மாகாணசபை தேர்தல் திருத்த அறிக்கை தொடர்பாக பிரதமரிடம் விடுக்கப்பட்டுள்ள கோரிக்கை

Report Print Ajith Ajith in அரசியல்
32Shares

மாகாணசபை தேர்தல் எல்லை நிர்ணய அறிக்கையை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழு, பிரதமர் ரணில் விக்ரமசிங்கவிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

இது தொடர்பில், தேர்தல்கள் ஆணைக்குழு பிரதமருக்கு கடிதம் ஒன்றை எழுதியுள்ளது.

இந்த அறிக்கையை பிரதமர் கையளித்த பின்னர் அது வர்த்தமானியில் பிரசுரிக்கப்பட்டால், மாகாணசபை தேர்தல்களை நடத்துவதற்கான தடைகள், நீங்கும் என்று தேர்தல்கள் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

இந்த அறிக்கையை பிரதமர், ஜனாதிபதியிடம் கையளிப்பாராக இருந்தால், அது ஜனநாயகத்தையும் மக்களின் அடிப்படை உரிமையையும் பலப்படுத்தும் செயலாக இருக்கும் என்றும் தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

புதிய கலப்பு முறையின் கீழ் மாகாணசபை தேர்தல்களை நடத்தும் முகமாக முன்னாள் நில அளவையாளர் கே.தவலிங்கத்தின் தலைமையில் எல்லை நிர்ணய சபை ஒன்று அமைக்கப்பட்டது.

இந்த சபையும் தமது அறிக்கையை சமர்ப்பித்திருந்தது.

எனினும் அந்த அறிக்கை, நாடாளுமன்றத்தில் தோற்கடிக்கப்பட்டது.

இதனையடுத்து பிரதமரின் தலைமையில் விசேட குழு ஒன்று அமைக்கப்பட்டு இரண்டு மாதக்காலங்களுக்குள் குறித்த அறிக்கையில் மாற்றங்களை மேற்கொள்ளுமாறு கேட்கப்பட்டது.

எனினும் தற்போது எட்டு மாதங்களாகியும் அந்த அறிக்கை ஜனாதிபதியிடம் சமர்ப்பிக்கப்படவில்லை.

இதன் காரணமாகவே மாகாணசபை தேர்தல்களை நடத்துவதில் தாமதம் ஏற்பட்டுள்ளது.