முப்பெரும் முக்கியஸ்தர்கள் தலைமையில் கொழும்பில் கூடுகிறது ஐ.தே.க?

Report Print Rakesh in அரசியல்

ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க, சபாநாயகர் கருஜயசூரிய, அமைச்சர் சஜித் பிரேமதாஸ ஆகியோர் தலைமையில் விரைவில் உயர்மட்ட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாக சிறிகொத்த வட்டார தகவல்கள் தெரிவிக்கின்றன.

இந்த உயர்மட்ட கூட்டமானது கொழும்பில் நடைபெறவுள்ளதாக அறியமுடிகின்றது என எமது செய்தியாளர் தெரிவித்தார்.

ஏப்ரல் 25ஆம் திகதிக்குள் குறித்த சந்திப்பு இடம்பெறலாம் என அந்த கட்சி உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஜனநாயக மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசன், ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன், தொழிலாளர் தேசிய சங்கத்தின் தலைவர் பழனி திகாம்பரம், ஜாதிக ஹெலஉறுமயவின் தலைவர் சம்பிக்க ரணவக்க, அமைச்சர்களான ராஜித சேனாரத்ன, அர்ஜூன ரணதுங்க, சரத் பொன்சேகா ஆகியோரும் மேற்படி சந்திப்பில் கலந்து கொள்வார்கள் என தெரியவருகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினராக இருக்கின்ற போதிலும், சபாநாயகராக பதவியேற்ற பின்னர் அந்த கட்சி சார்ந்த கூட்டங்களில் பங்கேற்பதை கரு ஜயசூரிய தவிர்த்து வந்தார்.

எனினும், குறித்த சந்திப்பு முக்கியத்துவம் வாய்ந்ததென்பதால் அவரை கட்டாயம் பங்கேற்குமாறு கோரப்பட்டுள்ளது எனவும் அறியமுடிகின்றது.

ஐக்கிய தேசியக் கட்சியும் அதனுடன் கூட்டணி வைத்துள்ள பங்காளிக் கட்சிகளும் இணைந்து தேசிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் புதிய அரசியல் கூட்டணியொன்றை உருவாக்கியுள்ளன.

இந்த கூட்டணிக்கும் ஐக்கிய தேசியக் கட்சியே தலைமை தாங்கும். இது குறித்தானஅறிவிப்பு மே முதலாம் திகதி உத்தியோகபூர்வமாக வெளியிடப்படவுள்ளது.

எனவே, இது குறித்தும் மே தினக் கூட்டம் சம்பந்தமாகவும் கலந்துரையாடி இறுதி முடிவெடுப்பதற்காகவே இந்த விசேட கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

அத்துடன், எதிர்காலத்தில் நடைபெறவுள்ள தேசிய மட்டத்திலான தேர்தல் தொடர்பான விசேட அறிவிப்பையும் மே தினத்தன்று ஐ.தே.க விடுக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஆகவேதான், முக்கிய அரசியல் புள்ளிகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. இந்த கூட்டம் முடிவடைந்த கையோடு ஐக்கிய தேசியக் கட்சியுடன் விசேட மத்திய செயற்குழு கூட்டமும் நடைபெறவுள்ளது.

Latest Offers