அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் மாறி மாறி சுற்றுலா! மக்கள் முன்னிலையில் கோத்தபாயவின் செயல்

Report Print Rakesh in அரசியல்

கோத்தபாய ராஜபக்சவின் போர்க்குற்றங்களையும், மனித உரிமை மீறல்களையும் மூடி மறைக்க முற்படுவது வெட்கக்கேடான செயலாகும் என முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்கா பண்டாரநாயக்க தெரிவித்துள்ளார்.

அத்துடன் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் போர்க்குற்றங்களில் ஈடுபட்டவர்கள் போட்டியிடுவதற்கு நாட்டில் உள்ள அமைப்புக்களோ, சர்வதேச அமைப்புக்களோ ஒருபோதும் இடமளிக்காது எனவும் குறிப்பிட்டுள்ளார்.

சர்வதேச ஊடகமொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் மேற்படி விடயத்தை தெரிவித்துள்ளார். மேலும் கூறுகையில்,

"ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாக இன்னமும் உத்தியோகபூர்வமான அறிவிப்பு வெளியாகவில்லை. அதற்கிடையே மஹிந்த அணியினரும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியை நாசமாக்கியவர்களும் ஜனாதிபதித் தேர்தல் தொடர்பாகக் கொக்கரிக்கத் தொடங்கிவிட்டனர்.

முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்சவின் மீது உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் போர் விதி மீறல்கள் தொடர்பாகவும், மனித உரிமை மீறல்கள் தொடர்பாகவும் பல குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.

சிறையில் இருக்க வேண்டிய கோத்தபாய ராஜபக்ச இரட்டைக் குடியுரிமை என்ற கவசத்தை அணிந்து கொண்டு அமெரிக்காவுக்கும், இலங்கைக்கும் மாறி மாறிச் சுற்றுலா செல்கின்றார்.

அண்மையில் அவருக்கு எதிராக அமெரிக்காவில் இரு பாரதூரமான வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டுள்ளன. இலங்கைக்குத் திரும்பி வந்துள்ள அவர் நாட்டு மக்கள் முன்னிலையில் நல்ல பிள்ளையாக நடிக்க முயல்கின்றார்.

இரட்டைக் குடியுரிமையுடன், போர்க் குற்றச்சாட்டுக்கு உள்ளாகியுள்ள கோத்தபாய, ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட எமது நாட்டுச் சட்டமும், நாமும் ஒரு போதும் அனுமதிக்க மாட்டோம். இதை அவர் கவனத்தில் கொள்ள வேண்டும்" என வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers