வடக்கு ஆளுநரும் படைக்குறைப்பும்

Report Print Gokulan Gokulan in அரசியல்

வடக்கு மாகாண ஆளுனரான சுரேன் ராகவன் கடந்த வாரம் ஒரு ஆங்கில வார இதழுக்கு அளித்திருந்த செவ்வியில், வடக்கில் படைக்குறைப்பை மேற்கொள்ள வேண்டும் என்ற கோரிக்கைக்கு ஆதரவாக கருத்து வெளியிட்டிருக்கிறார்.

போர் முடிவுக்கு வந்த பின்னரும் வடக்கில் அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ளதாக கேள்விகள் எழுப்பப்படுவதாக சுட்டிக்காட்டியுள்ள அவர், இந்தப் படைக்குறைப்பு விவகாரத்தில் கொழும்பில் உள்ள அரசியல் தலைமையே முடிவு ஒன்றை எடுக்க வேண்டும் என்றும், கூறியிருக்கிறார்.

வடக்கில் எந்த பாதுகாப்பு அச்சுறுத்தலும் கிடையாது. ஆவா குழுவின் அச்சுறுத்தலும் அடக்கப்பட்டு விட்ட நிலையில், படைக்குறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டிய ஒன்று தான் என்ற தொனியில் அவர் கருத்து வெளியிட்டிருக்கிறார்.

இந்தச் செவ்வி வெளியாவதற்கு இரண்டு வாரங்களுக்கு முன்னதாக, மார்ச் 25ஆம் திகதி கொழும்பில் ஒரு செய்தியாளர் சந்திப்பை நடத்தியிருந்தார் வடக்கு மாகாண ஆளுநர்.

ஜெனீவாவில் நடந்த ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 40ஆவது கூட்டத்தொடரில், ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவின் பிரதிநிதியாக, பங்கேற்று விட்டு திரும்பிய உடன் அவர் அந்த ஊடகச் சந்திப்பை நடத்தியிருந்தார்,

அங்கு அவர் வெளியிட்டிருந்த கருத்துக்கள் பலத்த சர்ச்சைகளை ஏற்படுத்திருந்தன. ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பணியகத்தின் அறிக்கையைக் காட்டமாக விமர்சித்தும், மறுத்தும் அவர் அதில் கருத்துக்களை வெளியிட்டிருந்தார்.

இணையத்தளங்களில் வெளியாகிய தகவல்களின் அடிப்படையில் தயாரிக்கப்பட்ட அறிக்கை என்றும் அவர் அதில் கூறியிருந்தார்.

அதைவிட அந்த அறிக்கையின் தவறுகளை, தாம் சுட்டிக்காட்டிய போது, ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பச்லெட் அம்மையார் அவற்றை ஒப்புக்கொண்டார் என்றும், அதற்கான சந்திப்பில் பங்கேற்றிருந்த அதிகாரிகள் இருவரை கடிந்து கொண்டார் என்றும் ராகவன் கூறியிருந்தார். உடனடியாகவே அதற்கு ஐ.நா மனித உரிமை ஆணையாளர் பச்லெட் அம்மையாளர் மறுப்பு அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.

தாம் அப்படி கூறவில்லை என்றும், இலங்கை அரசின் பிரதிநிதியான வடக்கு ஆளுநர் தவறாக கூறியிருக்கிறார் அல்லது விளங்கிக் கொண்டிருக்கிறார் என்றும் அவர் அறிக்கை வெளியிட, வழக்கம்போலவே ஊடகங்கள் தமது கருத்தை திரிபுபடுத்தி விட்டன என்று கூறி தப்பிக் கொண்டார் சுரேன் ராகவன்.

அந்த செய்தியாளர் சந்திப்பில் தான், வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன் படைக்குறைப்பு குறித்த ஒரு கருத்தை வெளியிட்டிருந்தார். வடக்கு, கிழக்கில் அதிகளவு இராணுவப் பிரசன்னம் குறித்து ஐ.நா மனித உரிமை ஆணையாளரின் அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டிருந்தது. அதற்கு பதிலளிக்கும் வகையில் தான், அவர் அந்தக் கருத்தை வெளியிட்டிருந்தார்.

"வடக்கு, கிழக்கில் அதிகளவு நிலப்பரப்பு இருக்கிறது. எனவே, அங்கு இராணுவ முகாம்களும் அதிகமாக இருக்கின்றன” என்று சாதாரணமாக அவர் கூறியிருந்தார்.

வடக்கு, கிழக்கில் அதிகளவு இராணுவத்தினர் நிலை கொண்டிருப்பதையும், அதிகளவு முகாம்கள் இருப்பதையும் நியாயப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது அவரது கருத்து.

