கோத்தபாயவை கண்டு அஞ்சி நடுங்கும் விடுதலைப் புலிகள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

பாதுகாப்பு அமைச்சின் முன்னாள் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் அரசியல் பயணத்தால் ஐக்கிய தேசியக் கட்சியும் தமிழீழ விடுதலைப் புலிகளும் அஞ்சி நடுங்குகின்றன என நாடாளுமன்ற உறுப்பினர் விமல் வீரவன்ச தெரிவித்துள்ளார்.

எதிர்க்கட்சி அலுவலகத்தில் நேற்றைய தினம் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றும்போதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

அமைச்சர்கள் ஐவரும் ஊடகவியலாளர் ஒருவருமே கோத்தாவுக்கு எதிரான சூழ்ச்சிகளை மேற்கொண்டு வருகின்றனர்.

அண்மையில் அமைச்சர் சஜித் பிரேமதாஸவுக்கு கண்டியில் வைத்து உயரிய விருது வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.

அதன் பின்னர் அமைச்சர் மலிக் சமரவிக்ரமவின் வீட்டில் முக்கிய கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளது. இதில் நிதி அமைச்சர் மங்கள சமரவீர, சபாநாயகர் கரு ஜயசூரிய ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர். ஆங்கில ஊடகவியலாளர் ஒருவரும் கலந்து கொண்டிருந்தார்.

அமெரிக்க குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கான ஆவணங்களை கோத்தபாய சமர்ப்பித்ததும் அவருக்கு எதிராக அமெரிக்காவில் வழக்குத் தொடர்வதற்கு இந்தக் கலந்துரையாடலில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இதற்கு அமைச்சர் சாகல ரத்னாயக்கவின் உதவிகளும் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளன.

இவ்வாறு வழக்குத் தொடர்வதால் அமெரிக்கக் குடியுரிமையை நீக்கிக்கொள்வதற்கு காலந்தாழ்த்தப்படலாம் என இவர்கள் நினைக்கின்றார்கள்.

எனினும், அமெரிக்காவில் உள்ள கோத்தாவின் சட்டத்தரணிகள் குழு குடியுரிமை நீக்கிக்கொள்வதில் அவருக்கு எந்தவொரு சிக்கலும் இல்லை என எடுத்துரைத்துள்ளது என குறிப்பிட்டுள்ளார்.