இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது: மனோ கணேசன்

Report Print Malar in அரசியல்

கல்முனை வடக்கு பிரதேச செயலக பிரச்சினையினால் கிழக்கு மாகாணத்தில் தமிழ், முஸ்லிம் மக்கள் மத்தியில் இன நல்லுறவு சீர்கெடுவதை இனியும் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்க முடியாது என மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.

இன்று காலை நாடு திரும்பியுள்ள மனோ கணேசன், கல்முனை வடக்கு பிரதேச செயலக விவகாரம் தொடர்பில் கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

தொடர்ந்தும் அவர் தெரிவிக்கையில்,

இது தொடர்பில் கிழக்கு மாகாணத்தை சேர்ந்த தமிழ், முஸ்லிம் தரப்பினர் என்னை சந்தித்து உரையாடியுள்ளனர்.

இதையடுத்து இப்பிரச்சினை தொடர்பில், துறைசார் அமைச்சர் வஜிர அபேவர்தனவுடனும் நான் தேசிய ஒருமைப்பாட்டு துறைசார் அமைச்சர் என்ற முறையில் கலந்தாலோசித்துள்ளேன். சற்று முன்னரும் இது தொடர்பில் அமைச்சர் வஜிரவுடன் உரையாடினேன்.

இதை இனியும் தொடர்ந்து நீடிக்க விடுவது நாட்டின் தேசிய ஒருமைப்பாட்டுக்கு குந்தகமாக அமைந்துவிடும் எனவும், புத்தாண்டு விடுமுறையை அடுத்து இது தொடர்பில் நடவடிக்கை எடுக்க வேண்டுமெனவும் நாம் தீர்மானித்துள்ளோம்.

இன, மத அடிப்படைகளில் கல்வி வலய, பிரதேச செயலக, உள்ளூராட்சி மன்ற எல்லைகளை நிர்ணயிப்பது தொடர்பில் மாறுபட்ட கருத்துக்கள் இருந்தாலும் இன்று வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல்வேறு மாவட்டங்களில் இவை நடைமுறையில் இருக்கின்றன.

எனவே கல்முனை வடக்கு தமிழ் மக்கள் தொடர்பில் மாத்திரம், இதில் தவறு காண்பது முறையல்ல. அத்துடன் ஏற்கனவே இயங்கி வரும் உப பிரதேச செயலகத்தையே முழு பிரதேச செயலகமாக தரமுயர்த்தும்படியே கோரிக்கை முன்னெடுக்கப்படுகின்றது.

எனவே கல்முனை உப பிரதேச செயலகம், முழுமையான பிரதேச செயலகமாக தரமுயர வேண்டும் என்ற கோரிக்கையில் என்ன தவறு இருக்கின்றது என இந்த கல்முனை வடக்கு தமிழர்களின் போராட்டத்தை எதிர்க்கும் அரசியல்வாதிகள் நாட்டுக்கு இதுவரையில் தர்க்கரீதியாக எடுத்து கூற தவறியுள்ளார்கள் என நான் நினைக்கிறன்.

உண்மையிலேயே கடந்த பல பத்தாண்டு காலங்களாக எறிந்து வரும் இந்த பிரச்சினை தொடர்பில், நடந்து முடிந்த மாகாணசபை ஆட்சிக்காலத்தின் போது, கிழக்கு மாகாணத்தில் கூட்டாக ஆட்சி நடத்திய தமிழ் தேசிய கூட்டமைப்பு ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டாட்சி நிர்வாகம் தலையிட்டு சுமூகமான ஒரு தீர்வை கண்டிருக்க வேண்டும். அது நடைபெறவில்லை என்பது துரதிஷ்டவசமானது ஆகும்.

இன்று தமிழ் பேசும் இனத்தவர் மத்தியில் கிழக்கில் இந்த பிரச்சினை மெல்ல, மெல்ல பூதாகரமாகி கொண்டு வருகிறது.

கண்ணிருந்தும், காதிருந்தும், அறிவிருந்தும், இதை பார்க்காமல், கேட்காமல், ஆராயாமல் பொறுப்பற்று நாம் இனியும் இருக்க முடியாது.

மேலும் இனங்களிடையே சச்சரவு புள்ளிகளை அடையாளம் கண்டு நிவர்த்திக்கும், தேசிய ஒருமைபாட்டையும், ஏனைய பொறுப்புகளுக்கு மத்தியில், ஒரு பொறுப்பாக வரித்துக் கொண்டுள்ள துறை சார் அமைச்சரான எனக்கு இந்த பிரச்சினை பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.

Latest Offers