எனது நண்பரின் தோல்விக்கு காரணமாக இருந்தவரை எப்படி களமிறக்க முடியும்?

Report Print Rakesh in அரசியல்

கோத்தபாய ராஜபக்‌ஷவை முன்னாள் பாதுகாப்பு செயலாளர் என்று கூறுவதற்கு வெட்கப்படுவதாக ஜனாதிபதி மஹிந்த ராஜபக்‌ஷவின் நெருங்கிய சகாவான - ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் குமார வெல்கம தெரிவித்துள்ளார்.

அத்துடன் அவர் ஒரு போர்க்குற்றவாளி எனவும், அவரை ஜனாதிபதி தேர்தலில் வேட்பாளராக களமிறக்க மஹிந்த ராஜபக்‌ஷ விரும்பமாட்டார் எனவும் கூறியுள்ளார்.

பத்திரிகையொன்றுக்கு வழங்கிய விசேட செவ்வியில் அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில்,

இரத்த உடை அணிந்துள்ள ஒருவர் ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க முடியாது. தேசிய உடை அணிந்து வெற்றி பெற கூடிய ஒருவரே ஜனாதிபதி வேட்பாளராக களமிறங்க வேண்டும்.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் மஹிந்த ராஜபக்‌ஷ தோல்வியடைய கோத்தபாய ராஜபக்‌ஷவே பிரதான காரணம்.

எனவே, எனது நண்பர் மஹிந்தவின் தோல்விக்கு காரணமாக இருந்தவரை வேட்பாளராக எப்படி களமிறக்க முடியும்?

தமிழ், முஸ்லிம் மக்களின் கண்களில் கோத்தபாயவை காட்டவே கூடாது. அவர் மீது அப்படி கோபத்தில் அம்மக்கள் இருக்கின்றார்கள்.

அந்த மக்களை கடத்திப்படு கொலை செய்தமை மட்டுமன்றி அவர்களின் சொத்துக்களையும் கோத்தபாய அழித்துள்ளார்.

மஹிந்தவின் ஆட்சியில் முஸ்லிம் மக்களின் பள்ளிவாசல்கள் மர்மக்குழுவினரால் தாக்கப்படுவதற்கு கோத்தபாய ஒத்துழைப்பு வழங்கியுள்ளார்.

சிங்கள மக்கள் மத்தியிலும் கோத்தபாயவுக்கு எதிரான கருத்துக்கள் உள்ளன. ராஜபக்‌ஷ குடும்பத்தில் நல்லவர்கள் உள்ளனர்.

ஆனால், கோத்தபாய மாதிரி ஒரு தீயவர் அந்த குடும்பத்தில் இருப்பதால் அந்த குடும்பத்துக்கு எதிராக ஒரு கறுத்த புள்ளி குத்தப்பட்டுள்ளது.

இதை மஹிந்த ராஜபக்‌ஷ களைந்தெடுக்க வேண்டும். நல்லதொரு வேட்பாளரை ஜனாதிபதி தேர்தலில் களமிறக்க வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

Latest Offers