எங்கள் உறவுகளின் உரிமைக்காக குரல் கொடுக்கும் தமிழ்த் தேசிய மே நாள்

Report Print Arivakam in அரசியல்

தமது கைகளாலே தங்கள் கணவரை, மகனை, மகளை இராணுவத்திடம் ஒப்படைத்து விட்டு 10 ஆண்டுகள் கடந்தும் காணாமலாக்கப்பட்டவர்களை தேடித்தேடியே தம் தேகம் கரைக்கும் எங்கள் உறவுகளின் உரிமைக்காக ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் எழுச்சி நாளாகவே இவ்வாண்டுக்கான தமிழ்த் தேசிய மே நாள் அமைகிறதென நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

இவ்வாண்டுக்கான மே நாள் தொடர்பில் அவர் நேற்று வெளியிட்டிருந்த கடிதத்திலேயே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அக்கடிதத்தில்,

தமிழ் தேசியக் கூட்டமைப்பின் இவ்வாண்டுக்கான தமிழ் தேசிய மே நாள் வடக்கு மாகாணம் தழுவிய வகையில் ஒன்றுபடுவோம், போராடுவோம், உரிமைகளை வென்றெடுப்போம் என்ற தொனிப்பொருளில் எதிர்வரும் 2019.05.01ஆம் திகதி மாலை 2 மணியளவில் கிளிநொச்சி கந்தசுவாமி கோவில் முன்றலிலிருந்து எழுச்சிப் பேரணியாக புறப்பட்டு டிப்போச் சந்தியில் அமைந்துள்ள பசுமைப் பூங்காவைச் சென்றடைவதைத் தொடர்ந்து தமிழ் தேசிய எழுச்சியுடன் கூடிய மாபெரும் பொதுக் கூட்டமும் நடைபெறவுள்ளது.

தமது கைகளாலேயே தங்கள் கணவரை, மகனை, மகளை இராணுவத்திடம் ஒப்படைத்து விட்ட 10 ஆண்டுகள் கடந்தும் காணாமலாக்கப்பட்ட அவர்களைத் தேடித்தேடியே தம் தேகம் கரைக்கும் எங்கள் உறவுகளுக்கு நீதி வேண்டியும், சிறையின் இரும்புக் கரங்களுக்குள் அகப்பட்டு தமது வாழ்வின் விடியல் நோக்கிய வெளிச்சத்திற்காக ஏங்கி கொண்டிருக்கும் தமிழ் அரசியற் கைதிகளின் விடுதலைக்காகவும், தமது நிலங்களைப் பறிகொடுத்து, தொழிலுக்கும், வாழ்வுக்கும் அல்லாடும் எமது தொழிலாளர்களின் உரிமைக்காகவும் ஒன்றுபட்டு குரல் கொடுக்கும் எழுச்சி நாளாகவே இவ்வாண்டுக்கான தமிழ்த் தேசிய மே நாள் அமைகிறது.

உரிமைக் குரலெழுப்பும் இந்த மாபெரும் பேரணிக் கூட்டத்தில் கிளிநொச்சி, யாழ்ப்பாணம், வவுனியா, மன்னார், முல்லைத்தீவு மாவட்டங்களில் இருந்து வருகை தரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அரசியல் பிரமுகர்கள், மக்கள் பிரதிநிதிகள், தமிழ்த் தேசியத்தின் பால் பற்றுறுதி கொண்ட உறவுகள் அனைவரையும் இந்நிகழ்வில் கலந்து கொண்டு எமது கரங்களை பலப்படுத்துமாறு அறைகூவல் விடுக்கிறோம் என தெரிவித்துள்ளார்.