கோத்தாவுக்கு எதிராக அமெரிக்காவில் களமிறங்கிய தமிழரின் விபரம் லண்டனில் வெளியானது

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கை சிறைகளில், நான் பார்த்த காட்சிகள் அங்கிருந்த யுவதிகள், இளைஞர்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை போன்றவைகளை என்னால் தற்போது நினைத்துப் பார்க்க முடியும், அந்த முகங்களை நான் இன்னும் மறக்கவில்லை என முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவுக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் தெரிவித்துள்ளார்.

இலங்கை சிறைகளில் பெண்கள் பாலியல் வன்முறைகளிற்கு உட்படுத்தப்படுவது வழமையான விடயம் எனவும் குறிப்பிட்டுள்ளார்.

லண்டனில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

நான் பார்த்த பல விடயங்களை நான் இன்னமும் மறக்கவில்லை, நான் பார்த்த காட்சிகள் அங்கிருந்த யுவதிகள் இளைஞர்கள் பாலியல் சித்திரவதைக்கு உட்படுத்தப்பட்டமை போன்றவைகளை என்னால் தற்போதும் நினைத்து பார்க்க முடியும். அந்த முகங்களை நான் மறக்கவில்லை, அவர்களிற்கு என்ன நடந்தது என்பதையும் நான் மறக்கவில்லை.

அவர்கள் எனக்கு கைவிலங்கிட்டு கொழும்பிலுள்ள டி.ஐ.டி தலைமையகத்திற்கு கொண்டு சென்றார்கள் அங்கு என்னை தனிமையில் அடைத்துவைத்தார்கள்.

அவர்கள் என்னை சட்டத்தரணிகள் எவரும் சந்திப்பதற்கு அனுமதிக்கவில்லை, நான் கனடா பிரஜை என்பதால் கனடா தூதரக அதிகாரிகளை மாத்திரம் என்னை சந்திப்பதற்கு அனுமதித்தார்கள்.

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழ் நான் தடுத்து வைக்கப்பட்டிருந்ததால் என்னை எந்த வழக்கறிஞரும் பிரதிநிதித்துவம் செய்யமுடியாது. பயங்கரவாத தடைச்சட்டம் என்பது சட்டவிரோதமானது ஜனநாயக நாடுகள் ஏற்றுக்கொள்ளாதது.

என்னை ஒரு வருடகாலத்திற்கு மேல் தடுத்து வைத்திருந்தார்கள், அவர்கள் என்னிடமிருந்து வாக்குமூலத்தை பெற்றனர். அதனை எழுதுமாறு கேட்டனர்.

அந்த வாக்குமூலத்தை பயன்படுத்தியே என்மீது குற்றச்சாட்டுகளை சுமத்திய பின்னர் என்னை உயர்நீதிமன்றத்திற்கு கொண்டுசென்றனர்.

இராணுவ தளபதியையும் அமைச்சர்களையும் முக்கிய பிரமுகர் ஒருவரையும் கொலை செய்வதற்கு சதி செய்ததாக அவர்கள் குற்றம் சுமத்தினார்கள்.

என்னை அதன் பின்னர் மூன்று வருடங்கள் தடுத்து வைத்திருந்தார்கள். விடுதலையான பின்னர் ஜெனீவா சென்று வழக்கு தாக்கல் செய்தேன். 2015இல் வெற்றிபெற்றேன்.

எனக்கு நஸ்டஈடு வழங்கவேண்டும் என பரிந்துரைக்கப்பட்டுள்ளது. ஆனால் எதுவும் இடம்பெறவில்லை, ஆகவே நான் சிவில் நீதிமன்றில் வழக்கு தாக்கல் செய்துள்ளேன் மேலும் பலர் இதற்கு முன்வருவார்கள் என கருதுகின்றேன்.

நான் கடும் மன அழுத்தம் உளவியல் அழுத்தத்திற்கு உள்ளாகியுள்ளமை மருத்துவ பரிசோதனைகளின் போது தெரியவந்துள்ளது. இது எனது குடும்பத்தை, மனைவி, குழந்தைகளையும் பாதித்துள்ளது. அவர்கள் நான் கைதுசெய்யப்பட்டு அழைத்துச்செல்லப்படுவதை பார்த்தார்கள்.

இலங்கை சிறையிலிருந்தவேளை மனிதாபிமானமற்ற நடவடிக்கை என்றால் என்பதை நான் அறிந்தேன்.

இதுவரை எவரும் பொறுப்புக்கூறச் செய்யப்படவில்லை, இதன் காரணமாக நான் நீதிக்கான முதல் நடவடிக்கையை எடுத்துள்ளேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

எனது நடவடிக்கை இலங்கையில் உள்ள சித்திரவதை செய்யப்பட்டவர்களிற்கு நம்பிக்கையை அளிக்கும் எனவும் அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

Latest Offers