மெல்ல உடைகின்றது கை - மொட்டுக் கூட்டு!

Report Print Rakesh in அரசியல்

கடந்த ஒக்டோபர் மாதம் ஏற்பட்ட அரசியல் மாற்றத்தின் ஊடாக இணைந்து கொண்ட ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணிக்கும் இடையே தற்போது முரண்பாடுகள் வலுப்பெற்றுள்ளன. இரு கட்சியைச் சேர்ந்தவர்களும் ஒருவரை ஒருவர் கடுமையாகத் தாக்கிக் கருத்துக்களை வெளியிட்டு வருகின்றனர்.

அதனால் எதிர்வரும் தேர்தல்களில் அந்த இரு கட்சியினரும் கூட்டு வைத்துப் போட்டியிடுவது சந்தேகத்துக்கிடமான விடயமாக மாறியுள்ளது

நேற்றுமுன்தினம் சர்வதேச ஊடகம் ஒன்றிடம் கருத்துத் தெரிவித்திருந்த ஸ்ரீலங்கா சுந்திரக் கட்சியின் தலைவரும் ஜனாதிபதியுமான மைத்திரிபால சிறிசேன, இலங்கையில் மீண்டும் சர்வாதிகார ஆட்சிக்கு இங்குள்ள மக்கள் இனிமேல் இடமளிக்க மாட்டார்கள். நாமும் அதற்கு இடமளிக்க மாட்டோம்" என்று கூறியிருந்தார்.

அத்துடன், நான்தான் தற்போது ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவராகவும் ஜனாதிபதியாகவும் பதவி வகிக்கின்றேன். எமது கட்சியின் அடுத்த ஜனாதிபதி வேட்பாளர் தொடர்பில் நானே இறுதி முடிவெடுப்பேன். எமது கட்சி வேறு கட்சிகளுடன் கூட்டுச் சேர்ந்து போட்டியிடுவது குறித்தும் நானே இறுதித் தீர்மானம் எடுப்பேன் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்.

இந்நிலையில், ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு தொடர்பாக எதிர்க்கட்சித் தலைவர் மஹிந்த ராஜபக்ச விரைவில் அதிரடி அறிவிப்பு வெளியிடுவார் என்று மஹிந்த ராஜபக்ஷவின் ஆதரவு பெற்ற கட்சியான ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தவிசாளர் ஜி.எல்.பீரிஸ் நேற்று தமிழ் ஊடகம் ஒன்றிடம் தெரிவித்துள்ளார்.

வரவு - செலவுத் திட்டத்தை தோற்கடித்து ரணில் அரசைக் கவிழ்க்கும் அரிய சந்தர்ப்பம் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தான்தோன்றித்தனமான செயலால் தவறவிடப்பட்டுள்ளது.

வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் சபையிலிருந்து ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் வெளியேறியிருந்தமையை நாம் எந்தச் சந்தர்ப்பத்திலும் ஏற்றுக்கொள்ளமாட்டோம்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி - ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணி ஆகியன ஓர் இணக்கப்பாட்டுக்கு வரும் வகையில் இரு தரப்பும் பேச்சு நடத்தியிருந்தோம்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தலில் கூட்டணி அமைத்து போட்டியிடுவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தி இருந்தோம். ஆனால், முடிவு எதுவும் எட்டப்படாமல் இருந்தது.

வரவு - செலவுத் திட்டம் மீதான இறுதி வாக்கெடுப்பில் கலந்துகொள்ளாமல் மறைமுகமாக ரணில் அரசுக்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினர் ஆதரவு வழங்கியுள்ளனர்.

எந்த முகத்துடன் இனிமேல் சுதந்திரக் கட்சியினர் எம்முடன் பேச்சு நடத்தப் போகின்றார்கள்?

சுதந்திரக் கட்சியினரின் பொறுப்பற்ற செயலால் அவர்களுடன் கூட்டணி அமைக்க வேண்டாம் என ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியில் உள்ள உறுப்பினர்கள் பலரும் கூறுகின்றனர்.

ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி எமக்குப் பெரிய கட்சி அல்ல என்பது இதனூடாகப் புலப்படுகின்றது. ஜனாதிபதித் தேர்தல், நாடாளுமன்றத் தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் ஆகியவற்றில் ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் நிலைப்பாடு தொடர்பில் எதிர்க்கட்சித் தலைவர் மகிந்த ராஜபக்ச விரைவில் அதிரடி அறிவிப்பை வெளியிடுவார் என்று ஜி.எல்.பீரிஸ் தெரிவித்துள்ளார்.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் யாரை வேட்பாளராகக் களமிறக்குவது தொடர்பாக ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியினருக்கும், மஹிந்த ராஜபக்ச ஆதரவு அணியினருக்கு இடையேயும் முரண்பாடுகள் அண்மைக்காலமாக ஏற்பட்டிருந்தன.

எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் மீண்டும் களமிறங்குவதற்கு மைத்திரி சிறிசேன திட்டமிட்டுள்ளார் என்று சுதந்திரக் கட்சி வட்டாரங்கள் கூறுகின்றன. ஆனால், மஹிந்த ராஜபக்ச தரப்பினரோ ராஜபக்ச குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரே வேட்பாளராக வேண்டும் என்று வலியுறுத்தி வருகின்றனர்.

இரு கட்சிகளும் ஏட்டிக்குப் போட்டியாகக் கருத்துக்கள் வெளியிட்டுவரும் நிலையில் எதிர்வரும் தேர்தலில் இரு கட்சிகளும் கூட்டாகக் களமிறங்கும் சாத்தியங்கள் குறைந்துள்ளன என்று அரசியல் நோக்கர்கள் கூறுகின்றனர்.

Latest Offers