பொய்யை சொன்னாலும் பொருந்தச் சொல்ல வேண்டும் என்பது பழமொழி. வடக்கு, கிழக்கு மாகாணங்களிலேயே அதிகளவு நிலப்பரப்பு உள்ளது என்பது அப்பட்டமான பொய். ஏனென்றால் இலங்கையிலேயே பரப்பளவில் பெரிய மாகாணம் வட மத்திய மாகாணம் தான். அது 10,472 சதுர கி,மீ பரப்பளவுடையது. அதற்கடுத்தது தான், கிழக்கு மாகாணம், (9,996 சதுர கி.மீ).

மூன்றாவது பெரிய மாகாணமாக இருப்பது தான் வடக்கு மாகாணம் (8,884 சதுர கி,மீ). நான்காவது இடத்தில் இருப்பது, ஊவா மாகாணம் (8,500 சதுர கி,மீ). ஐந்தாமிடத்தில், வடமேல் மாகாணம் (7,888 சதுர கி,மீ) இருக்கிறது.

அதற்கடுத்த இடங்களில், மத்திய மாகாணம், தென் மாகாணம், சப்ரகமுவ மாகாணம், மேல் மாகாணம் என்று இருக்கின்றது.

இந்த நிலையில், வடக்கிலும் கிழக்கிலும் தான் அதிக நிலப்பரப்பு காணப்படுவதால் அங்கு அதிக முகாம்கள் இருக்கின்றன என்ற வாதம் எந்த அடிப்படையிலும் பொருத்தமுடையதல்ல.

இரண்டாவது மூன்றாவது பெரிய மாகாணங்களாக இவை இருந்தபோதும், அவற்றுக்கு ஈடாக, முதலாவது பெரிய மாகாணமும், நான்காவது இடத்தில் உள்ள மாகாணமும் இராணுவ மயப்படுத்தப்பட்டுள்ளதா என்ற கேள்வி உள்ளது.

மூன்றாமிடத்தில் உள்ள வடக்கை விட சற்றே நிலப்பரப்பில் குறைந்த நான்காவது இடத்தில் உள்ள ஊவா மாகாணம் வடக்குடன் எந்த வகையில் இணையான இராணுவ மையப்படுத்தலைக் கொண்டிருக்கிறது?

இலங்கையில் அதிகளவு இராணுவ மையப்படுத்தப்பட்டுள்ள, அதிகளவு படையினர் நிறுத்தப்பட்டுள்ள மாகாணம் வடக்கு தான். போர் முடிந்து 10 ஆண்டுகள் ஆகியும் படைக்குறைப்பு என்பது வடக்கில் வெறும் சம்பிரதாய ரீதியானதாக முன்னெடுக்கப்பட்டுள்ளதே தவிர, செயற்பாட்டு ரீதியானதாக இருக்கவில்லை.

உதாரணத்துக்கு, இலங்கை இராணுவம் ஏழு களத் தலைமையகங்களைக் கொண்டிருக்கின்றது. அதில், நான்கு தலையமையகங்கள் வடக்கில் தான் இருக்கின்றன.

யாழ்ப்பாணம், கிளிநொச்சி, முல்லைத்தீவு, வன்னி படைத் தலைமையகங்களே அவை. இது தவிர கிழக்குப் படைத் தலைமையகம் ஒன்று இருக்கின்றது. இதையும் சேர்த்தால் வடக்கு, கிழக்கு மாகாணங்களில் மொத்தம் ஐந்து படைத் தலைமையகங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

ஆனால் நாட்டின் ஏனைய பகுதிகளில் மேற்கு படைகளின் தலைமையகம், மத்திய படைகளின் தலைமையகம் என, வெறும் இரண்டே இரண்டு படைத் தலைமையகங்கள் தான் உள்ளன.

நாட்டின் மொத்த நிலப்பரப்பில் கிழக்கு மாகாணம் வெறும், 15 சதவீத நிலத்தைத் தான் கொண்டிருக்கிறது. இங்கு ஒரு படைத் தலைமையகம் இருக்கிறது. வடக்கு மாகாணம் வெறும் 13.5 சதவீத நிலப்பரப்பைத் தான் கொண்டிருக்கிறது. எனினும் இங்கு 4 படைத் தலைமையககங்கள் இருக்கின்றன.

இவைபோக எஞ்சிய 7 மாகாணங்களிலும், 71.5 வீத நிலப்பரப்புகள் இருந்த போதும், இராணுவத்தின் இரண்டே இரண்டு களத் தலைமையகங்கள் தான் நிறுவப்பட்டிருக்கின்றன.

