தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை எவ்வாறு ஆதரிப்பது? தமிழரசு கட்சி தலைவரிடம் கேள்வி

Report Print Nesan Nesan in அரசியல்

பிரச்சினைகளுக்கு தீர்வுகளை பெற்றுக்கொடுப்பதில் பின்வாங்கும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பை நாங்கள் எவ்வாறு ஆதரிப்பது என தமிழரசு கட்சி தலைவரிடம் சரமாரி கேள்விகளை சம்மாந்துறை தொகுதியின் கட்சி ஆதரவாளர்கள் முன்வைத்துள்ளனர்.

அம்பாறை - நாவிதன்வெளி பிரதேசத்தில் கட்சியின் மாநாடு தொடர்பாக தெளிவூட்டும் கலந்துரையாடல் சம்மாந்துறை தொகுதி தலைவர் தவராசா கலையரசன் தலைமையில் நேற்று முன்தினம் நாவிதன்வெளி பிரதேசசபை கூட்ட மண்டபத்தில் இடம்பெற்றுள்ளது.

இதன்போது கருத்து தெரிவிக்கும் போதே கட்சி ஆதரவாளர்கள் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளனர். அவர்கள் மேலும் கூறுகையில்,

சம்மாந்துறை தொகுதி மக்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகளுக்கு தலைமைகள் தீர்வை பெற்று கொடுக்க தவறியுள்ளனர். சம்மாந்துறை தொகுதியில் கடந்த மூன்று முறை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தேர்தல் வேட்புமனு நிராகரிக்கப்பட்டுள்ளது.

இதற்கு கட்சி தலைவர்களின் கவனயீமே காரணம். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் ஆதரவாளர்கள் ஏமாற்றப்பட்டுள்ளனர். மல்லிகைத்தீவு மக்களின் குடிநீர் பிரச்சினை காரணமாக இதுவரை நான்கு பேர் சிறுநீரக பிரச்சினையால் இறந்துள்ளதோடு 22 பேர் சிறுநீரக பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளனர்.

ஒன்றரை கிலோமீற்றர் தூரத்திற்கு குடிநீர் குழாய்களை பொருத்தி தரமுடியாதுள்ளதாக வருத்தத்தை தலைவருக்கு எடுத்தியம்பினர்.

முஸ்லிம் பிரதேசங்களில் உள்ள பிரதேசசபைகள் மாநகரசபைகளாக தரமுயர்த்தப்பட்டு தமிழ் பிரதேசங்களின் எல்லைகளில் உள்ள முஸ்லிம் கிராமங்களை உள்ளடக்கியதுமான புதிய பிரதேசசபைகளின் தோற்றத்தோடு சத்தமின்றி தமிழ் கிராமங்கள் ஆக்கிரமிக்கப்படுவதாக தெரியப்படுத்தப்பட்டதோடு கட்சியின் தலைவர்களோ, நாடாளுமன்ற உறுப்பினர்களோ மக்களின் குறைகளை வந்து கேட்டறிவதில்லை என கூறியுள்ளனர்.

மேலும், முஸ்லிம், சிங்கள பிரதேசங்களில் எல்லையிலுள்ள சம்மாந்துறை தொகுதி தமிழ் மக்கள் தேசிய கட்சிக்குள் இலகுவாக ஈர்க்கப்பட்டு வருகின்றனர். இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் எதிர்காலம் ஆட்டம் காணும் நிலையிலுள்ளது.

நாடாளுமன்றத்தில் கடந்த அமர்வுகளில் விவாத பொருளாக மாறிய கல்முனை வடக்கு தமிழ் பிரதேச செயலகம் தரமுயர்த்தி தரமுடியாமல் இருக்கும் தமிழ் தேசிய தலைமைகள் இன பிரச்சினைகளுக்கு எவ்வாறு தீர்வுகளை பெற்றுத்தர போகிறார்கள்.

அரசாங்கத்திற்கு கடந்த காலத்திலும், இப்பொழுதுவரை தோள் கொடுத்துவரும் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தேசிய பிரச்சினைகளுக்குதான் தீர்வினை பெறுவதில் இழுத்தடிப்புகளை செய்து வந்தாலும் கிழக்கு மக்களின் நில உரிமைகள் அதி வேகமாக ஆக்கிரமிக்கப்பட்டு வருவதை கண்டும்காணாமல் இருப்பதாக சுட்டிக்காட்டி உள்ளனர்.

அத்துடன் அரசுக்கு கொடுக்கும் ஆதரவில் நிபந்தனைகளை முன்வைத்து தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வை பெற்றுக்கொடுப்பதில் கூட்டமைப்பு தயக்கம் காட்டி வருவதாக அதிருப்தியை வெளியிட்டுள்ளனர்.