இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில்

Report Print Nesan Nesan in அரசியல்

இலங்கை தமிழரசு கட்சியின் 16வது தேசிய மாநாடு இம்முறை யாழ்ப்பாணத்தில் காங்கேசன்துறை - கீரிமலை பிரதேசத்தில் மிகவும் உணர்ச்சிபூர்வமாக இடம்பெறவுள்ளது.

இம் மாநாட்டில் தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட உள்ளதாக யாழ். மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவித்துள்ளார்.

திகாமடுல்ல மாவட்டம் சம்மாந்துறை தேர்தல் தொகுதி நாவிதன்வெளி பிரதேசத்தில் கட்சியின் மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் கூட்டம் நேற்று இடம்பெற்றுள்ளது.

சம்மாந்துறை தொகுதி தலைவரும் நாவிதன்வெளி பிரதேசசபை தவிசாளருமாகிய தவராசா கலையரசன் தலைமையில் இடம்பெற்ற கூட்டத்தினைத் தொடர்ந்து அங்கு இடம்பெற்ற மக்கள் சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்.

இவ்விடயம் தொடர்பில் மேலும் கருத்து தெரிவிக்கையில்,

தமிழரசு கட்சியின் தேசிய மாநாடு இம்முறை யாழ்ப்பாணம் காங்கேசன்துறை - கீரிமலை பிரதேசத்தில் இடம்பெறவுள்ளதுடன் அங்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினைகள் தொடர்பான முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படவுள்ளன.

இம் மாநாடானது கட்சியின் ஸ்தாபகரான தந்தை செல்வாவின் நினைவு தினத்துடன் 26ஆம் திகதி காலை ஆரம்பமாகி மாலை தமிழரசு கட்சியின் செயற்குழு கூட்டம் இடம்பெறும்.

தொடர்ந்து 27ஆம் திகதி புதிய நிர்வாகிகளை கொண்ட செயற்குழு கூடவுள்ளதுடன் மாலை மகளிர் அணி மாநாடு, இளைஞர் அணி மாநாடு என்பன இடம்பெற்று 28ம் திகதி காலையில் மாகாணங்களில் இருந்த கிடைக்கும் கோரிக்கைள் ஆராயப்பட்டு அன்றைய தினம் தமிழரசு கட்சியின் மாநாடு இடம்பெறவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

இக்கூட்டத்தில் தமிழரசு கட்சியின் செயலாளரும் முன்னாள் மாகாணசபை அமைச்சர் கே.துரைராஜசிங்கம், தேசிய பட்டியல் நாடாளுமன்ற உறுப்பினர் துரைரெட்ணசிங்கம், கட்சியின் உறுப்பினர்கள் ஆதரவாளர்கள் என பலரும் கலந்து கொண்டுள்ளனர்.