சரத் பொன்சேகாவின் கையில் சிக்கும் கோத்தாவின் குடுமி! சூடு பிடிக்கும் அரசியல் களம்

Report Print Jeslin Jeslin in அரசியல்

முன்னாள் இராணுவத் தளபதி பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவிற்கு உள்துறை அமைச்சர் பதவியை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் பிரஜாவுரிமை உள்ளிட்ட விவகாரங்களை கையாள்வதற்காக அவருக்கு இந்த அமைச்சுப் பதவி வழங்கப்படவுள்ளதாக அறிய முடிகின்றது.

பிரதமர் ரணில்விக்ரமசிங்க தலைமையில் இடம்பெற்ற சிரேஸ்ட அமைச்சர்களின் சந்திப்பில் இது குறித்து முடிவெடுக்கப்பட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

பிரதமர் அலுலகம் சரத்பொன்சேகாவிற்கு இது குறித்து அறிவித்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

தற்போது, உள்துறை அமைச்சுக்கு மேலதிகமாக உள்நாட்டு விவகார அமைச்சையும், அமைச்சர் வஜிர அபேவர்த்தன வைத்திருக்கிறார்.

உள்நாட்டு விவகார அமைச்சே, குடியுரிமை தொடர்பான விவகாரங்களை கையாளுகிறது. குடியுரிமை வழங்குதல், இரட்டைக் குடியுரிமை வழங்குதல் ஆகியவற்றைத் தீர்மானிக்கும் பொறுப்பு இந்த அமைச்சுக்கே இருக்கிறது.

இந்நிலையில், கோத்தபாய ராஜபக்ச அமெரிக்க குடியுரிமையை கைவிட்டு விட்டு, இலங்கை குடியுரிமையை பெற்றால் தான், அதிபர் தேர்தலில் போட்டியிட முடியும்.

அமெரிக்க குடியுரிமையைக் கைவிட விண்ணப்பித்துள்ள கோத்தபாய ராஜபக்ச, அடுத்து இலங்கை குடியுரிமையை மாத்திரம் கொண்டுள்ளார் என்பதை, உள்நாட்டு விவகார அமைச்சின் மூலம் உறுதி செய்ய வேண்டும்.

இந்த நிலையிலேயே, உள்நாட்டு விவகாரங்களுக்கான அமைச்சராக பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகாவை நியமிக்க ஐக்கிய தேசியக் கட்சி தீர்மானித்துள்ளது.

இதனால், கோத்தபாய ராஜபக்சவின் குடியுரிமை விவகாரத்தில் சரத் பொன்சேகா தலையீடு செய்யவோ, செல்வாக்குச் செலுத்தவோ வாய்ப்புகள் இருப்பதாக கருதப்படுகிறது.

ஏற்கனவே அமெரிக்காவின் நீதிமன்ற வழக்குகளை எதிர்கொண்டுள்ள கோத்தபாய ராஜபக்சவுக்கு, இலங்கையிலும் குடியுரிமையை உறுதிப்படுத்துவதில் முட்டுக்கட்டைகள் ஏற்படலாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.