படித்த செய்திகளில் இருந்தன. இதனால், ஏற்பட போகும் எதிர்கால நிலைமைகள் பற்றி எமக்கு தெரியாது.

அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்வதில் இதனால், தடையேற்படுமா என்பதை அமெரிக்க ராஜாங்க திணைக்களத்தில் முன்னெடுக்கப்படும் வேலைகள் மூலமே அறிந்துக்கொள்ள முடியும்.

உண்மையில் இந்த வழக்கு அமெரிக்க பிரஜை ஒருவருக்கு எதிராக தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அமெரிக்க பிரஜை ஒருவருக்கு இந்த தொடர்பான விடயத்தில் சட்ட ரீதியான பாதிப்புகள் பற்றி தனியாக பேச வேண்டும்.

அமெரிக்க குடியுரிமை இல்லாத காலத்தில் இந்த வழக்கு தொடரப்பட்டிருந்தால், அது வேறு விதமான பாதிப்பை ஏற்படுத்தும்.

குற்றச்சாட்டு பதியப்பட்டுள்ள நிலையில், கோத்தபாய ராஜபக்சவின் அமெரிக்க குடியுரிமையை இரத்துச் செய்ய முடியுமா என்பதை நாங்கள் அமெரிக்க ராஜாங்க திணைக்களத்திடமே கேட்க வேண்டும் எனவும் தயாசிறி ஜயசேகர குறிப்பிட்டுள்ளார்.