வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் காணிகளைக் கையேற்பதை நிறுத்த வேண்டும்

Report Print Gokulan Gokulan in அரசியல்

எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நேரடியாகவோ மறைமுகமாகவோ எமது காணிகளைக் கையேற்பதையும், வெளியார்களைக் குடியேற்றுவதையும் நிறுத்த வேண்டும் என முன்னாள் முதலமைச்சர் க.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

அவர் இன்று வெளியிட்டுள்ள புத்தாண்டு வாழ்த்துச் செய்திலேயே இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.

மேலும் அவர்,

சித்திரைப் புத்தாண்டைக் கொண்டாடி மகிழும் அனைத்து மக்களுக்கும் எனது புத்தாண்டு வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் மகிழ்ச்சி அடைகின்றேன்.

பிறக்கப்போகும் இப்புதிய விஹாரி ஆண்டில் அனைவரது வாழ்விலும் வளமும் நலமும் மேம்பட வேண்டும். அல்லற்படும் எம்மக்களின் பிரச்சினைகள் அகல வேண்டும்.

குறிப்பாக யுத்தத்தின் வடுக்களை சுமந்து நிற்கும் மக்களின் வாழ்வில் ஒளிபிறக்க வேண்டும்.

மேலும் காணாமற் போன தமது உறவுகள் பற்றி விபரங்கள் தேடுவோர் தம் வாழ்வில் அவர்களின் எதிர்ப்பார்ப்புக்கள் நிறைவடைய வேண்டும்.

மேலும் வேலையில்லாது தவிக்கும் எமது இளம் உறவுகளுக்கு வாழும் வழியை இறைவன் வகுத்துக் கொடுக்க வேண்டும். அரச படைகள் இவ்வாண்டில் எமது தாயக மண்ணில் இருந்து வெளியேற வேண்டும்.

எமது வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் அரசாங்கம் நேரடியாகவோ, மறைமுகமாகவோ எமது காணிகளைக் கையேற்பதையும், வெளியார்களை இவ்வாறான பல எதிர்பார்ப்புக்களுடன் இப்புதிய ஆண்டை வரவேற்பதில் உங்களுடன் நானும் இணைந்து கொள்கின்றேன்.

அழகிய இந்த இலங்கைத் தீவின் இருபெரும் தேசிய இனங்களும் ஒன்றாகக் கொண்டாடும் சிறப்பு மிக பாரம்பரியப் பண்டிகை புதுவருடப் பிறப்பாகும்.

இவ்வகையில் எம்முடன் தம்முறைப்படி புத்தாண்டைக் கொண்டாடும் பௌத்த மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.

இந்து, பௌத்தம் ஆகிய இருபெரும் மதங்களும் அன்பு, கருணை, ஜீவகாருண்யம், மனிதநேயம் என்பவற்றை முதன்மைப்படுத்துகின்றன.

இம்மதங்கள் காட்டும் மனிதத்துவத்தை நாம் யாவரும் வாழ்வில் கடைப்பிடிப்போமாக!

இரு மதங்களும் மனிதனுக்கு மறுபிறவி உண்டு என்பதை ஒத்துக் கொண்டுள்ளன.

ஆகவே இப் பிறப்பில் பௌத்தனாக இருப்பவன் மறுபிறப்பில் இந்துவாகவோ அல்லது இந்துவாக இருப்பவன் பௌத்தனாகவோ இத்தீவில் பிறக்கலாம் என்பதை இருமதங்களைப் பின்பற்றுபவர்கள் யாவரும் உணர்ந்து கொள்ள வேண்டும்.

உண்மையாக நாம் இம்மதங்களைப் பின்பற்றுவோமானால் எம்மிடையே மனிதநேயம் தானாகவே பிறக்கும்.

இப்புத்தாண்டு தமிழ் மக்களிடையே ஒற்றுமையையும், சிங்கள மக்களிடையே குறிப்பாக சிங்களத் தலைவர்களிடத்தே நல்ல மனமாற்றத்தையும் ஏற்படுத்தி அனைவரும் சம உரிமைகளுடன் வாழும் நிலைக்கு இப்புத்தாண்டு கால்கோள் அமைக்கும் என்ற நம்பிக்கையுடன் இப் புத்தாண்டைக் கொண்டாடும் சகலரையும் வாழ்த்தி மகிழ்கின்றேன் என தெரிவித்துள்ளார்.