முன்னாள் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ச போட்டியிடும் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட வேட்பாளர் ஒருவரை நிறுத்துமாறு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன, தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது.
அமெரிக்காவில் இருந்து இலங்கை திரும்பிய கோத்தபாய ராஜபக்சவை வரவேற்பதற்காக கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு சென்றிருந்த பிரசன்ன ரணதுங்க இதனைத் தெரிவித்துள்ளார்.
தற்போதும் அமெரிக்க பிரஜையாக இருக்கும் கோத்தபாய ராஜபக்ச, அவரது சகோதரரான முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் முழுமையான ஆசியுடன் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவார் எனவும் அவர் கூறியுள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கட்டாயம் தமிழ் மக்கள் சார்பில் வேட்பாளர் ஒருவரை ஜனாதிபதித் தேர்தலில் நிறுத்த வேண்டும். தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிடுவதன் மூலம் ஐக்கிய தேசியக் கட்சிக்கு தமிழ் மக்களின் வாக்குகளை தடுக்க முடியும்.
அவ்வாறு செய்யாவிட்டால், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தனது கட்சியை ஐக்கிய தேசியக் கட்சியிடம் காட்டிக்கொடுத்தாகி விடும் எனவும் பிரசன்ன ரணதுங்க குறிப்பிட்டுள்ளார்.
எது எப்படி இருந்த போதிலும் ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னர் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கூடி கலந்துரையாடி தீர்மானம் ஒன்றை எடுக்கும் என நாடாளுமன்ற உறுப்பினர் மாவை சேனாதிராஜா தெரிவிததுள்ளார்.
கடந்த 2015 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் மற்றும் முஸ்லிம் மக்களின் வாக்குகளே மைத்திரிபால சிறிசேன, ஜனாதிபதியாக பதவிக்கு வர காரணமாக அமைந்தது.
இந்த நிலையில், பிரசன்ன ரணதுங்கவின் அழைப்புக்கு நேரடியாக பதிலளிப்பதை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தவிர்த்துள்ளது.