கிழக்குவாழ் வேலையற்ற பட்டதாரிகளின் கோரிக்கைகள் குறித்து கவனம் அவசியம்

Report Print Rakesh in அரசியல்

நாட்டின் இன்றைய அரசியல் சூழ்நிலையில் வெறுமனே உத்தரவாதங்களை மட்டும் வழங்குவதால் மக்களின் அபிலாஷைகளைப் பூர்த்தி செய்து விடமுடியாது.

கடந்த வருடம் தேசிய கொள்கைகள் அமைச்சு மூலம் 20 ஆயிரம் பட்டதாரிகளுக்கு நியமனங்கள் வழங்கப்படும் என வாக்குறுதிகள் வழங்கப்பட்டபோதும் எதுவும் நடைபெறவில்லை.

குறிப்பாக கிழக்குவாழ் வேலையற்ற பட்டதாரிகள் தம்மை மத்திய மாகாண அமைச்சுகளும் நிர்வாகங்களும் புறந்தள்ளுகின்றன என விசனம் தெரிவித்துவருவது கருத்தில்கொள்ளப்படவேண்டிய ஒன்று.

இவ்வாறு கிழக்கு மாகாண முன்னாள் முதலமைச்சரும் வடக்கு, கிழக்கு மாகாணங்களின் அபிவிருத்திக்கான ஜனாதிபதி செயலணியின் ஆலோசகருமான நஸீர் அஹமட் தெரிவித்தார்.

இது குறித்து தமிழ் வார இதழ் ஒன்றிடம் அவர் மேலும் கூறியதாவது:-

வரவு - செலவுத் திட்டம் நிறைவேற்றப்பட்ட நிலையில் அரசோ, அதற்கு ஆதரவளித்தவர்களோ பட்டதாரிகளின் தொழில்வாய்ப்பில் கவனம் செலுத்தவில்லை எனவும், பட்டதாரிகளின் தொழில் விடயத்தில் எந்தவித நிதியும் ஒதுக்கப்படவில்லை எனவும் கிழக்குவாழ் வேலையற்ற பட்டதாரிகளினால் விசனங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

மேலும், ஏனைய மாகாணங்களில் ஆட்சேர்ப்பு செய்யும் வயதெல்லை 45 வயது என சுற்றுநிரூபம் வெளியிடப்படுகின்றது.

ஆனால், கிழக்கில் மட்டும் வயதெல்லை 40 ஆக மட்டுப்படுத்தப்பட்டுள்ளது எனவும் சுட்டிக்காட்டப்படுகின்றது. இந்த விடயத்தில் கவனம்கொள்ள வேண்டியது தற்போதைய ஆளுநர் உள்ளிட்ட அரசின் கடமையாகும்.

இதுமட்டுமின்றி நான் முதலமைச்சராக பதவி வகித்த காலத்தில் பயிற்சி அடிப்படையில் இரண்டு ஆண்டுகளுக்குப் பட்டதாரிகளை இணைத்துக்கொள்ளுமாறு கேட்கப்பட்ட கோரிக்கை நிராகரிக்கப்பட்டது எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அன்றைய கால கட்டத்தில் அரசால் அனுப்பப்பட்ட சுற்றுநிஷரூப உத்தரவுக்கு அமையவே இந்தப் பதில் எம்மால் அப்போது வழங்கப்பட்டது.

எனினும், இந்த விடயத்தில் நாம் அரசின் உயர் தலைமைகளுடன் பல்வேறு அழுத்தங்களை வழங்கி இது குறித்து நடவடிக்கை எடுத்து வந்தோம். அவற்றைக் கொள்கையளவில் அரசு ஏற்றுகொண்ட நிலையிலேயே மாகாண சபை கலைக்கப்பட்டமை கருத்தில்கொள்ளப்பட வேண்டும்.

எம்மால் அன்று வழங்கப்பட்ட அழுத்தங்களின் பின்புலத்திலேயே தற்போது ஆளுநர் பயிலுநர்களுக்கான விண்ணப்பங்களைக் கோரியுள்ளார் என்பதும் முக்கியமானது.

கிழக்குவாழ் வேலையில்லாப் பட்டதாரிகள் தொடர்பில் நான் தொடர்ந்தும் எனது அவதானங்களைச் செலுத்தி இதற்கான தீர்வைப்பெற முயன்று வருகின்றேன் என்பதைஇவ்வேளையில் உறுதிபடத் தெரிவித்துக்கொள்ள விரும்புகின்றேன் என குறிப்பிட்டுள்ளார்.

Latest Offers