எவர் வந்தாலும் வழக்குத் தொடுப்பேன்! கோத்தா மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்த தமிழர் அதிரடி

Report Print Jeslin Jeslin in அரசியல்

தருணம் பார்த்திருந்து காந்திருந்து கோத்தபாய ராஜபக்ச மீது வழக்குத் தாக்கல் செய்துள்ளேன். தற்போது ஆட்சியில் உள்ள அரசாங்கம் இந்த விவகாரத்தைக் கணக்கிலெடுக்கவில்லை என கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவில் வழக்குத் தாக்கல் செய்துள்ள ரோய் சமாதானம் என்ற புலம்பெயர் தமிழர் தெரிவித்துள்ளார்.

அதனால்தான் கட்டளை அதிகாரிகளாகச் செயற்பட்ட பொலிஸ் மா அதிபரையோ அல்லது பாதுகாப்புச் செயலாளரையோ சட்டத்தின் முன்நிறுத்த முற்பட்டேன் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

ஊடகம் ஒன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

இங்கு அவர் தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

பாதுகாப்புச் செயலாளராக கோத்தபாய இருந்தபோது அவரை ஒன்றுமே செய்ய முடியவில்லை. காரணம், அதிகாரம் அவரைக் காப்பாற்றி விடும்.

அமெரிக்காவுக்கு வந்து வந்து போனபோதிலும் சரியான தருணம் வாய்க்கவில்லை. இம்முறை நீதிமன்ற அனுமதியுடன் அமெரிக்கா வந்தமையால் சட்ட நிபுணர்களின் ஆலோசனைக்கிணங்க, அவர்மீது வழக்குத் தாக்கல் செய்திருக்கின்றேன்.

தற்போது நான் தாக்கல் செய்துள்ள வழக்கு கோத்தபாயவுக்கு எதிரானது. நான் கைது செய்யப்பட்டபோது அவரே பாதுகாப்புச் செயலாளராக இருந்தார்.

நீதிமன்ற அனுமதியில் நான் கைது செய்யப்படவில்லை, கோட்டாவின் கட்டளைப்படிதான் நான் கைது செய்யப்பட்டேன்.

எனவே அவர்தான் பதில் சொல்லியாக வேண்டும். எங்களைச் சித்திரவதைக்குள்ளாக்கிவிட்டு தான் மட்டும் நிம்மதியாகச் சுற்றுலா வருவதை பக்கத்து நாடான கனடாவில் இருந்து கொண்டு நான் ஒருபோதும் பார்த்துக்கொண்டிருக்க மாட்டேன்.

இதேபோன்று அன்று கட்டளையிட்ட எவர் வந்தாலும் அவர் மீது வழக்குத் தொடுப்பேன் என குறிப்பிட்டுள்ளார்.