ராஜபக்ச குடும்பம் ஆட்சிக்கு வந்தால்..? சூன்யமாகும் இருபது வருடங்கள்

Report Print Jeslin Jeslin in அரசியல்

இலங்கை தலைவர்கள் எவரும் தாங்கள் செய்த குற்றங்களை எந்த வேளையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவும் ராஜபக்ச குடும்பத்தினரிடம் அதனை துளியளவேனும் எதிர்பார்க்க முடியாது என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறீதரன் தெரிவித்துள்ளார்.

நேர்காணல் ஒன்றில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச மீது அமெரிக்காவில் தாக்கல் செய்யப்பட்டுள்ள இரண்டு வழக்குகள் தொடர்பில் தமது நிலைப்பாடு குறித்து தொடர்ந்தும் கருத்துத் தெரிவிக்கையில்,

கோத்தபாய மீது அந்த நாட்டு சட்டத்திட்டத்துக்கு ஏற்ப வழக்குத் தாக்கல் செய்யப்பட்டிருக்கின்றது. மனித குலத்துக்கு எதிரான குற்றத்தில் ஒருவர் ஈடுபட்டிருந்தால் அவரை தண்டிப்பதற்கான உரிமை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் ஆணைக்குழு, சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்திற்கு இருக்கின்றது.

அந்த அடிப்படையில் மிகப்பெரிய இன அழிப்புக்கு காரணமாக இருந்த கோத்தபாய ராஜபக்சவை இந்த வழக்குகளின் அடிப்படையில் விசாரிப்பது கட்டாயமாகும்.

இலங்கை தலைவர்கள் எவரும் தாங்கள் செய்த குற்றங்களை எந்த வேளையிலும் ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். அதுவும் ராஜபக்ச குடும்பத்திடம் அதனை துளியளவேனும் எதிர்பார்க்க முடியாது.

மீண்டும் இந்த நாடு ராஜபக்ச குடும்பத்திடம் செல்லுமாகவிருந்தால் இன்னும் 20 வருடங்களுக்கு இந்த நாடு இருண்ட யுகத்திலேயே இருக்கும்.

அந்த அடிப்படையில் ஜனநாயகம் தெரியாத ராஜபக்ச குடும்பம் மீண்டும் ஆட்சிக்கு வருவதை இந்த நாட்டில் வாழ்கின்ற தமிழ் மக்கள் எவரும் விரும்பவில்லை என குறிப்பிடுள்ளார்.