இந்த ஒரு விடயத்தின் ஊடாகவே, வடக்கு ஆளுநர் குறிப்பிட்ட நிலப்பரப்புக்கும் இராணுவ நிலை நிறுத்தலுக்கும் எந்த தொடர்பும் இல்லை என்பதை உணரலாம்.

வடக்கை இராணுவ மயப்படுத்தி வைத்திருப்பது ஒரு அரசியல், இராணுவ நிகழ்ச்சி நிரலாக இருக்கின்றது. ஐ.நா என்ன, அமெரிக்கா என்ன எவர் கூறினாலும் வடக்கின் மீதான இராணுவ மயப்படுத்தலை நீக்குகின்ற நிலையில் அரசாங்கம் இல்லை.

அதனால் தான் வடக்கு ஆளுநர் சுரேன் ராகவன், வடக்கில் படைக்குறைப்பு பற்றி கொழும்பு தலைமை தான் அரசியல் முடிவை எடுக்க வேண்டும் என்று கூறியிருக்கிறார்.

அதெல்லாம் ஒரு பக்கத்தில் இருக்க, கொழும்பில் செய்தியாளர்களிடம் பேசியது போது, வடக்கு, கிழக்கில், படைமுகாம்களின் இருப்பு தொடர்பாக ஒரு கருத்தை வெளியிட்ட அவரே, இரண்டு வாரங்கள் கழித்து, வடக்கில் படைகுறைப்பு மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற கருத்தை முன்வைத்திருக்கிறார்.

இது வடக்கின் ஆளுநர் தெளிவானதொரு நிலைப்பாட்டில் தானா கருத்துக்களை வெளியிடுகிறார் என்ற சந்தேகத்தை ஏற்படுத்துகின்றது.

அவர் ஏற்கனவே பல்வேறு விடயங்களில் இப்படித்தான் முன்னுக்கு பின் முரணாக கருத்துக்களை வெளியிட்டு வந்திருக்கிறார்.

வடக்கு இராணுவ மயப்படுத்தல் என்பது ஒரு அரசியல் இராணுவ நிகழ்ச்சி நிரல். அதனை நிலப்பரப்புடன் ஒப்பிட்டு நியாயப்படுத்திய போதே, இந்த விடயத்தில் அவரது ஆளுமை பற்றிய கேள்வியையும் எழுப்பியிருந்தது.

ஒரு நாட்டின் இராணுவ நிலைப்படுத்தல் என்பது, வெறுமனே நிலப்பரப்பினை அடிப்படையாக கொண்டது அல்ல. அது பாதுகாப்புச் சூழல், அந்த இடத்தில் கேந்திர முக்கியத்துவம் என்பனவற்றையும் அடிப்படையாக கொண்டது.

நிலப்பரப்பை மையப்படுத்தியே படைகளை நிறுத்துவதென்ற ஒரு மூலோபாயத்தை கடைப்பிடித்தால், அமெரிக்கா போன்ற பல நாடுகள் வெறும் பாலை நிலங்களில் தான் அதிகளவு படையினரை நிறுத்தி வைத்திருக்க வேண்டியிருந்திருக்கும்.

ஆனால் இராணுவ மூலோபாயத்தில் கேந்திர முக்கியத்துவமும், பாதுகாப்பு முக்கியத்துவமுமே கவனத்தில் எடுத்துக் கொள்ளப்படும். வடக்கு, கிழக்கும் கேந்திர முக்கியத்துவம் வாய்ந்த இடங்கள், பாதுகாப்பு முக்கியத்துவம் கொண்ட இடங்கள் என்ற நியாயப்படுத்தல் சரியானது. ஆனால் அது இப்போது அல்ல.

போர் முடிந்து 10 ஆண்டுகளாகி விட்டன. இப்போது பாதுகாப்புக்கு எந்த அச்சுறுத்தலும் கிடையாது என்று படைத்தளபதிகளும் கூறுகின்றார்கள். வடக்கின் ஆளுநரும் கூறுகிறார்.

அவ்வாறாயின், நிலப்பரப்பு என்ற அடிப்படையிலும் சரி, பாதுகாப்பு மற்றும் கேந்திர முக்கியத்துவம் என்ற அடிப்படையிலும் சரி வடக்கிலும் கிழக்கிலும் படைகள் அதிகளவில் நிறுத்தப்பட்டுள்ளதை எந்த வகையிலும் நியாயப்படுத்த முடியாது. ஆயினும், அதிகளவு படையினர் வடக்கில் குவிக்கப்பட்டிருப்பதன் மர்மம் என்னவென்று யாராலும் புரிந்து கொள்ள முடியாத ஒன்றல்லவே.

Latest Offers